தமிழ் குரல் / AI Voice
ஒவ்வொரு வருடமும் பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் மற்றும் சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் என்ற அமைப்பு, ஒவ்வொரு மொழியிலும் சமூக அக்கறையுடன் எழுதப்படும் சிறப்பான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கிவருகிறது. மின்னம்பலம் இதழில் முத்துராசா குமார் எழுதிய ‘பெயர் – வயது – பால் – மூன்றாம் பாலினம்’ என்னும் கட்டுரை 2017ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு மொழியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரைகளுக்கு, 2017ஆம் ஆண்டுக்கான லாட்லி மீடியா (LAADLI MEDIA) விருது நேற்று (செப்டம்பர் 14) வழங்கப்பட்டது. டெல்லியில் யுனைடட் சர்வீசஸ் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியா வளாகத்தில் பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் (Population First) மற்றும் சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் (Centre for Media Studies) நடத்திய லாட்லி மீடியா மற்றும் அவார்ட்ஸ் ஃபார் ஜென்டர் சென்சிட்டிவிட்டி (Laadli Media Awards For Gender Sensitivity) எனும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இணையம் மற்றும் வானொலி ஊடகங்களில் வெளியான GENDER SENSITIVITY சார்ந்த சிறந்த கட்டுரைகளும் நிகழ்ச்சிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப் பட்டது. இந்த விருதுக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு,கன்னடம், இந்தி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி உருது ஆகிய மொழிகளிலிருந்து 82 பத்திரிகை யாளர்கள் தேர்வாகியிருந்தனர். இவ்விருதுக்குத் தேர்வான பத்திரிகையாளர்களுக்கு இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான சாய்நாத் விருது வழங்கினார்.
தமிழ் மொழிக்கான இவ்விருதானது, மின்னம்பலத்தில் வெளியான ‘பெயர் – வயது – பால் – மூன்றாம் பாலினம்’ என்ற சிறப்புக் கட்டுரையை எழுதிய முத்துராசா குமாருக்குக் கிடைத்து இருக்கிறது. இவர் சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் M.A, MPhil முடித்துள்ளார். இசை ஆல்பங்கள், குறும்படங்களுக்குப் பாடல்கள் எழுதிவருகிறார். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகளும் எழுதிவருகிறார்.

