டாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..!

டாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..!

நாட்ல எது நடந்தாலும் சரி, உடனே டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடணும்.. ஒரே வரியில இந்த அறிவாளிங்க ஒரே போடா போட்டுட்டு போயிடுவாங்க.. மது உடல் நலத்திற்கும், சமூகத்துக்கும் கேடு என்பது அப்பட்டமான உண்மை. அதை சொல்லாத வாயே உலகத்தில் கிடையாது.. ஆனா பாருங்க, மது என்னமோ இன்னைக்குத்தான் புதுசா முளைச்சி பிரச்சினை மாதிரியே பேசி கிட்டிருப்பாங்க.. இதே மேதைகள் கும்பல்ல ஒரு கிளை கும்பல், இலக்கியத்தில் ‘’மது உண்ட…” அப்படின்னு மேடைகளிலும் தொலைக்காட்சி பட்டிமன்றங்களிலும் இஷ்டத்திற்கும் வர்ணனை களை விவரிச்சிட்டு கைத்தட்டல் வாங்குவாங்க..!

தேக்கள், தேறல், நறவு தோப்பி, கள், மட்டு, பூக்கமழ்தேறல்…இதுமட்டுமல்ல, இன்னும் ஏகப்பட்ட பேர்ல மதுவுக்கு பெயர்கள் இருக்கு. அதை எப்படி தயாரிக்கணும்னும் தமிழ் சங்க இலக்கியங் களில் புட்டு புட்டு வெச்சிருக்காங்க.. மனிதன் தோன்றிய கொஞ்ச காலத்திலேயே அவனிடம் வந்து சேர்ந்த விஷயங்கள் பலப்பல. முறையற்ற காமம், கள்ளக்காதல் பொய், திருட்டு, கொலை, கொள்ளை, நம்பிக்கை மோசடி போன்றவற்றின் பட்டியலில் மிக முக்கியமாக மதுவும் அடக்கம். ஆண்களோடு பெண்களும் சேர்ந்து குடித்திருக்கிறார்கள், குடிக்கிறார்கள், நாளையும் குடிப் பார்கள். அப்படியெல்லாம் நடக்காது என்று ஒருத்தன் சொல்றான்னா, அவன் வீம்புக்கு புளுகுறான்னு அர்த்தம் அவ்ளோதான்.

உண்மை, சத்தியம் போன்றவற்றை சுற்றி நிகழும் மேற்படி விஷயங்கள் இல்லாவிட்டால் இந்த உலகமே இயங்காது. குற்றங்களே நடக்காது என்றால் வீடுகளுக்கு கதவு எதற்கு, பூட்டு எதற்கு, சட்டம் எதற்கு, காவல்துறை எதற்கு, நீதிமன்றங்கள் எதற்கு? எல்லாவற்றையும்விட மீடியாக்களோ, பத்திரிகளைகளோகூட வாழமுடியாதே? அப்படிபட்ட நிலையில், மது அருந்துபவர்களை மட்டும் சர்வ சாதாரமான நக்கலடிக்கிற முடிகிறது இந்த சமுதாயத்தால்.. அரசாங்கம் மதுக்கடைகளை திறந்தால் குடிக்க வேண்டுமாம். மூடினால் அப்படியே போய்விடவேண்டுமாம்.

இதை அழுத்தமாக யாரெல்லாம் சொல்கிறார்கள் என்று பார்த்தால்,, காலையில் பில்டர் காபி குடிக்கா விட்டாலும் குறிப்பிட்ட நாளிதழை படிக்காவிட்டாலும் உயிரே போய்விடும் என்றும் கழிவறைக்கே செல்லமுடியாது என்றும் பேசுகிறவர்கள். இது, பெருமை வெறி. பத்து பர்சென்ட் கூட நிஜமில்லாத காட்சிகளை கொண்ட மாஸ் ஹீரோவின் புதிய படத்திற்கு முதல்நாள் முதல் காட்சி பார்க்காவிட்டால் தலையே வெடித்துவிடும், கைகாலெல்லாம் உதறல் எடுக்கும். இது சினிமா வெறி கும்பல்.

அவ்வளவு ஏன், கொரோனா ஊரடங்கு காலத்திலும் ஆட்டுக்கறி சாப்பிடாவிட்டால் வம்சமே அழிந்துவிடுமா?.. இது நாக்கு ருசி வெறி. தொடர்ந்து மது அருந்துபவன் தனக்கு மட்டும் இவ்வளவு பெரிய இடைவெளி ஏன் என்று கேட்டால் அது உடனே குடி வெறியாகிவிடுகிறது. எந்த ஊர் நியாயம்டா சாமி இது? எதற்கு எதையோடு முடிச்சிபோட்டு கேட்பது என்று கேள்விகள் வரலாம். அவனவன் தேவைக்கு, பழகிப்போன விஷயத்திற்கு எது எதுவோ அதுதான் அவனுக்கு முக்கியமான விஷயம்.

ஒருத்தனுக்கு கிரிக்கெட் பார்க்கலைன்னா பைத்தியம் புடிக்கும். ஒருத்தனுக்கு பைக்கோ, புல்லட்டையோ புடுங்கி வெச்சிகிட்டா பைத்தியம் புடிச்சிக்கும், ஆண்ட்ராய்ட் செல்லை பிடுங்கிட்டு, வெறுமனோ பேசுகிற வசதி உள்ள போனை மட்டும் ஒரு வாரம் கொடுத்து பாருங்கள். எத்தனை பேருக்கு வெறி பிடிக்கிறது என்று பார்ப்போம். பச்சரி சாப்பிட்டே பழக்கப்பட்டு போனவனை திடீர்ன்னு புழுங்கல் அரிசியோ கார் அரிசியோ சாப்பிடச் சொல்லுங்களேன் பார்ப்போம்.

இங்கே ஒரு மாதத்திற்கு அரிசி கிடையாது, வெறும் கோதுமைதான் என்று கொடுத்துப் பார்க்கட்டுமே? நாக்கு செத்துப்போனவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். இந்த உலகத்தில் யார் கிட்ட கெட்ட பழக்கம் இல்லை? செய்யக்கூடா தப்பை செஞ்சவன், தான்பெத்த வயசுப்பிள்ளையா இருந்தா, ஊர்ல ஒலகத்துல செய்யாத தப்பையா என் புள்ளை செஞ்சுட்டான்னு சப்பை கட்டு கட்டி கேள்விகேட்டு ஒரு தாயே, சமூக ஒழுக்கத்திற்கு எதிரா பாசவெறி பிடித்து அலையலயா? மூக்கை பிடித்துக்கொண்டு செய்யவேண்டிய வேலையை செய்பவர்களில் பலருக்கு பின்னால், அவர்களின் உடல் சோர்வை போக்குவது வேதங்களும் உப நிஷத்துக்களுமா? கசப்பு மருந்தில் தேன் கலந்து குழந்தைக்கு கொடுப்பது எதனால்?

குடல் கூழுக்குத்தான் அலையும், கொண்டை பூவுக்குத்தான் அலையும் பூவை வாய்ல போட்டு மென்று சாப்பிட்டுவிட்டு, குடிக்கின்ற கூழை தலையில் ஊற்றிக்கொண்டால் சரியாக போய் விடுமா? தவறான விஷயம் என்றாலும் பழகிப்போயிருந்தால் படிப்படியாகத்தான் மீட்க வேண்டும். கேலி பேசியோ கெடுபிடி காட்டியோ ஒரேயடியாக கம்பு சுற்றினால், இழப்புதான் மிஞ்சும். இது புரியாதவர்கள், டாஸ்மாக் பார்ட்டிகளுக்கு எதிராக கம்பு சுற்றிக்கொண்டிருக் கிறார்கள், நாட்டின் பெரிய பெரிய ஊழல்களையும், குற்றங்களையும் செய்கிறவர்களில் பெரும்பாலானோருக்கு மதுப்பழக்கமே இருக்காது. அதனால் அவர்கள் யோக்கியர்கள் ஆகிவிடுவார்களா?

உலகில் லட்சக்கணக்கில் மனித உயிர்களை கொன்று குவித்து ரத்தவெறி பிடித்து ஆடிய சர்வாதிகாரி ஹிட்லர் ஒரு சைவ உணவு பேர்வழி, அசைவம் சாப்பிடாத அவன் சாந்தமானவன் என்று சொல்லிவிடமுடியுமா?, மதுப்பழக்கமும், சைவப்பழக்கமும் இல்லாதவர்கள் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவே தேகிடையாதா?. வாழ்க்கையில் மதுவே குடிக்காதவர்கள், யாருக்குமே பயன்படாமல் வெட்டிப்பயல்களாகவும் இருந்திருக்கிறார்கள், மது பழக்கம் இருந்தவர்கள் கலை இலக்கிய என பல்வேறு துறைகளில் சாதித்துவிட்டும் போயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், அளவுகோலை பொதுவாக யாருக்கு எங்கோ கொண்டு போய் எப்படி வைக்கமுடியும்?

ஒரு பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு நீண்ட இடைவெளி ஏற்பட்டால் அதைப்பற்றி கொஞ்ச மாவது சிந்திக்க அரசாங்கத்திற்கு அக்கறை வேண்டும். ஒன்று அவர்களூக்கு மருத்துவம் மற்றும் உளவியல் ரீதியாக சிகிச்சை அளித்து காப்பது. இன்னொன்னு கடும் அபாயத்திலிருப்பவர் களூக்கு சிறப்பு வழிகளில் பரிகாரம் தேடிக்கொடுப்பது.  கேரளா மணிப்பூர் போன்ற மாநிலங் களில் மதுவுக்கு அடிமையானவர்கள் அடுத்தடுத்து தற்கொலைகள் செய்துகொள்ள மிரண்டு போன அரசுகள், மறுவாழ்வு மையங்களை திறந்துள்ளன. மிகமிக அரிதான கேஸ்களை மனதில் வைத்து மருத்துவ ரீதியாக வித்டிராயல் சிம்டம் அடைந்துள்ளவர்களக்கு மது விநியோகமும் செய்ய ஆரம்பித்துள்ளன..

11 நாட்களாக மது விநியோகம் இல்லாததால் தமிழகத்திலும் இப்பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் கொள்ளையடிப் படுகின்றன. கள்ள மார்க்கெட்டில் ஆறேழு மடங்கு விலை போவதாக சொல்கிறார்கள். மதுவுக்கு மாற்றாக பலர் ஷேவிங் லோஷனை கலந்து குடிப்பது,, சானிடைசரிலிருந்து ஆல்கஹாலை பிரிப்பது என இறங்கி உயிரை இழந்து வருகிறார்கள். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையைவிட, குவார்ட்டர் கிடைக்காமல் பலியானோர் எண்ணிக்கைதான் இதுவரை அதிகம் என்கிற ரீதியில் தலைப்புகளில் செய்திகள் வரத்தொடங்கியுள்ளன.

21 நாட்கள் தொடர்ந்து மூடிவிட்டு, 22 வது நாள் திறந்து, குடியுங்கள் என்றால் குடிக்கவேண்டுமா? மதுப்பிரியர்களுக்கு அவ்வளவு கட்டுப்பாடு இருந்தால், அவர்கள் ஏன் 22ம்நாள் டாஸ்மாக் பக்கம் தலைவைத்து படுக்கப்போகிறார்கள்? விற்கும்வரை விற்போம், விருப்பப்பட்டவர்கள் குடியுங்கள், திடீரென்று மூடுவோம், மறுநாளும் மதுபானம் வேண்டுமென்று கேட்காதீர்கள். அதனால் குடிக்கா தீர்கள். திடீரென நாங்களே மறுபடியும் திறப்போம், அப்போது மீண்டும் விருப்பப்பட்டவர் கள் குடியுங்கள். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவிரும்பவில்லை.. ஆள்கிற எங்களுக்கு பதவி அதிகாரம் இல்லாவிட்டால் மறுநாளே பைத்தியம் பிடித்துவிடும். அதெல்லாம் பதவிவெறியில் வராது. வருஷத்துக்கு முப்பத்திரண்டு ஆயிரம் கோடிரூபாயை தரும் குடிமகன்களுக்கு அரசாங்கத்தை நடத்துவோர் சொல்லாமல் சொல்வது இதுதான்.

அதனால்தான் சொல்கிறோம். மது அருந்துபவர்களே, உங்களுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதைப்பற்றி துளிகூட கவலைப்படாமல் விமர்சிக்கும் யோக்கிய சிகாமணிகளுக்கும், இந்த அரசாங்கத்திற்கும் தகுந்த பாடம் கற்பியுங்கள். அப்படியே மதுப்பழக்கத்தை மறந்து திருந்திவிடுங்கள்..

டாஸ்மாஸ் திறக்கப்பட்டால், முதல் நாளிலேயே வெறிசோடியது, வாங்க ஆளில்லை விற்பனை வரலாறு காணாத சரிவு என்று எல்லா நாளிதழ்களிலும் தலைப்புசெய்தி வரும்படி சார்ந்தோரை கதறவிடுங்கள். 32 ஆயிரம் கோடி வருவாய் சுமையை குடிக்காத நல்லவர்கள் தலையிலும் போய் விழுகிற சேர்த்து கட்டுங்கள்..திருந்துங்கள்.. டாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..

”போடி பைத்தியக்காரி நீ விட்றுத்துக்கும் குடின்னா குடிக்கறதுக்கும் நான் என்ன அவ்ளோ பலகீனமானவனா?” என்று வசந்தமாளிகையில் வாணிஸ்ரீயை பார்த்து நடிகர் திலகம் சிவாஜி சொல்லும் டயலாக்கை மறக்காதீர்கள்…

செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா?

ஏழுமலை வெங்கடேசன்

Related Posts

error: Content is protected !!