சினிமா கலைஞர்களுக்கு 100 சவரன் தங்கம்! விஜய் சேதுபதி வழங்குகிறார்!
2007ம் ஆண்டு உலகாயுதா என்ற அமைப்பு ஆக்கபூர்வமான குறிக்கோளுடன் சமூக முன்னேற்றங்களை முதன்மைப்படுத்தி தொடங்க ப்பட்டது. தமிழ் சினிமாவிற்கான முதல் செயல்பாடாக கடந்த 2007 ஃபிப்ரவரி மாதம் பைசெல் நிறுவனத்துடன் இணைந்து ‘இன்றைய சினிமா’ என்ற சினிமா தொழில் நுட்பக் கண்காட்சியை சென்னை வர்த்தக வளாகத்தில் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, பேசும் படம் வெளிவந்து 75 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி 75 கலைஞர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தது.தமிழில் பேசும் படம் துவங்கி 2005 ஆம் ஆண்டு வரை 4373 படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் 1954 வரை அரசின் அங்கீகாரம் இத்தொழிலில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைக்கவில்லை. விருதுகளோ பரிசுகளோ வழங்கி கவுரவிக்கப்படாத அந்த முதுபெரும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது என்று இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தலைமையில் அமைந்த இந்த அமைப்பு முடிவு செய்தது.

அதன் முதற்கட்டம்தான் மார்ச் 8ம் தேதி சென்னை வணிக வளாகத்தில் 1931லிருந்து 35 வரை வெளிவந்த 59 படங்களைத் தேடித் தொகுத்தது. ஆனால், அந்தக் கால கட்டத்தில் வெளிவந்த 59 படங்களில் இரண்டு படங்கள் மட்டுமே தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்தன. மற்றவற்றை இன்றும் காணும் வாய்ப்பில்லை. அதனால் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த மொத்தப் படக் கலைஞர்களுக்கும் பரிசளிப்பது என முடிவு செய்யப்பட்டது. அப்படங்களில் பணியாற்றிய கலைஞர்களில், வாழும்
கலைஞர்களுக்கு தமிழ் டாக்கி விருதும், ரூபாய் 5000 ரொக்கப் பரிசும் வழங்க முடிவு செய்யப்பட்டது. காலஞ்சென்ற கலைஞர்களின் வாரிசுகளுக்கு தமிழ்டாக்கி விருதும் தர முடிவு செய்யப்பட்டு வழங்கியது..
இந்நிலையில் இப்போது தமிழ் சினிமா 100 ஆண்டுகள் கடந்ததையொட்டி ‘உலகாயுதா ஃபவுண்டேஷன்’ சினிமாவில் பணியாற்றிய 100 தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு சவரன் வீதம் 100 தங்க பதக்கங்கள் வழங்கவிருக்கிறது.
இது குறித்து ‘உலகாயுதா ஃபவுண்டேஷன்’ நிறுவனரும், இயக்குனருமான எஸ்.பி.ஜனநாதன் கூறும்போது, ‘‘சினிமா கலையை வளர்ப்பதற்காக தங்கள் வாழ்வையே பணயம் வைத்து உழைத்த ஒவ்வொரு கலைஞனையும் கௌரவப்படுத்தவே ‘உலகாயுதா’ விரும்புகிறது. ஆனால் அது சாத்தியமற்றது,. அதனால் திரைப்படத் துறையிலுள்ள ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மூன்று மூத்த கலைஞர்களை தேர்வு செய்து மொத்தம் 100 திரைக் கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சவரன் என 100 சவரன் தங்கப்பதக்கம் பரிசளிக்க தீர்மானித்துள்ளோம்.
இந்த 100 தங்கப் பதக்கத்திற்கான மொத்த செலவையும் நடிகர் விஜய்சேதுபதி ஏற்றுள்ளார். இதற்கான விழா வருகிற மே 1-ஆம தேதி மாலை 4 மணிக்கு சென்னையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவிற்கான முதல் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கிய நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாஸ் ஆகியோருடைய படங்கள் திறந்து வைக்கப்பட உள்ளது’’ என்றார்.
இது குறித்து விஜய் சேதுபதி பேசும்போது, ‘‘எனக்கு இந்த வாழ்க்கை சினிமா தந்தது. சினிமாவில் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள். இதை நான் என் கண் முன்னால் நிறைய பார்த்திருக்கிறேன், இன்னமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்படி கஷ்டப்படுபவர்கள் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்பது என் ஆசை! ஆனால் அது முடியாத காரியம். ஆனால் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். அந்த வகையில் தான் இந்த நிகழ்வும்! இது ஒரு சிறு உதவி தான்! இதை பார்த்து
யாராவது இதுபோன்ற உதவிகளை செய்ய முன் வந்தால் அது பெரிய விஷயம்! என்னை வாழ வைக்கும் சினிமாவுக்கு, சினிமா கலைஞர்களுக்கு என்னால் முடிந்த் உதவிகளை செய்வது எதிர்காலத்திலும் தொடரும்’’ என்றார் விஜய்சேதுபதி!
தொழிலாளர்கள் தினமான மே-1ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து
கொள்ளவிருக்கிறார்கள்.


