மூளைச் சாவு குறித்து புதிய வழிகாட்டுதல்கள்! – கேரளா அரசு அதிரடி!

மூளைச் சாவு குறித்து புதிய வழிகாட்டுதல்கள்! – கேரளா அரசு அதிரடி!

இயற்கையாக இறந்து போன ஒருவரின் உடலிலுள்ள உடலுறுப்பு தானத்தை பெறுவதிலோ அல்லது உடல் தானம் பெறுவதிலோ உள்ள சட்டச்சிக்கலைவிட, மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து உறுப்புக்ளை பெறுவதில் அதிகமான சிக்கல்கள் உள்ளன. கூடவே சர்ச்சைகளும் தொடர்கின்றன. ஆம்.. கடந்த சில ஆண்டுகளாகவே விபத்திலோ அல்லது வேறு காரணங்களினாலோ தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அதன் விளைவாக மூளைச் சாவு ஏற்பட்டு அவா்களது உறுப்புகள் தானம் செய்யப்பட்டது என்ற செய்திகள் வருவது அதிகரித்து வருதைக் கவனித்திருக்கலாம். இதனிடையே இந்த மூளைச் சாவு என்ற பெயரில் பல மோசடிகளும் நடைபெற்று வருகின்றன என்றும் சில இடங்களில் கோமா ஸ்டேஜில் இருப்பவர்களைக் கூட மூளைச் சாவு என்ற பெயரி்ல் அவரது உறுப்புகள் திருடப்பட்டு அவை மற்றவருக்கு மாற்றப்படுகிறது என்பதுடன் இதன் பின்னணியில் பெருந்தொகையும் கைமாற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வந்த படிதான் உள்ளது.

இந்த மூளைச் சாவு என்பதை நிர்ணயிப்பதில் உள்ள சிக்கல்களே இதற்குக் காரணம். அதாவது விபத்தில் சிக்கி மூளை செயல் இழந்த நிலையில் ஒருவரின் உடல் செயலற்றுப்போவதை, டாக்டர்கள் ‘கோமா நிலை’ என்கிறார்கள். இதில், தன்னிலைக்கு மீண்டு வரக்கூடிய நிலை, மீண்டு வர முடியாத நிலை என இரண்டு வகைகள் உள்ளன. மீண்டு வர முடியாத நிலைதான் ‘மூளைச் சாவு’ எனப்படுகிறது. மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் துடித்தாலும் அவரால் சுயமாக மூச்சுவிட முடியாது. எனவேதான் மூளைச் சாவு என்பது மரணமடைந்ததற்குச் சமம் என்கிறார்கள். மூளைச் சாவு அடைந்த ஒருவருக்கு, செயற்கை சுவாசம் கொடுக்கப்படாவிட்டால், சில மணி நேரங்களில் இறந்துவிடுவார். செயற்கை சுவாசக் கருவி (Ventilator) மூலம் பிராண வாயு அளிக்கப்பட்டு மூளை தவிர மற்ற உறுப்புகள் தற்காலிகமாக பாதுக்காக்கப்படுகின்றன. அந்த இடைவெளி நேரத்தைப் பயன்படுத்தித்தான், ஒருவர் உடலிலிருந்து உறுப்புகளை எடுத்து இன்னொருவருக்குப் பொருத்துகிறார்கள்.

அதே நேரத்தில் ஒருவர் மூளைச் சாவு அடைந்துவிட்டார் என வெறுமனே ஒரு டாக்டர் அறிவித்து விட முடியாது. அதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. அதாவது, ஒரு நபர் மூளைச் சாவு அடைந்து விட்டார் என்பதை உறுதி செய்வதற்கு நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு சான்று அளிக்க வேண்டும். மூளைச் சாவு அடைந்த நபர் எந்த மருத்துவமனையில் இருக்கிறாரோ, அந்த மருத்து வமனை நிர்வாகத்தில் இருக்கும் ஒரு மருத்துவர், மூளைச் சாவு அடைந்த நபருக்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிப் படுத்து வதற்காக மருத்துவமனையில் இருக்கும் மற்றொரு மருத்துவர்… ஆகியோர் முன்னிலை யில் நரம்பியல் நிபுணர் அல்லது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மூளைச் சாவு அடைந்த நபரைப் பரிசோதிப்பார். அனிச்சைச் செயல்கள் (Brainstem Reflexes) பரிசோதிக்கப்பட்டு அவை நிரந்தரமாகச் செயலிழந்ததைச் சுமார் ஆறு மணி நேர இடைவெளியில் இரண்டு தடவை உறுதி செய்வார்கள். அதற்குப் பிறகு சுவாச நிறுத்தப் பரிசோதனை என்ற ஒன்றையும் செய்து (Brain Death) மூளைச் சாவை உறுதி செய்வார்கள். இப்படி, பல கட்டப் பரிசோதனைகளைச் செய்துதான் மூளைச் சாவு என்பது முடிவு செய்யப்படும்.

இப்படி இருந்தும் தொடரும் சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் இந்தியாவில் முதன் முறையாக கேரள அரசு மூளைச் சாவு குறித்து புதிய வழிகாட்டுதல்களை அளித்துள்ளதாக அந்த மாநில அரசின் சுகாதாரத்துறையின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கேரள அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் மூளை இறப்பு தொடர்பாக ஏற்கனவே உள்ள சர்வதேச ரீதியான வழிகாட்டுதல்களை அடிப்படையாக கொண்டவை. செயல்முறை தரப்படுத்துதல் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகளும் தனியார் மரு்ததுமனைகளும் பின்பற்ற வேண்டும்.

இதன்படி நான்கு அரசு மருத்துவர்களை கொண்ட மருத்துவர் வாரியம் ஒன்று அமைக்கப்படும். இந்த மருத்துவ குழுவினரே ஒருமித்த கருத்திணக்கத்தோடு நோயாளியின் மூளை இறப்பு குறித்து முடிவு எடுப்பார்கள். பின்னர் அவர்களே ஒரே நேரத்தில் கையெழுத்திட்டு சான்றிதழ் அளிப்பார்கள். இதில் முக்கிய அம்சமாக ஒருவர் கோமாவில் இருப்பதற்கும் மூளை இறப்பிற்கும் உள்ள வேறுபாடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோமா என்பது மூளையின் சில செல்கள் அல்லது ஒரு சில நரம்புகள் பாதிக்கப் பட்டாலோ ஏற்படும் ஆழ்நிலை மயக்கம் ஆகும். அவர் சுயநினைவுக்கு திரும்புவதற்கு வாய்ப்புண்டு. அதனால் அவருக்கு செயற்கை சுவாசக்குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவரது சுவாசம் மற்றும் இதயமும் இயங்கிக் கொண்டிருக்கும்.

ஆனால் மூளை இறப்பு என்பது மூளையி்ன் அனைத்து செல்களும் சேதமடைந்துள்ள நிலையாகும். இனி மூளை மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பி செயல்படுவதற்கு 100 விழுக்காடு வாய்ப்பில்லாத நிலையாகும். மூளை மீண்டும் செயல்பட வாய்ப்புள்ளதா என்பதை கண்டறிய 6 மணி நேரத்தி்ற்கு ஒரு முறை மருத்துவ குழுவினா் இந்த பரிசோதனைகளை இரு முறை மேற்கொள்ளப்பட்ட பின்னரே மூளை இறப்பு என்பது முடிவு செய்யப்படும்”என்று அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

Related Posts