ஜன.21 முதல் தமிழகத்தில் கள் விற்பனை: தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு!
“கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை என்ற அடிப்படையில் 2014, ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி விற்பனை செய்யப்படும்.தமி்ழ்நாடு கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கைகளை நியாயப்படுத்தும் விதத்தில் அரசு மற்றும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிசம்பர் 3-ம் தேதி திருச்சியில் அஸ்மேத யாகம் நடத்தப்படும்.”என்று தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தடையை மீறி 2014, ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கி விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது.திருச்சியில் இந்த இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் இதோ:
உலகில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. எந்தவொரு நாட்டிலும் கள்ளுக்குத் தடை இல்லை. ஆனால், தமிழகத்தில் கள் இறக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உலகாளவிய நடைமுறைக்கு எதிரானது.
கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை என்ற அடிப்படையில் 2014, ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி விற்பனை செய்யப்படும்.
தமி்ழ்நாடு கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கைகளை நியாயப்படுத்தும் விதத்தில் அரசு மற்றும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிசம்பர் 3-ம் தேதி திருச்சியில் அஸ்மேத யாகம் நடத்தப்படும்.
வாகன எரிபொருளாக எத்தனாலைத் தயாரித்து பயன்படுத்த வலியுறுத்தி சென்னையிலிருந்து தில்லிக்கு பயணம் விரைவில் மேற்கொள்ளப்படும். விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இந்த அறிக்கையை அரசியல் கட்சிகள் உதாசீனப்படுத்திால் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தேர்தலில் போட்டியிடப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நல்லசாமி,”பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் நிறுவனத்துக்காக பால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதுபோல, தென்னை, பனை விவசாயிகளிடமிருந்து கள்ளை அரசு பெற்று டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 5 கோடி தென்னை, பனை மரங்கள் இருந்த நிலையில், கட்டடக் கட்டுமானம், விரிவாக்கம், வறட்சி போன்ற காரணங்களில் 17 சதவிகித மரங்கள் அழிந்துவிட்டன. இருக்கும் பனைகளைக் காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
எனவே விவசாயிகளைப் பாதுகாக்கும் அரசாக தமிழக அரசு மாற உடனடியாக கள்ளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும்”என்றார் நல்லசாமி.


