விஜய் 62 அப்டேட்: ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் டெஸ்ட் ஷூட் செய்து, விஜய்யின் லுக்கை முடிவு செய்திருக்கிறார்கள். விஜய்யுடன் நடிக்கவிருப்பவர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
விஜய்யுடன் நடிக்கவுள்ள இதர நடிகர், நடிகைகள் குறித்த தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை முடித்தவுடன், படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.




