விழிப்புணர்வு கடந்த செயல்பாடு: ஆட்டிஸ்டிக் பெருமை தினம் சொல்லும் புதிய பாடம்!
ஜூன் 18 — உலகெங்கும் வாழும் ஆட்டிஸம் பண்புகளைக் கொண்ட மனிதர்களைக் கொண்டாடுவதற்கும், அவர்களின் தனித்துவமான திறமைகளை அங்கீகரிப்பதற்கும் ஒதுக்கப்பட்ட ‘ஆட்டிஸ்டிக் பெருமை தினம்’ (Autistic Pride Day).
ஆட்டிஸம் என்பது பரிதாபப்பட வேண்டிய ஒரு நோயோ அல்லது குணப்படுத்த வேண்டிய ஒரு குறைபாடோ அல்ல; அது மனித மூளையின் பன்முகத்தன்மைகளில் (Neurodiversity) ஒன்று என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லும் நாளாக இது திகழ்கிறது. 2026-ஆம் ஆண்டில் இந்த நாள், வெறும் பேச்சு வார்த்தைகளைக் கடந்து, நிஜ உலகில் மாற்றங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
2026-ஆம் ஆண்டின் மையக்கருத்து (Theme)
“Noticing is not the same as acting”
(கவனிப்பது மட்டும் போதாது – செயல்பட வேண்டும்)
தி ஆட்டிஸ்டிக் ஸ்டாண்டர்ட் (The Autistic Standard)
இந்த ஆண்டு ஆட்டிஸ்டிக் பெருமை தினம் ஒரு புதிய உலகளாவிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. ஆட்டிஸம் கொண்ட சமூகத்தினரால் தங்களின் சுயமரியாதை மற்றும் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்டதுதான் “தி ஆட்டிஸ்டிக் ஸ்டாண்டர்ட்” (The Autistic Standard) என்ற கோரிக்கை.

இனி வெறும் ‘விழிப்புணர்வு’ (Awareness) என்ற எல்லையோடு நின்றுவிடாமல், அவர்களைச் சமூகத்தின் ஒரு அங்கமாக முழுமையாக ‘ஏற்றுக்கொள்ளுதல்’ (Acceptance), அவர்களுக்கான சம வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ‘செயல்பாடு’ (Action) மற்றும் அவர்களின் தனித்துவத்தைக் குறிக்கும் ‘பெருமை’ (Pride) ஆகியவற்றை இந்த தரநிலை வலியுறுத்துகிறது.
இதன் அடையாளமாக வானவில் நிறத்திலான எல்லையற்ற தன்மையைக் குறிக்கும் ‘இன்பினிட்டி சின்னம்’ (Rainbow Infinity Symbol – ∞) பயன்படுத்தப்படுகிறது. இது ஆட்டிஸம் கொண்ட மனிதர்களின் பன்முகத்தன்மையையும், அவர்களின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது.
பிரேசிலில் தொடங்கிய பெருமைப் பயணம்
ஆட்டிஸ்டிக் பெருமை தினம் உருவானதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. 2005-ஆம் ஆண்டில் பிரேசிலைச் சேர்ந்த கரேத் (Gareth) மற்றும் எமி நெல்சன் (Amy Nelson) ஆகியோரால் இந்த நாள் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டது.
‘சுதந்திரத்திற்கான மன விருப்பம்’ (Aspires for Freedom) என்ற பிரேசிலிய அமைப்பு, ஆட்டிஸம் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளைப் பாராட்டும் விதமாகவும் ஜூன் 18-ஐத் தேர்ந்தெடுத்தது. காலப்போக்கில் இந்த நிகழ்வு உலகளாவிய முக்கியத்துவம் பெற்று, இன்று சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு இயக்கமாக மாறியுள்ளது.
ஆட்டிஸம் அலைவிரிய உடற்கேடு (ASD) என்றால் என்ன?
மருத்துவ ரீதியாக, ஆட்டிஸம் அலைவிரிய உடற்கேடு (Autism Spectrum Disorder) என்பது ஒரு நரம்பியல் மற்றும் வளர்ச்சிக் கோளாறு ஆகும். இது ஒரு நபரின் தொடர்பாற்றல், கருத்துப் பரிமாற்றம் மற்றும் சமூகப் பழக்கவழக்கங்களைப் பாதிக்கிறது.
இது ஒரு நோய் அல்ல, மாறாக மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் ஒரு மாறுபாடு என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் பேச்சாற்றலில் கடினத்தன்மை, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் உள்ள சவால்கள், தன் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்த இயலாமை போன்ற தன்மைகள் காணப்படும்.
தொடக்க கால அறிகுறிகள் மற்றும் கண்டறிதல்
ஆட்டிஸத்தின் அறிகுறிகள் பொதுவாக ஒரு குழந்தையின் வாழ்க்கையின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே தோன்றத் தொடங்குகின்றன. குழந்தையின் ஆரம்பகாலச் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் இதனை அடையாளம் காணலாம்:
-
உணர்வுகளைப் பிரதிபலிக்காமை: பொதுவாக ஒரு சாதாரண 6 மாதக் குழந்தையைப் பார்த்துப் புன்னகைத்தால் அதுவும் புன்னகைக்கும். ஆனால், ஆட்டிஸம் அறிகுறி உள்ள குழந்தைகள் இத்தகைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், தங்களின் தனி உலகிலேயே இருப்பார்கள்.
-
பெயருக்குப் பதிலளிக்காமை: தங்களின் பெயரை அழைத்தால் உடனே திரும்பிப் பார்க்காமல், பலமுறை அழைத்த பிறகே கவனிப்பார்கள்.
-
தனிமை மற்றும் நடத்தை மாறுபாடுகள்: அதிகமாகப் பேசாமல் தனிமையை விரும்புவது, கையில் கிடைத்த பொருட்களைப் போட்டு உடைப்பது, ஒரே வார்த்தையையோ அல்லது வாக்கியத்தையோ மீண்டும் மீண்டும் திரும்பச் சொல்வது போன்ற பழக்கங்கள் இவர்களிடம் பொதுவாகக் காணப்படும்.
பின்னணிக் காரணங்களும் புள்ளிவிவரங்களும்
ஆட்டிஸம் ஏற்படுவதற்கான துல்லியமான காரணங்கள் இதுவரை மருத்துவ உலகால் முழுமையாகக் கண்டறியப்படவில்லை என்றாலும், சில பொதுவான கணிப்புகள் முன்ன வைக்கப்படுகின்றன:
-
மரபணு காரணிகள்: குடும்ப பாரம்பரியத்தில் உள்ள மரபணுப் பிரச்சனைகள்.
-
கர்ப்பகாலப் பராமரிப்பு: தாய் கர்ப்பக் காலத்தில் சரியான மருத்துவ சிகிச்சை பெறாதது, தவறான மருந்துகளை உட்கொள்வது அல்லது வைரஸ் தொற்றுகளுக்கு ஆளாவது.
-
பிறப்புக் காரணிகள்: குழந்தை பிறக்கும் போது எடை மிகக் குறைவாக இருப்பது மற்றும் வயதான காலத்தில் தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொள்வது.
உலகளாவிய புள்ளிவிவரங்களின்படி, சராசரியாக 110 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிஸம் இருப்பது கண்டறியப்படுகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளில் இந்த பாதிப்பு 3 முதல் 4 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது.
ஆரம்பகால சிகிச்சையும் சமூகத்தின் கடமையும்
ஆட்டிஸத்தை முழுமையாகக் குணப்படுத்த மருத்துவ முறைகள் எதுவும் இல்லை என்றாலும், இக்குறைபாட்டை எவ்வளவு விரைவில் கண்டறிகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் பயிற்சிகள் (Therapies) மூலம் அந்தக் குழந்தைகளின் செயல்திறனை மேம்படுத்த முடியும். அவர்கள் தங்களின் அன்றாட வேலைகளைச் சுயமாகச் செய்து கொள்ளும் அளவுக்கு அவர்களைப் பழக்கப்படுத்த தற்போதைய மருத்துவ தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.
இன்று உலகெங்கிலும் பல தன்னார்வ அமைப்புகள் ஆட்டிஸம் கொண்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் சுதந்திரமான வாழ்விற்காகப் பாடுபட்டு வருகின்றன. அவர்களை மரியாதையுடனும், அனுதாபத்திற்குப் பதிலாகத் தோழமையுடனும் நடத்துவது, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதி செய்வது மட்டுமே இந்த ஆட்டிஸ்டிக் பெருமை தினத்தில் நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய உண்மையான செயல்பாடாகும்.


