செல்போன் பயன்பாட்டால் மண்டையோட்டில் முளைவிடும் ஒரு ‘புதிய எலும்பு’!
காலமாற்றத்திற்கு ஏற்ப மனித உடல் தன்னைத் தகவமைத்துக் கொள்வது இயற்கையின் நியதி. ஆனால், நாம் பயன்படுத்தும் நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் நம் எலும்புக் கூட்டிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா? அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களின் மண்டையோட்டின் அடிப்பகுதியில் “எலும்பு கொம்பு” போன்ற ஒரு புதிய அமைப்பு வளர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆம்..கேட்பதற்கு ஏதோ சயின்ஸ் ஃபிக்ஷன் படம் போலத் தோன்றலாம். ஆனால், குனிந்து செல்போன் பார்ப்பதால் ஏற்படும் அழுத்தத்தைத் தாங்குவதற்காக, இளைஞர்களின் மண்டையோட்டின் அடிப்பகுதியில் சிறிய கொம்பு போன்ற எலும்பு வளர்ச்சி (External Occipital Protuberance – EOP) உருவாவதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மருத்துவ மொழியில் இதை “External Occipital Protuberance (EOP)” என்கிறார்கள். இது ஏன் உருவாகிறது? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போமா?

ஏன் உருவாகிறது இந்த எலும்பு துருத்தி?
நமது மண்டையோட்டின் பின்பகுதியில், கழுத்துத் தசைகள் இணையும் இடத்தில் ஒரு சிறிய எலும்புத் தடிப்பு இருப்பது இயல்பானதுதான். ஆனால், சமீபகாலமாக இது வழக்கத்திற்கு மாறாக நீளமாக வளர்ந்து வருகிறது. நாம் செல்போன் அல்லது டேப்லெட் பார்க்கும்போது, தலை முன்னோக்கிச் சாய்ந்து குனிகிறது.
நேராக இருக்கும்போது நம் தலையின் எடை சுமார் 5 கிலோ. ஆனால், நாம் 60 டிகிரி கோணத்தில் குனிந்து ஒரு நோட்டிபிகேஷனைப் பார்க்கும்போது, கழுத்துத் தசைகள் தாங்க வேண்டிய எடையின் அளவு 27 கிலோவாக எகிறுகிறது. இந்த அதீத அழுத்தத்தைத் தாங்க தசைநாண்கள் இணையும் இடத்தில் உடல் கூடுதலாக எலும்பை வளர்க்கிறது. இது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமே அதிகம் காணப்படுகிறது. இது நீண்ட நாள் அழுத்தத்தின் விளைவாக ஏற்படும் ஒரு தற்காப்பு நடவடிக்கை ஆகும்.
ஆய்வுகள் சொல்வது என்ன?
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து விரிவான ஆய்வு நடத்தினர். 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எக்ஸ்ரே (X-ray) முடிவுகளை ஆய்வு செய்தபோது, அவர்களில் பலருக்கு மண்டையோட்டின் பின்னால் 10 மில்லிமீட்டர் முதல் 30 மில்லிமீட்டர் வரை நீளமுள்ள இந்த எலும்பு துருத்தி இருப்பது கண்டறியப்பட்டது. முதியவர்களை விட இளைஞர்களிடமே இந்தப் பாதிப்பு அதிகமாக இருப்பதுதான் இதில் கவனிக்கத்தக்க விஷயம்.
இதனால் ஏற்படும் பாதிப்புகள்:
இந்த எலும்பு வளர்ச்சி நேரடியாகத் தற்காப்புக்காக உருவானாலும், இது சில உபாதைகளையும் ஏற்படுத்துகிறது:
-
கழுத்து வலி மற்றும் பிடிப்பு.
-
மண்டையோட்டின் அடிப்பகுதியில் தீராத தலைவலி.
-
தோள்பட்டை மற்றும் முதுகுத் தண்டுவடப் பகுதியில் அழுத்தம்.
-
உடல் வாகு (Posture) சிதைந்து போதல்.
தவிர்ப்பது எப்படி?
தொழில்நுட்பத்தை தவிர்க்க முடியாது, ஆனால் அதைப் பயன்படுத்தும் முறையை மாற்றிக் கொள்ளலாம்:
-
செல்போன் பொசிஷன்: செல்போனைப் பயன்படுத்தும்போது அதைக் கண் உயரத்திற்கு (Eye Level) வைத்துப் பார்க்கப் பழக வேண்டும். குனிந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
-
இடைவேளை: தொடர்ந்து மணிக்கணக்கில் போனைப் பார்ப்பதைத் தவிர்த்து, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்துக்குச் சிறிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
-
உடல் வாகு: அமரும்போதும் நடக்கும்போதும் முதுகுத் தண்டுவடம் நேராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பரிணாம வளர்ச்சி என்பது பொதுவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் நடக்கும் ஒன்று. ஆனால், டிஜிட்டல் யுகத்தின் அசுர வேகத்தால், சில தசாப்தங்களிலேயே நம் எலும்புக்கூடு மாறத் தொடங்கியிருப்பது எச்சரிக்கை மணிதான். “செல்போன் கொம்பு” என்று அழைக்கப்படும் இந்த எலும்புத் துருத்தி வராமல் தடுக்க, நம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்.
தனுஜா


