32°C
விளம்பரம்
Advertisement

வணிகர் சங்கக் கூட்டத்தில் புதிய அரசியல் கூட்டணி!

admin சேலம் Published: May 5, 2018 3 நிமிட வாசிப்பு Updated: May 6, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




”தற்போது தமிழகத்தில் இருக்கும் வணிகர்கள் மீது இருமுனைத் தாக்குதல் நடந்து வருகிறது. அதில் ஒரு முனை மத்தியில் இருக்கக்கூடிய பி.ஜே.பி ஆட்சி, இன்னொரு முனை மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சி. இந்த இரண்டு ஆட்சிகளும் வணிகர்கள் மீது தொடர்ந்து இருமுனைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது” என்று முக ஸ்டாலின் தெரிவித்தார்..

சென்னை திருவேற்காட்டில் நடைபெற்று வரும் வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாமக தலைவர் ராமதாஸ் பங்கேற்றனர். ஆண்டு தோறும் மே மாதம் 5ம் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை வேலப்பன்சாவடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 35வது வணிகர் தின மாநில பேரமைப்பு மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த ஆண்டு இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக இந்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, அரசியல் தலைவர்கள், அகில இந்திய வணிகர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்றனர். அனைத்து வணிகர்களும் இன்று கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று பேசினர்.

மாலை 3 மணிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்புரையாற்றினர். நிரந்தர உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்ட உரிமம் அபராதம், சிறைத் தண்டனை சட்டங்களில் மாற்றம், சாலையோர கடைகளை முறைப்படுத்த வேண்டும், சிறு குறு வணிகர்களுக்கு இ-வே பதிவு மையங்கள் அமைத்து செயலாற்றி கொள்ள மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின், வணிகர்களை பணமதிப்பு இழப்பு நடவடிக்கை படுகுழிக்குள் தள்ளியது. மத்திய, மாநில அரசுகள் வணிகர்கள் மீது இருமுனை தாக்குதல் நடத்துகிறது என்று கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரியால் சிறு வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால், மாநில அரசின் உரிமைகளை மீட்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார். பலமுனை வரி விதிப்பை ஒரு முனை வரி விதிப்பாக மாற்றியது திமுக ஆட்சியில் தான் என்றும், 580 பொருட்களுக்கு திமுக ஆட்சியில் வரி விலக்கு அளிக்கப்பட்டது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய ராமதாஸ், வணிகர்களுக்காக பாமக களம் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளது என்று கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரி, பணமதிப்பிழப்பால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை விற்றுமுதலுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன் , இந்த மாநாடு புதிய அமைப்பு தொடங்கிய எனக்கான பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். நானும் ஒரு சிறு வணிகன் தான். அரசியல்வாதியாக இங்கு வரவில்லை . நாம் தான் அதிகம் வரி செலுத்துபவர்கள். விசில் ஆப்பை வணிகர் சங்கத்தினரும் பயன்படுத்த வேண்டும் என்றார்.



மேலும் பேசிய அவர், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் போடும் தீர்மானங்கள் கோரிக்கைகளை வாரா வாரம் செய்யலாம், மாதா மாதம் செய்யலாம் வாருங்கள். கிராம சபைகளில் வணிகர்களும் பங்கேற்க வேண்டும் . கிராம சபை தீர்மானங்கள் நாடாளுமன்ற தீர்மானங்களாக மாறும். தேவையற்ற வேலை நிறுத்தங்களை செய்ய மாட்டோம் என்ற வணிகர் சங்க மாநாட்டு தீர்மானம் மிகவும் வரவேற்கத்தக்கது. பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாது என்பது மக்கள் நிதி மய்ய கொள்கை. மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் பெரும் ஊர்வலமாக சென்றால் அவசரமாக மருத்துவமனைக்கு செல்பவரின் நிலை என்ன என யோசியுங்கள். பெரிய ஆர்ப்பாட்டங்கள் செய்து மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது, என கமல்ஹாசன் பேசினார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்