கூட்டு பெருங்காயம் என்ற பெயரிலான கலப்பட உணவுப் பொருள்!..
நம் நாட்டின் பாரம்பரிய சமையலில் கட்டாயம் இடம் பெறுவது பெருங்காயம். நறுமணமூட்டியாகவும் சுவையூட்டியாகவும் பயன்படுத்தும் பெருங்காயத்தை சித்த, ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள். மேலும் பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும் என்று நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

அந்த கூட்டு பெருங்காயம் …இந்த கூட்டு பெருங்காயம் …அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு. ஆனால் இது நம் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் என்று உறுதிப்படுத்தி உள்ளார்கள்.
ஆம்..என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.
அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?
ஒரு வகையான அராபிய பிசின் 60%,
மைதா 30%,
பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10%
இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம். இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!!
இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. “பெருங்காய டப்பாக்களின் மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால் நாம்தான் கவனிப்பதில்லை”-
அப்படியானால் இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்? வயிறு புண்ணாகும்….வயிற்றில் வாயு அதிகமாகும் ..நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..மயக்கம் வரும் …அதே சமயம் பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.
ஆனால் இது குறித்து சித்த மருத்துவர்களிடம் விளக்கம் கேட்ட போது, “`பெருங்காயத்தின் தாவரவியல் பெயர் `பெருலா அசபொட்டிடா’. ஆங்கிலத்தில் அசபொட்டிடா (Asafoetida) என்று அழைப்பார்கள். இது குட்டையாக மரம் போல வளரும் தாவரம். ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளில் மட்டும்தான் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. இந்த நாடுகளில் இருந்தே உலகெங்கும் ஏற்றுமதியாகிறது. இத்தாவரம் பூக்கள் பூக்கும் பருவத்தில் தண்டை வெட்டினால் அதிலிருந்து பிசின் வடியும். அந்த பிசினிலிருந்துதான் பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது.
முதலில் கட்டி பெருங்காயமாக தயாரித்தார்கள். அதுவே பொடித்து கருவேல பிசின், கோதுமை இரண்டும் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்தக் கலவையே கூட்டுப் பெருங்காயம் என்று சொல்கிறார்கள். கலவையில் சேர்க்கப்படும் கருவேல பிசினை கம் அராபிக் (Gum Arabic) என டப்பாவில் குறிப்பிட்டிருப்பார்கள். இதைத்தான் பசை என சிலர் நினைத்து கொள்கிறார்கள்.
அது தவறு. பெருங்காயத்தை அதன் ஒரிஜினல் வடிவத்தில் சமையலில் சேர்க்க முடியாது. காரம் மிக அதிகமாக இருக்கும். ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ தனிப்பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய். அவ்வளவு விலை கொடுத்து வாங்கி உபயோகிக்க முடியாது. இதனால் பெருங்காய தயாரிப்பு நிறுவனங்கள் அதோடு கொஞ்சம் கருவேல பிசின் மற்றும் கோதுமையை கலந்து பவுடராக்கி விற்பனை செய்கின்றன.
சில நிறுவனங்கள் கோதுமைக்குப் பதிலாக விலை மலிவாக கிடைக்கும் மைதாவை பெருங்காயத்தில் கலக்கின்றன. மைதா சேர்த்தால் பெருங்காயத்தின் மருத்துவத் தன்மை குறைந்துவிடும். இன்னும் சில நிறுவனங்கள் லாபநோக்கோடு பெருங்காய எசன்ஸை கலக்கிறார்கள். இதில் வெறும் வாசனைதான் இருக்கும். இப்படி கலப்பட முறையில் தயாரிக்கும் பெருங்காயம் எந்த விதத்திலும் பயனைத் தராது.
பெருங்காயத்தின் கழிவுகள், குப்பைகள், டர்பன்டைன் ஆயிலின் கழிவுகள் போன்றவற்றைக் கலந்து பெருங்காயம் என்ற பெயரில் தயாரித்து விற்கிறார்கள். இந்தக் கழிவுகளுடன் வாசனைக்காக சிறிது எசன்ஸை மட்டும் கலந்து விடுவார்கள். தரமற்ற இந்த விற்பனை தொடராமல், உணவுக்கட்டுப்பாட்டு நிறுவனம் கட்டுப்படுத்த வேண்டும்” என்றனர்.
மேலும் மெய்யாலுமே மருத்துவ பயன்கள் உள்ள பெருங்காயத்தை கலப்படம் செய்கிறார்கள் என்ற காரணத்துக்காக மட்டும் தவிர்க்க வேண்டியதில்லை. நீங்கள் வாங்கும் பெருங்காயம் உண்மையானதுதானா என்று கண்டறிய, அதை ஒரு தம்ளர் தண்ணீரில் கரைக்க வேண்டும். ஒரிஜினல் எனில் நீரில் நன்கு கரைந்து பால் போல காட்சியளிக்கும். கலப்படம் இருந்தால் கரையாமல் குப்பை போல நீரின் மேலே மிதக்க ஆரம்பிக்கும். அதோடு சிறு கட்டிகளாக மிதக்கும். இந்த சோதனையை நீங்களே வீட்டில் செய்து பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்கள்.


