காவிரி விவகாரம்: அதிமுக எம்.பி.முத்துக்கருப்பன் ராஜினாமா!
நம் தமிழக விவசாயிகள் கோரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் . முத்துக்கருப்பன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அதே சமயம் .முத்துக்கருப்பனின் ராஜினாமா ஏற்கப்படுமா? அல்லது, நிராகரிக்கப்படுமா? என்பது ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடு எடுக்கப் போகும் முடிவுகளில் தெரியவரும் என்று தகவல் வருகிறது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கைய்யா நாயுடுவிடம் அளிக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது வேதனை அளிப்பதாக தெரிவித்தவர், தனது ராஜினாமா கடிதத்தை செய்தியாளர்களிடம் இன்று வாசித்து காட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது பதவி காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், மக்களுக்காக ராஜிநாமா செய்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மிகுந்த மனவேதனையுடன் எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன். காவிரி நீர் பிரச்னையால் 19 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரிக்காக அதிமுக கடுமையாக போராடி வருகிறது. இரு மாநில பிரச்னை என்பதால் மத்திய அரசு தான் பிரச்னையை தீர்க்க வேண்டும்.
காவிரி பிரச்னையில் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. முதல்வர் பழனிசாமி அழைத்து என்னை சமாதானம் செய்வார் என்பதால் எனது செல்லிடை பேசியை அணைத்து வைத்துள்ளேன். யார் சொன்னாலும் எனது முடிவில் பின்வாங்கவோ, சமாதானம் அடையவே மாட்டேன்”என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் ரிப்போர்ட்:
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் முத்துக்கருப்பன் எம்.பி! இதில்தான் புது சிக்கலே எழுந்துள்ளது.
ராஜினாமா செய்ய விரும்பும் உறுப்பினர்கள், தங்களது ராஜினாமா கடிதத்தில் எந்த காரணத்தையும் குறிப்பிடக் கூடாது என்பது ராஜ்யசபா விதிகளில் ஒன்று. ஒருவரியில் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று மட்டும் இருக்க வேண்டும். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்வதாக முத்துக்கருப்பன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதால், அவரது ராஜினாமா ஏற்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜூலை 19, 2017 அன்று, உத்தரப்பிரதேசம் மாநிலம் சகரான்பூரில் நடைபெற்ற தலித்துகளுக்கு எதிரான கலவரம் குறித்து, ராஜ்ய சபையில் மாயாவதி காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது, உறுப்பினருக்கு அனுமதிக்கப்பட்ட 3 நிமிட அவகாசம் முடிந்துவிட்டதாக கூறி, மாயாவதியை ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி அமரச் சொன்னார்.
இதனால் கோபமடைந்த மாயாவதி, “நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் குறுக்கே பேசுகிறார்கூடாது, அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், என் பேச்சை நிறுத்த சொல்வது சரியல்ல. எந்த ராஜ்ய சபை விதியில், உறுப்பினர்கள் 3 நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது என்று விதியுள்ளது?” என்று பொங்கி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனது ராஜினாமா கடிதத்தில், மேற்குறிப்பிட்ட காரணங்களை எல்லாம் மூன்று பக்கங்களுக்கு அடுக்கி மாயாவதி சமர்பித்ததால், முதலில் அந்த ராஜினாமா ஏற்க மறுக்கப்பட்டது. பின்னர், அவர் விதிகளுக்கு உட்பட்டு ராஜினாமா கடிதத்தை மீண்டும் சமர்பித்தவுடன் அக்கடிதம் ஏற்கப்பட்டது.
இச்சூழலில், அதிமுக எம்.பி. முத்துக்கருப்பனின் ராஜினாமா ஏற்கப்படுமா? அல்லது, நிராகரிக்கப்படுமா? என்பது ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடு எடுக்கப் போகும் முடிவுகளில் தெரியவரும்.



