விவசாய மசோதாக்கள்: கடும் அமளிக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

விவசாய மசோதாக்கள்: கடும் அமளிக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் மத்தியில், விவசாயிகளின் வாழ்வை முன்னேற்ற மத்திய அரசு இரண்டு முக்கிய சீர்திருத்தங்களை இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான 3 மசோதாக்கள் அண்மையில் மக்களவையில் நிறை வேற்றப் பட்டன. அதாவது, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மசோதாக்களுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று 2 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சூழலில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதனால் கோபடைந்த எதிர்க்கட்சிகள், இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என அமளியில் ஈடுபட்டனர். எம்.பிக்களின் கூச்சல் குழப்பம் காரணமாக அவை பரபரப்பாக காணப்பட்டது. ஒரு கட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், சபா நாயகரின் இருக்கைக்கு அருகில் சென்று வேளாண் மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார்.

தொடர்ந்து, வேளாண் மசோதா நிறைவேற்றக்கூடாது என்றும் அவர் கூச்சலிட்டார். இந்த அமளியில் சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. எனினும் இவை எல்லாவற்றையும் கடந்து கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

Related Posts

error: Content is protected !!