32°C
விளம்பரம்
Advertisement

திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்க – சொல்ல தயார்! – மு.க. அழகிரி தடாலடி!

admin சேலம் Published: August 30, 2018 2 நிமிட வாசிப்பு Updated: August 31, 2018 தமிழகம்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




அஞ்சா நெஞ்சன் என்றும், தன் பின்னால்தான் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றும் சவசால் விட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தன்னை திமுக கட்சியில் இணைத்துக் கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கலைஞரின் நினைவிடம் நோக்கி பேரணி செல்லவுள்ளதாகவும், ஒரு லட்சம் பேர் வரை அதில் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதற்காக கடந்த 7 நாட்களாக தனது இல்லத்தில் தன் ஆதரவாளர்கள் என்ப்படும் சிலருடன் ஆலோசனை நடத்திவரும் அழகிரி, திமுகவில் இணைக்கவில்லையெனில் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது உள்பட பல கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த 28ஆம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆதரவாளர்களுடனான ஆலோசனையை முடித்த பிறகு இன்று (ஆகஸ்ட் 30) செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, தாக்கத்திற்காகப் பேரணி நடத்தவில்லை என்றும், கலைஞருக்கு அஞ்சலி செலுத்தவே நடத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “உண்மையின் பக்கம் எப்போதும் ஆதரவு இருக்கும். கலைஞரின் உண்மை விசுவாசிகள் என் பக்கம் இருக்கின்றனர். வெளியிலிருந்து வருபவர்களையும் வரவேற்கிறேன். பேரணியில் தொண்டர்கள் ஒரு லட்சத்துக்கும் குறையாமல் கலந்துகொள்வார்கள். கட்சியைக் காப்பாற்றுவதற்காக இறங்கியுள்ளோம். அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லையெனில் என்ன செய்வது என்பது குறித்து பின்னர் முடிவு செய்வோம். கட்சியில் இணைத்தால் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக உள்ளோம். அவர்கள்தான் இணைத்துக்கொள்ள மறுக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

ஆனால் திமுக பொதுக்குழுதான் ஸ்டாலினை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதே என்ற கேள்விக்கு, “பொதுக்குழு தலைவரை- பொருளாளரை தேர்ந்தெடுக்கலாம். அது மட்டுமே கட்சியில்லை. 1500பேர்தான் திமுகவா?. தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் உள்ளனர். 5ஆம் தேதிக்குப் பிறகு மேலும் பலர் வருவர்” என்று பதிலளித்தார்.

அத்துடன் தன் மகனுக்கு கட்சியில் பதவியேதும் கேட்கவில்லை என்று குறிப்பிட்ட அழகிரியிடம், கட்சியில் இணைந்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்வியை செய்தியாளர் எழுப்ப, “கட்சியில் சேர வேண்டும் என்று விருப்பப்பட்டால் தலைவராக ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்” என்று பதிலளித்தார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்