ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு!.
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இதில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் என மொத்தம் 59 பேர் போட்டியிடுகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 50 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இடைத்தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்தது. ஒன்பது பேர் கொண்ட பார்வையாளர்கள் குழு இடைத்தேர்தல் கண்காணிப்புக்காக ஆர்.கே.நகருக்கு அனுப்பப்பட்டது.தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இணையாகத் தேர்தல் ஆணைய இயக்குநர்களில் ஒருவரான விக்ரம் பத்ரா சிறப்பு அதிகாரியாகச் சில நாள்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்ற அடுத்த நாள், அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், ஆளுங்கட்சி சார்பில் 100 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக திமுக தரப்பிலிருந்து ஆதாரபூர்வமான புகார் அளிக்கப்பட்டது.15 நாள்களாக தொடர்ந்து நடைபெற்றுவந்த பிரசாரத்தால் ஆர்.கே.நகர் தொகுதி திருவிழாக் கோலம் பூண்டது. பல்வேறு கட்சியினரும் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், கடந்த 19ஆம் தேதியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தது. இதையடுத்து தொகுதியில் உள்ள வெளியாட்கள் வெளியேறவும், டாஸ்மாக் கடைகளைத் தேர்தல் முடியும் வரை மூடவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் இங்கு பிரசாரம் ஓய்ந்த நிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்துக்கு வந்த தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தேர்தல் நேரத்தில் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட வீடியோ இது என்று அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில், நேற்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பதால், அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
வாக்குப்பதிவு ‘வெப்’ கேமரா மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். ஏற்கனவே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பில் இருக்கும் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களிக்கலாம். வாக்களிக்க செல்லும்போது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையையோ அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்களில் ஒன்றையோ எடுத்து சென்று வாக்களிக்கலாம்.
இதனிடையே திமுக வேட்பாளர் மருதுகணேஷ் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மருது கணேஷ், “6000 அல்ல, 60,000 கொடுத்தாலும் ஆர்.கே.நகர் மக்கள் ஏமாற தயாராக இல்லை” என்று தெரிவித்தார்



