உயிரைக் காக்கும் லோடிங் டோஸ்! – இப்படியும் ஓர் அனுபவம்!

உயிரைக் காக்கும் லோடிங் டோஸ்! – இப்படியும் ஓர் அனுபவம்!

னிதர்கள் உடல் ஆரோக்கியத்தை தொலைத்து செல்வம் ஈட்டிய பிறகு தொலைத்து விட்ட ஆரோக்கியத்தை மீட்டு எடுக்க ஈட்டிய செல்வத்தை எல்லாம் மீண்டும் செலவு செய்கிறார்கள் என்கிறார் தலாய்லாமா.பால் பொங்கி வரும் போது பானை உடைந்த கதை என்பார்கள் நாட்டுப்புறத்தில் அது நிறைய தொழில் முனைவோர்க்கும் பொருந்தும். வாழ்வில் வெற்றியை எட்டும் தருணங்களில் அதை அனுபவிக்க முடியாத அளவுக்கு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது. கடுமையான உடற்பயிற்சி செய்து நம் உடலை நம் சொல் பேச்சு கேட்க வைக்கணும். உடல் ஆரோக்கியம் தான் வெற்றியின் ரகசியம்.

தமிழ் நாடு போலீஸ் போல் தொப்பையும் தொந்தியுமாக இருந்த என் உடலை 10 – 15 வருட தொடர் பயிற்ச்சியால் ஓரளவுக்கு கொழுப்புகளை கரைத்து பிட்டாக வைக்க முடிந்தது. தினமும் காலை நடைபயிற்சி சைக்கிள் ஓட்டுவது மற்றும் மாதம் ஒரு முறை எங்கள் டிவைன் ட்ரெக்கிங் குழுவோடு இணைந்து மலையேற்றம் என்று உடல் நான் சொன்னபடி கேட்டது.

நல்ல சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அனுசரித்த என்னிடமே சவால் விட்டது என் உடல். தொடர்ந்து கால் நூற்றாண்டுகள் உழைத்து அதன் பலன்கள் தெரிய ஆரம்பித்த போது அந்த நிகழ்வும் சேர்ந்தே நடந்தது உடற்பயிற்சிக்காக சைக்கிளில் மருதமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது அந்த வலி இடது கை சுண்டு விரலில் இருந்து மெல்ல மெல்ல தோள் பட்டைக்கும் பிறகு கழுத்து வரை பரவி முதுகை யாரோ பலம் கொண்டு அழுத்துவது போலிருந்தது. உடலெல்லாம் குப்பென்று வியர்த்து ஊற்ற ஆரம்பித்தது. சாவு என் கண் முன்னே தெரிகிறது. என் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் நான் தான் எடுத்திருக்கிறேன். சாவதாக இருந்தாலும் அதையும் நான் தான் முடிவு செய்யணும். என் உடல் தனக்குள் நிகழ்த்திக் கொண்டிருந்த அந்த வன்முறையை நான் எப்போதும் எதிர் கொள்ள தயாரகவே இருந்தேன். என்றாவது ஒரு நாள் அது நிகழும் என்றாலும் அது ஒரு பேட்ஸ்மேன் அரை சதம் அடித்தவுடன் அடுத்த பாலில் அவுட்டாவது போல ஐம்பது வயதை தொட்டவுடன் உடனேவா அது நிகழ வேண்டும். பரவாயில்லை உடலில் வலு இருக்கும் போதே நிகழ்ந்தது கூட ஒரு விதத்தில் நல்லதற்குத் தான். அன்று உடல் எனக்கு விடுத்த சவாலை ஏற்று போராட முடிவு செய்தேன்.

50 வயதை தொடும் முன்பே நிறைய படித்து இருந்தேன். ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி என்பதையும் அது குறித்த புரிதலும் எனக்கு நிறையவே இருந்தது. விஞ்ஞானம் இப்போது நிறையவே வளர்ந்து விட்டது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், பாரதியார், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களை காப்பாற்ற முடியாமல் இளம் வயதிலேயே பறிகொடுத்தது போல் அவ்வளவு சீக்கிரம் என்னையும் செத்துப் போக நவீன விஞ்ஞானம் அனுமதிக்காது என்பதில் எனக்கு எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

நீண்ட பயணங்களில் என்னுடைய பாக்கட்டில் எப்போதுமே லோடிங் டோஸ் மாத்திரைகள் இருக்கும். காலை சைக்கிளில் சென்ற போது பாக்கட்டில் இல்லை. தகவல் தொடர்புக்கு மொபைல், பாக்கட்டில் 50 ரூபாய் மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் மட்டுமே இருந்தது. பேருந்து, ரயில் மற்றும் விமான பயணங்களின் போதும் நமக்கு தேவையில்லை என்றாலும் கூட அதை யார் வேண்டுமானாலும் பாக்கட்டில் வைத்திருக்கலாம் தப்பில்லை. யாராவது நெஞ்சு வலியால் அவதிப்பட்டால் கொடுத்து உதவலாம். ஒரு முறை ரயிலில் ஒருவருக்கு நெஞ்சு வலி வந்து விட பெட்டி பெட்டியாக டிடிக்களை எழுப்பி சார்ட்டில் யாராவது டாக்டர்கள் இருக்கிறாரா என்று அலைந்து திரிந்ததன் விளைவு அந்த முடிவு.

தொழில் நிமித்தமாக காண்டி டிராவல்ஸ் பஸ்ஸில் சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு மனிதருக்கு திடீரென்று நெஞ்சு வலி வந்துவிட்டது வலியால் துடியாய் துடித்தார். செமி சிலீப்பர் பஸ் என்பதால் பின் சீட்டில் கால்களால் யாரோ எதற்காகவோ மிதிக்கிறார்களே என தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தேன். அவர் தன் சீட்டிலிருந்து எழுந்து ஏதோ இயற்கை உபாதைக்குத்தான் செல்கிறாரோ என்று நினைத்தால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்து விட்டார்.

“சார் என்ன சார் செய்யுது உங்களுக்கு” என்று கேட்டேன்.

“சார் பயங்கரமா செஸ்ட் பெயின் ஆகுது சார்” என்றார். அந்த பஸ் டிரைவருக்கும் பேசஞ்சர்களுக்கும் இடையே ஸ்கிரீன் தான் போட்டிருந்தார்கள்.

“டிரைவர் பக்கத்துல ஹாஸ்பிட்டல் எதாவது இருந்தால் நிறுத்துங்க, ஒரு பேசஞ்சருக்கு நெஞ்சு வலி” என்றேன் ஸ்கிரீனை விலக்கி.

“இங்க சின்ன ஆஸ்பத்திரிகள் தான் சார் இருக்கும், இரவில் டாக்டர்கள் கூட இருக்க மாட்டாங்க குறஞ்சது இன்னும் ஒரு அரை மணி நேரம் போனா நாம வினாயகா மிஷன் ஆஸ்பத்திரிக்கு போயிடலாம், அதுவரை தாக்குப் பிடிப்பாரா?” என்றார்.

இரவு 12.00 மணி இருக்கும். எனது மனைவியின் அண்ணன் ஒரு இதய மற்றும் நுரையீரல் சிறப்பு மருத்துவர். அப்பல்லோவில் அப்போது பணியிலிருந்தார். அவருக்கு போன் போட்டேன்.

“டேய் என்னடா இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க” என்றார்.

“தூங்கிட்டியா?”

“இல்லடா இப்பத்தான் டியூட்டி முடிஞ்சி வீட்டுக்கு வந்து டின்னர் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்” என்றார்.

“நான் காண்டில மெட்ராஸ் வந்துக்கிட்டு இருக்கேன்டா பஸ்ல ஒருத்தருக்கு திடீர்னு செஸ்ட் பெயின் வந்திருச்சி, என்னடா பண்ணலாம்” என்றேன்.பால்ய நண்பர்கள் என்பதால் வாடா போடா என்று தான் பேசிக்குவோம்.

“நல்ல பெரிய ஹாஸ்பிடல்ல தான் மெடிக்கல் மேனேஜ் பண்ணனும், பக்கத்துல பெரிய ஹாஸ்பிட்டல் ஏதாவது இருக்கான்னு டிரைவர் கிட்ட கேளு” என்றார்.

“வினாயகா மிஷன் போக இன்னும் 30 – 40 கிலோமீட்டர் இருக்கு”

“அவர் கான்சியஸா இருக்காரா ?”

“ம்.. இருக்கார்”

“அவசரத்துக்கு ஏதாவது மாத்திரை வச்சிருக்காரான்னு கேளு”

“என்கிட்ட லோடிங் டோஸ் இருக்கு”

“சூப்பர் அத முதல்ல குடு”

“சார்…சார்… என்கிட்ட ஒரு மூணு மாத்திரைகள் இருக்கு, இப்பத்தான் கார்டியாலஜிஸ்ட் கிட்ட பேசினேன், இதை சாப்பிட்டா வலி குறையும்னு சொல்றார், இந்தாங்க இதை முழுங்கிக்கோங்க என்றேன்.

சுற்றிலும் எல்லோரும் கண் விழித்து செய்வது அறியாது திகைத்துக் கொண்டிருந்தனர்.

டிரைவர் பேருந்தை மின்னல் வேகத்தில் விரட்டிக் கொண்டிருந்தார்.

“சார் நீங்க அப்படியே ஃபுளோர்ல பிளாட்டா படுங்க. சீட்டுல உட்கார வேண்டாம்” .அப்படியே செய்தார்.

அந்த மாத்திரைகளை சாப்பிட்ட பத்து நிமிடம் கழித்துக் கேட்டேன். “சார் இப்போ பெயின் இருக்கா?”

“இல்ல சார் குறைஞ்சிருக்கு”

வண்டி சிறிது நேரத்தில் வினாயகா மிஷன் மருத்துவமனைக்குள் நுழைந்தது.

அவர்கிட்ட மொபைலை ஓப்பன் செய்து தரச் சொன்னேன். “சார் உங்க வைஃப் பேர என்னன்னு சேவ் செஞ்சு வச்சிருக்கீங்க” என்றேன்.

அவரே அவர் மனைவியின் பெயரை தேடிக் கொடுத்தார். பச்சை பட்டனை அழுத்தினேன். மறுமுனையில் ரிங் போனது. யாரும் எடுக்கவில்லை. பாவம் நல்ல தூக்கத்தில் இருப்பாங்க. மறுபடியும் அழுத்தலாம் என்றால் அவங்களே கூப்பிட்டாங்க.

“ஏங்க இந்த நேரத்துல கூப்பிட்டீங்க பஸ்ல ஏறுனீங்களா இல்லையா ?” என்றார்கள் மறுமுனையில்.

“மேடம் நான் உங்க ஹஸ்பண்டு கூட ட்ராவல் பண்ணுற கோ பாஸஞ்சர் பேசுறேன். சாருக்கு மைல்டா செஸ்ட் கஞ்சஸ்சனா இருக்குன்னு சொல்றார், நாங்க இன்னும் பத்து நிமிசத்துல சேலம் வினாயகா மிஷன் ஹாஸ்பிட்டல் போயிடுவோம். சார் நல்லாத்தான் இருக்கார், பயப்பட வேண்டாம், டாக்டர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு அப்டேட் பண்ணுறேன்”

“சார் அவருக்கு ஏற்கனவே ஒரு முறை வலி வந்திருக்கு, டாக்டர் ஆஞ்சியோ செஞ்சு பார்கணும்னு சொன்னார், இவர் தான் ரொம்ப செலவாகும்னு பயப்படறார்”

வாழ்க்கைல எத்தனையோ செலவுகள் செய்கிறோம் திடீரென்று எதிர்பாராமல் ஏற்படும் அவசர மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் ஹெல்த் பாலிசி எடுத்து தங்கள் குடும்பத்தை திடீர் பொருளாதார நிலை குலைவில் இருந்து காக்க வேண்டும் என்ற புரிதல்கள் இங்கே வசதியானவர்கள் பலரிடம் கூட இல்லை.

“சரி மேடம் இதோ ஹாஸ்பிட்டல் வந்துட்டோம், நான் மறுபடியும் கூப்பிடுறேன்” என்று மொபைலை என் பாக்கட்டில் வைத்தேன். எமர்ஜன்சியில் டிரைவர் போய் சொன்னதும் தள்ளும் காட் ஒன்றை பஸ் பக்கத்துலயே கொண்டு வந்து நிறுத்தி இரண்டு ஆண் நர்ஸ்கள் அவரை மெதுவாக தூக்கி காட்டில் படுக்க வைத்தனர்.
எமர்ஜன்சி அறைக்குள் கூட்டிச் சென்று விட்டனர். ஒரு பத்து நிமிடம் இருக்கும் கார்டியாலஜிஸ்ட் வந்து விட்டார்.

உள்ளே சென்று உத்தரவுகள் போட்டார். மள மள வென்று மானிட்டர்கள் இணைக்கப்பட்டன. ECG இயந்திரம் இணைக்கப்பட்டது. ECG யை கையில் வாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்து “பேசண்டோட அட்டண்டர் யாராவது இருக்கீங்களா?” என்றார் டாக்டர்,

“சார் அவர் தனியாத்தான் ட்ராவல் செய்யறார், அவங்க வீட்டுக்கு தகவல் கொடுத்திருக்கோம், ஒரு 2- 3 ஹவர்ஸ்ல வந்திருவாங்க” என்றேன்.

“மாத்திரை ஏதாவது சாப்பிட்டாரா?” என்றார்.

“ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னால லோடிங் டோஸ் நான் தான் கொடுத்தேன்” என்றேன்.

“நீங்க டாக்டரா?”

“இல்லை பிசினஸ் மேன், என் உறவினர் அப்பல்லோவில் கார்டியாலஜிஸ்டா இருக்கார். அவர் கிட்ட கேட்டுக்கிட்டு தான் கொடுத்தேன்”

“நல்ல பிரசன்ஸ் ஆப் மைண்ட்” சிரித்தார்.

“டாக்டர் அவர் கண்டிசன் இப்போ எப்படி இருக்கு ?”

“நாங்க அவருக்கு ரத்தம் மெல்லிசாக இஞ்சக்சன் போட்டிருக்கோம், நவ் ஹி இஸ் ஸ்டேபிள்”

“சார் பஸ்ல பேசஞ்சர் எல்லாம் வெயிட் பண்றாங்க, நான் வேணும்னா என் ஜேர்னிய கேன்சல் பண்ணிட்டு இங்க அவங்க வைஃப் வரும் வரைக்கும் வெயிட் பண்ணட்டுமா ?”

“நோ நோ தேவையில்ல, ஹி வில் பி ஆல்ரைட். தேவைப்பட்டா நாளைக்கு காலைல கூட அவர டிஸ்சார்ஜ் பண்ணி கூப்பிட்டுகிட்டு போகலாம், இல்ல இங்கயே ட்ரீட்மெண்ட் எடுப்பதாக இருந்தாலும் எடுக்கலாம், அது அவங்க விருப்பம், அவங்க வைஃப் வரட்டும் நான் பேசிக்கிறேன்” என்றார்.

“நான் அவரை பார்க்கலாமா டாக்டர்?” என்றேன்.

“தாராளமா, போங்க போய் பாருங்க”

பாக்கட்டில் இருந்த அவருடைய போனை எடுத்து மீண்டும் அவர் மனைவியின் நம்பருக்கு ரீ டையல் செய்தேன். உடனே போனை எடுத்தாங்க.”மேடம் கிளம்பிட்டீங்களா ?”

“பக்கத்து தெருவுல இருக்கிற என் அண்ணனுக்கு போன் போட்டு சொல்லியிருக்கேன் சார், அவர்கிட்ட தான் கார் இருக்கு இன்னும் ஒரு பத்து நிமிசத்துல கிளம்பிடுவோம், அவர் எப்படி இருக்கார் இப்போ, டாக்டர் ஏதாவது சொன்னாரா?” என்றார் கவலை தோய்ந்த குரலில்.

“மேடம் இப்பத்தான் கார்டியாலஜிஸ்ட் கிட்ட பேசினேன். பயப்பட ஒன்றும் இல்லை அவர் அபாய கட்டத்தை தாண்டிட்டார்னு சொன்னார், சார் இப்போ நல்லா இருக்கார், ஒரு நிமிசம் லைன்ல இருங்க நான் ஐசியுவுக்குள்ள போய் அவர்கிட்ட போனை கொடுக்கிறேன்” என்றேன்.

கட்டிலில் இப்போது நாற்பது டிகிரி ஆங்கிளில் படுத்திருந்த அவரை போய் பார்த்து “எப்படி சார் இருக்கு இப்போது?” என்றேன்.

“சார் நல்லா இருக்கு சார், ரொம்ப தேங்ஸ் சார்” என்றார் முகத்தில் ஒரு தெளிவு.

“சார் இந்தாங்க உங்க வைஃப் லைன்ல இருக்காங்க பேசுங்க” என்றேன்.

மனைவியிடம் பேசினார். ஆறுதல் படுத்தினார். தனக்கு ஒன்றுமில்லை மெதுவாக வாங்க வேகமா வண்டிய ஓட்ட வேண்டாம்னு உன் அண்ணன்கிட்ட சொல்லு என்றார் கரிசனமாக.

சார் நான் வேணும்னா பஸ்ஸ அனுப்பிட்டு உங்க வைஃப் வரும் வரை இங்கே இருக்கட்டா, எனக்கு ஒன்றும் சென்னையில் அவசர வேலை எல்லாம் இல்லை. பிஸினஸ் விசயமாத்தான் போறேன். அந்த வேலை நான் போகும் வரை காத்திருக்கும் பிரச்சினை இல்லை” என்றேன்.

“சார் நீங்க ஜேர்னிய கண்டினியூ பண்ணுங்க சார் எங்க வீட்ல தான் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்கல்ல. அதுவுமில்லாம நவ் ஐயாம் இன் சேப் ஹேண்ட்ஸ், நீங்க தைரியமா போங்க” அவர் பேச்சு ஆறுதலாக இருந்தது எனக்கு.

“உடம்ப கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க, டாக்டர் பிரச்சினை ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டார். நாளைக்கு காலைல டிஸ்சார்ஜ் கூட பண்ணிக்கலாம்னு சொல்றார், ஊருக்கு போன உடனே உங்க கார்டியாலஜிஸ்ட பார்த்து அவர் சொல்ற மாதிரி கேளுங்க, நான் உங்க பர்ஸ், மொபைல் போன் அப்புறம் உங்க லக்கேஜ் எல்லாத்தையும் நர்சிங் ஸ்டேசன்ல கொடுத்துட்டு போறேன் உங்க மனைவி வந்த பிறகு வாங்கிக்க சொல்லுங்க”

கிளம்பும் போது “சார் உங்க போன் நம்பர் கொடுத்துட்டுப் போங்க” என்றார்.

வெளியே பஸ்ஸிலிருந்து இறங்கி அத்தனை பேரும் கவலை தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். “சார் அவர் எப்படியிருக்கார்” என்று கேட்டார்கள்.

“அவர் இப்போ நல்லா இருக்கார், டாக்டர் பிரச்சினை ஒன்றும் இல்லைன்னுட்டார் அவர் வைஃப் கிளம்பிட்டாங்க கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க” என்றேன்.

எல்லோர் முகத்திலும் நிம்மதி. டிரைவர் “போலாமா சார்” என்றார்.

“அவர் லக்கேஜ இறக்கி அந்த நர்ஸ் கிட்ட குடுத்துட்டு வாங்க, நாம கிளம்பலாம்” என்றேன்.

பஸ்ஸில் ஏறி படுத்தவுடன் தூங்கிப் போனேன்.

அந்த Loading dose விபரம்

Tab ecospirin 325 mg
Tab clopidogrel 300 mg
Tab atorvastatin 80 mg

செந்தில்ராஜ்

Related Posts

error: Content is protected !!