குழந்தை எழுத்தாளர்களை உருவாக்க அமைக்கப்பட்ட இணையதளம்.

குழந்தை எழுத்தாளர்களை உருவாக்க அமைக்கப்பட்ட இணையதளம்.

டிக்டாக்கை எல்லோருக்கும் தெரியும். இந்த தளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும் உலக அளவில் பிரபலமாக இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். டிக்டாக்கை விடுங்கள், டிக்காடாக் எனும் ஒரு இணையதளம் இருந்தது பற்றி உங்களுக்குத்தெரியுமா?

இந்த பழையதளம் இப்போது செயல்பாட்டிலும் இல்லை, பயன்பாடிலும் இல்லை என்றாலும், டிக்காடாக் (TikaTok ) பற்றி நாம் எல்லாம் அறிமுகம் செய்து கொள்வது அவசியம் தெரியுமா? ஏனெனில், இந்த தளம் பலவிதங்களில் முன்னோடி இணையதளமாக அமைந்திருப்பதோடு, அடடா இப்போது இல்லையே என ஏங்கவும் வைப்பது தான்.

முதல் விஷயம் இது குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட இணையதளம். இல்லை, குழந்தை எழுத்தாளர்களை உருவாக்க அமைக்கப்பட்ட இணையதளம்.

ஆம், குழந்தைகளுக்காக கதை சொல்வதையும், கதைப்புத்தகங்களை உருவாக்குவதை தானே பரவலாக அறிந்திருக்கிறோம். பெரியவர்கள் குழந்தைகளுக்கு கதை சொல்வதை ஒரு கலையாகவும் கருதுகிறோம். ஆனால், அந்த குழந்தைகளின் கற்பனையை தூண்டி, அவர்களையே கதை எழுத வைத்து, அவற்றை புத்தகமாகவும் பதிப்பித்து, மற்ற குழந்தைகள் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தால் எப்படி இருக்கும்? இதை தான் டிக்காடாக் செய்து வந்தது.

குழந்தைகளுக்கான டிஜிட்டல் வகுப்பறை என வர்ணிக்கப்பட்ட டிக்காடாக் இணையதளத்தில், குழந்தைகள் மிக எளிதாக தங்கள் கற்பனையில் உருவாகும் கதையை, புத்தகமாக்கி கொள்ளலாம். படக்கத்தையை படிப்பது போல குழந்தைகள் மிக எளிதாக, படங்களை வரைந்து, அதற்கேற்ப கதை எழுதலாம். இதற்கு உதவும் எளிய வடிவமைப்பு பக்கங்களையும் இந்த தளம் கொண்டிருந்தது.

இந்த புத்தகங்களை இந்த தளத்திலேயே பதிப்பிக்கலாம். மாறாக, தாங்கள் எழுதி வைத்துள்ள கதைகளையும் இந்த தளத்திற்கு அனுப்பி வைத்து பதிப்பிக்கலாம்.

5 முதல் 12 வயதான குழந்தைகள் தங்கள் கற்பனைத்திறனை வெளிப்படுத்தி வளர்த்தெடுக்க உதவும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டதாக அதன் நிறுவனர்களில் ஒருவரான ஆரிட் ஜக்கர்மேன் (Orit Zuckerman ) கூறியிருந்தார். குழந்தைகள் படம் வரைந்து, கதை எழுத ஊக்குவிப்பதே இந்த தளத்தின் நோக்கம் என்றும் கூறியிருந்தார்.

13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இணையத்தில் உருவாக்கி கொள்ள யூடியூப், மைஸ்பேஸ் போன்ற தளங்கள் இருக்கும் நிலையில், 13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாப்பான முறையில் படைப்புக்க செயல்பாட்டில் ஈடுபட இந்த தளம் வழி செய்வதாக இணை நிறுவனர் நீல் கிரிக்ஸ்பி (Neal Grigsby ) கூறியிருந்தார்.

2008 ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்த இந்த தளத்தின் சுவடுகளை கூட இப்போது காண முடியவில்லை.

ஆனால், இணையம் கிரியேட்டர்களை உருவாக்க வழி செய்வதாக கூறப்படும் நிலையில், குழந்தை பருவத்திலேயே அவர்களின் கற்பனைத்திறனை ஊக்குவித்து, அதற்கான படைப்பூக்க வழியை அளித்த இந்த தளத்தை முன்னோடி தளம் என கருதலாம் தானே.

பி.கு: குழந்தை கதை சொல்லிகளை கொண்டாடும் தளம் என இந்த தளத்தை ஊடக அறிஞர் ஹென்ரி ஜென்கின்ஸ் அறிமுகம் செய்து, நிறுவனர்களின் விரிவான பேட்டியையும் வெளியிட்டிருக்கிறார்.

சைபர்சிம்மன்

error: Content is protected !!