ராஜஸ்தானில் கொள்ளையர்கள் சுட்டதில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பலி!
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த முகேஷ்குமார் ( 37). கடந்த 15 வருடங்களாக சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலையில் ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். போன நவம்பர் மாதம் 16-ம் தேதி மதியம் இவர் கடையின் மேல் தளத்தில் துளையிட்டு உள்ளே இறங்கிய இரண்டு வட மாநில நபர்கள் நகைக்கடையில் இருந்த 3கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர். போலீஸ் விசாரணையில், மேல் தளத்தில் உள்ள கடையை சமீபத்தில் ராஜேஷ் என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது. அவனையும் அவனது கூட்டாளிகளையும் போலீசார் தேடினர். சிசிடிவி பதிவில் கொள்ளையர்கள் நகைகளுடன் சாதாரணமாக நடந்து செல்லும் காட்சிப் பதிவு கிடைத்தது.
இந்த கொள்ளை தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைதாகிய நிலையில், மேலும், சிலர் ராஜஸ்தானுக்கு தப்பி சென்றதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்களை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். ஒரு மாத தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருபதாக கிடைத்த தகவலை அடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர்.
இன்று அதிகாலை 2-30 மணி அளவில் அங்குள்ள ஒரு வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கி இருந்ததை அடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளையர்கள் அவர்களை நோக்கி சுடவே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்கவும் நிலைமையை கண்டறியவும் இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் விரைகின்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி(48)நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். ஆவடியில் வசிக்கிறார். மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஒரு பையன் லயோலா கல்லூரியில் முதலாம் ஆண்டும், இன்னொரு மகன் எட்டாம் வகுப்பும் படிக்கின்றனர். கொள்ளையர்களை பிடிக்க சென்றதில் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இன்ஸ்பெக்டர் பெரியமாண்டி மரணச் செய்தி தமிழக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் அவர்கள் தமிழக அரசிற்கு சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்
1.வீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
2.அவர் பணி ஓய்வு பெரும் வயது வரை முழு சம்பளம் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு தரவேண்டும்.
3.அவரது மனைவிக்கு உடனடியாக குரூம்-2 நிலையில் அரசு வேலை வழங்க வேண்டும்,
4.படுகாயம் அடைந்த ஆய்வாளர் முனிசேகர் அவர்களுக்கு உரிய உயர் சிகிச்சை அரசு செலவில் தரப்பட வேண்டும்,
5.இனிவரும் காலங்களில் வெளிமாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க அனுப்பப்படும் போது சிறப்பு பயிற்சி எடுத்த ஆயுதப்படை காவலர்களை துப்பாக்களுடன் பணிக்கு அனுப்பப்பட வேண்டும்,
6.குறைந்தது ஒரு உதவி ஆணையர் தலைமையில் தான் அனுப்பப்பட வேண்டும்,
7.உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் சுட்டுப்பிடிக்க எந்த தடையும் இருக்கக்கூடாது,
8.வெளிமாநில கொள்ளையர்களை கண்காணிக்கவும், கண்டுபிடிக்கவும் தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் அதில் பன்மொழி பேசக்கூடிய காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு பல்வேறு மாநில கள நிலவரங்கள் சூழ்நிலைகளை அறிந்து கொள்ளவும் பல மாநில தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் சிறப்பான வழிவகைகளை உருவாக்கித் தரப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைதான் அவை.




