32°C
விளம்பரம்
Advertisement

கும்பமேளா ; பாதுகாப்பில் மது, புகைப்பிடித்தல் கெட்ட பழக்கம் இல்லாத ஆர்வலர்கள் & போலீசார்

admin சேலம் Published: September 29, 2018 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும், ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையிலும், நாசிக்கில் கோதாவரிக் கரையிலும், உஜ்ஜயினியில் க்ஷிப்ரா நதிக்கரையிலும் கும்பமேளா நிகழும். 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடுவர். அதிலும் உலகில் அதிகம்பேர் கூடும் ஆன்மிக நிகழ்வாக கும்பமேளா கருதப்படுகிறது. இந்நிலையில் அலகாபாத் நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள கும்பமேளாவில் மது, புகைப்பிடித்தல் உள்ளிட்ட கெட்ட பழக்கம் இல்லாத போலீசார் பணியமர்த்தப்படுவார்கள் என கும்பமேளா நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாற்கடலிலிருந்து பெறப்பட்ட அமுத கலசத்தை அசுரர்கள் கவர்ந்து சென்றார்கள். தீயவர்களின் கைகளில் அது சிக்கிவிடக் கூடாது என்ற காரணத்தால் தேவர்கள் அவர்களோடு போராடினர். 12 நாள்கள் (மானிடர்களுக்கு இது 12 ஆண்டுகள்) நடைபெற்ற போரில் அசுரர்கள் தோற்று தேவர்கள் வென்றனர். அமுத கலசத்தை திருமால் சுமந்து செல்கையில் அதில் இருந்த 4 துளிகள் நான்கு இடங்களில் விழுந்தன. அவை பிரயாக் எனும் அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்வார் ஆகிய இடங்கள். இந்த இடங்களில் அமுதம் விழுந்த நாளில் கும்பமேளா விழா நடத்தப்படுகிறது.

அமுதம் சிந்திய இடங்களில் உள்ள நீர் நிலைகளில் அன்றைய நாளில் அமுதம் பொங்குவதாக ஐதிகம். அன்று நீராடுவது எல்லாவித பாவங்களையும் நீக்கி சந்தோஷத்தைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. நாசிக், உஜ்ஜையினி, ஹரித்வார் போன்ற இடங்களில் நடக்கும் கும்பமேளா விழாவைவிட அலகாபாத்தில் நடக்கும் விழா விசேஷமானது. அங்குதான் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் கூடும் திரிவேணி சங்கமம் நடைபெறுகிறது. 12 ஆண்டுக்கு ஒருமுறை அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளா சென்ற 2013-ம் ஆண்டு நடைபெற்றது. அதைப் போலவே அலகாபாத்தில் 6 ஆண்டுக்கு ஒருமுறை அரை கும்பமேளா விழாவும் நடைபெறும். அலகாபாத், ஹரித்துவார் இரண்டில் மட்டுமே இது நடைபெறும்.

இந்த அரை கும்பமேளா விழா அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 14-ம் நாள் மகர சங்கராந்தி தொடங்கி மார்ச் மாதம் 4-ம் நாள் மகாசிவராத்திரி வரை, 50 நாள்கள் கும்பமேளா நடைபெறும் என அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக 2,500 கோடி ரூபாய் மத்திய – மாநில அரசுகள் ஒதுக்கி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது என்றும் அறிவித்துள்ள நிலையில் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அக்டோபர் மாதம் முதல் துவங்க உள்ளது.சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர், போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதனிடையே , கும்பமேளா பாதுகாப்பிற்கு மது, புகைப்பிடித்தல் உள்ளிட்ட கெட்ட பழக்கம் இல்லாதவர்களாகவும் அதே சமயம் சைவ உணவு மட்டுமே சாப்பிடும் கனிவுடன் பேசும் ஆர்வலர்கள் மற்றும் போலீசார் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள  நபர்கள், 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் காவல்துறை மூத்த அதிகாரிகளிடம் இருந்து நன்னடத்தை சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக அலகாபாத்தைச் சேர்ந்த போலீசார் யாரும் கும்பமேளா பாதுகாப்பிற்கு வேண்டாம் என கும்பமேளா நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. கும்பமேளா பாதுகாப்பு பணி கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களில், கும்பமேளா நிர்வாகம் கூறி உள்ள தகுதிகளுடன் இருப்பவர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என கும்பமேளாவிற்கான டிஐஜி கே.பி.சிங், மாவட்ட காவல் காண்கணிப்பாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கும்பமேளாவை முன்னிட்டு அரசு சாலைகளை விரிவுபடுத்தி வருகிறது. அப்போது சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மசூதிகளின் சில பகுதிகள் அப்பகுதி முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்போடு அப்புறப்படுத்தப்பட்டது.

எங்களுடைய விருப்பத்தின் பேரிலேயே மசூதிகளின் சில பகுதிகளை அப்புறப்படுத்த நாங்களும் ஒத்துழைத்தோம் என அப்பகுதி இஸ்லாமியர் ஒருவர் தெரிவித்தார்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்