இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்1
2015-16ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் தனிநபர் ஈட்டும் வருமானம் மூலம் கோடீஸ்வரர்களாகத் திகழும் பணக்காரர்கள் பற்றிய அறிக்கை ஒன்றை வருமானவரி இலாகா கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் 59,830 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இவர்களின் மொத்த வருமானம் ரூ.1.54 லட்சம் கோடி. 2014-15ஆம் ஆண்டில் ரூ.1 கோடி மற்றும் அதற்கும் மேலாக வருமானம் ஈட்டிய தனி நபர்களின் எண்ணிக்கை 48,417. இவர்களின் மொத்த வருமானம் ரூ.2.05 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 23.5% அதிகரித்துள்ளது.55,331 பேர் ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரை சம்பாதிப்பவர்கள். 3,020 பேர் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பாதிப்பவர்கள். 1,156 பேர் ரூ.10 கோடியில் இருந்து ரூ.25 கோடி வரை சம்பாதிப்பவர்கள் என்றெல்லாம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்.இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் (2017-18) தனிநபர் வருமான வளர்ச்சிவிகிதம் 8.3 சதவிகிதமாக குறையும். தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 782 என்ற அளவில் இருக்கும். 2016-17 நிதி ஆண்டில் தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் 9.7 சதவீதமாக இருந்தது. அப்போது தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 219 ஆகும்.
நம் மத்திய அரசின் புள்ளிவிவர அலுவலகத்தின் முதல் தேசிய வருவாய் முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கைதான் தற்போது இந்த தகவலை கூறுகிறது. 2017-18 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சிவிகிதம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாக 6.5 சதவிகிதமாக இருக்கும். இந்த சரிவுக்கு காரணம், விவசாயம் மற்றும் உற்பத்தி துறைகளின் மோசமான செயல்பாடுகள் என்று சொல்லப்படுகிறது.



