தமிழ் குரல் / AI Voice
அதிமுக சட்ட விதி 30 பிரிவு 3 படி ஒவ்வொரு அமைப்பு தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பும் பழைய உறுப்பினர்கள் தங்களது அட்டைகளை புதுப்பித்தல், மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை செய்து முடிக்க வேண்டும். அதன்படி, இன்று அதிமுகவில் உறுப்பினர் களுக்கான அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கான அட்டை வழங்குதல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் அதிமுகவில் 1 கோடியே 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறினார். அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது இன்று வழங்கப்படவுள்ள புதிய உறுப்பினர் அட்டைகள் பெற்றவர்கள் மட்டுமே அதிமுக அமைப்பு தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றார். பின்னர் சசிகலா அதிமுகாவில் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டாரா என்று செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், அவர் அடிப்படை உறுப்பினரே இல்லை எதற்காக அவர் அட்டை புதுப்பிக்கப்படவேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.அதே போல் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, “அதிமுகவின கட்சி விதிகளின் படி வேறொரு கட்சியில் உள்ளவர் அதிமுகவில் தொடரமுடியாது. சசிகலா அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ளவர். அத்துடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கிறார். அதனால் சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை இழந்து விட்டார். அந்த அடிப்படையில் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். அதிமுக சட்ட விதிகள் சசிகலா குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்” என தெரிவித்துள்ள நிலையில் ’அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் சசிகலா தான். அவர் தொடர்ந்து கட்சியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்’ சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடன்படவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக அரசு ஆதரவளிக்கும்” என்று அதிமுகவின் அப்போதையை செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிசாமி தெரிவித்ததால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நிக்கப்பட்டார்.
இதையடுத்து அதிருப்தியடைந்த அவர் அதிமுக கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “வழக்கு தொடர்பாக 3 வாரத்தில் மனுதாரர் உட்பட அனைவரும் தங்களது கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இதையடுத்து அனைத்து பிரமாண பத்திரங்களையும் பரிசீலனை செய்து அடுத்த 4 வாரத்தில் வழக்கின் இறுதி உத்தரவை தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்” என கடந்த மாதம் 13ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சார்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,”அ.தி.மு.க கட்சி விதிகளில் செய்த மாற்றங்கள் என்பதை கண்டிப்பாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள கூடாது. மேலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த ஆணையம் உத்தரவிட வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டது.
வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இன்றைய தினம் சசிகலா தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளோம். அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் சசிகலா தான். அவர் தொடர்ந்து கட்சியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அதனால் அ.தி.மு.க. சட்டத்திருத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் எதுவும் செல்லாது. இதைத்தவிர ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செம்மலை ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களே கிடையாது. அதிமுகவின் ஒரு அங்கம் தான் டிடிவி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். அது ஒன்றும் தனி கட்சி கிடையாது” என்று கூறினார்.

