தமிழ் குரல் / AI Voice
தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்குப் பெருமழை மற்றும் அதிகப் பெருமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிகப் பெருமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம் தமிழகம் முழுவதும் எச்சரிக்கை தேவை யில்லை. குறிப்பாக சென்னைக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனவே, இந்த ரெட் அலர்ட் சென்னைக்கு உரியது அல்ல என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வரும் 7ஆம் தேதி முதல் மிகப் பெருமழை முதல் மிக மிகப் பெரு மழை இருக்கும். வரும் 5ஆம் தேதியன்று தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும். அது வலுவடைந்து, தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் புயலாக மாறும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கேரளாவில் 3 மாவட்டங்களில் தற்போது ‘ரெட் அலர்ட்’ அறிவித்துள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அக்டோபர் 7ஆம் தேதியன்று 25 செ.மீட்டருக்கும் மேல் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்குப் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது. நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெருமழை காரணமாக ஏற்படும் பேரிடர்களைச் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச் சரிக்கை நடவடிக்கையாகப் பேரிடர் காலங்களைக் கையாள தமிழகத்தில் சுமார் 1,275 இளைஞர் களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் . இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அக்டோபர் 7ஆம் தேதியன்று ‘ரெட் அலர்ட்’ விடுத்திருப்பதாக, பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குனர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து, தனியார் வானிலை ஆய்வு அமைப்பான ‘தமிழ்நாடு வெதர்மேன்’ தனது பேஸ்புக் பக்கத்தில், “இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7 ம் தேதி அதி தீவிர கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் மழை அளவு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில்; மிக அதி தீவிர கனமழையாக, 204.5 மி.மீ., அளவுக்கு; 75 சதவீதம் கண்டிப்பாக மழை உண்டு என்ற நிலையில் இந்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில், 204.5 மி.மீ., மழை பொழிவு இருக்க வாய்ப்பு இல்லை. மேலும், சென்னையில் மிக கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப் படவில்லை.
அதற்குள் வதந்திகளை பரப்பி விடுகின்றனர். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால்,அதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். ஒரு மாவட்டத்தில், 10 மழை அளவீடு மையங்கள் இருந்தால், அந்த மாவட்டம் முழுவதும் 204.5 மி.மீ., மழை பெய்யுமா என பார்க்க வேண்டும்.
குறிப்பிட்ட மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தால் சமாளித்து விடலாம்.
தமிழகத்தில் எந்த பகுதியில் மிக தீவிர கனமழை பெய்யும் என்பதை கூறாமல், பொதுவாக ரெட் அலர்ட் விடுத்தால், என்ன நடவடிக்கை எடுக்க முடியும். கிருஷ்ணகிரியில் குறைந்த அளவு மழை பெய்தால் அங்கு என்ன நடவடிக்கை எடுத்து விட முடியும்.
ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொடரை ஒட்டிய தமிழக பகுதிகளான நீலகிரி, கோவை (வால்பாறை) தேனி, நெல்லை, மற்றும் கன்னியா குமரியில், தினமும் 200 மி.மீ., அளவுக்கு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக கன மழை பெய்தது. சோலையாறு அணை பகுதியில், 24 மணி நேரத்தில் 400 மி.மீ., மழை பெய்தது. அப்போது அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஏன் வதந்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன?
தமிழகத்தின் கடலோர பகுதியில் இருந்து வெகு தொலைவில் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானால், அது கிழக்கில் இருந்து வரும் காற்றை வலுப்படுத்தும். அதன் காரணமாக மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கன மழை பெய்யும்.
கடந்த, 2009ம் ஆண்டு நீலகிரியின் கேத்தி பகுதியில், ஒரே நாளில் 820 மி.மீ., மழை பெய்தது. குறிப்பாக குன்னூர் பகுதியில் கன மழை பெய்தது. ஆனால், தற்போது உருவாக உள்ள புயல் சின்னம், 2009ம் ஆண்டு போல் இல்லாமல் வெகு தொலைவில் தான் உருவாக உள்ளது. அது ஓமன் நாட்டை நோக்கி நகருவதால், கேரளா மற்றும் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எனினும், தமிழகத்தின் மலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு இருக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் எச்சரிக்கை தேவையில்லை. குறிப்பாக சென்னைக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனவே, இந்த ரெட் அலர்ட் சென்னைக்கு உரியது அல்ல. தமிழகத்தின் மலை பகுதி களுக்கு உரியது. எனவே, முன்பு டிச., 1ம் தேதி போல் பேய் மழை பெய்யும் என பயப்பட வேண்டாம். மலை பகுதிகளில் கன மழை பெய்யலாம். எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் நீலகிரி அல்லது கன்னியாகுமரி அல்லது வால்பாறை அல்லது பெரியாறு பகுதியில் பெய்தது போல் இருக்காது. சென்னைக்கு மழை தேவை. வெள்ளம் என்பது வேறு விஷயம். ஒவ்வொரு எச்சரிக்கைக்கும் பயப்பட வேண்டாம். சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் போதிய நீர் இருப்பு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


