பன்னாட்டுத் தேயிலை நாள் @ வேர்ல்ட் டீ டே!

பன்னாட்டுத் தேயிலை நாள் @ வேர்ல்ட் டீ டே!

டீ குடிக்கலாம் என்று ஹோட்டல் சென்றால், “டீயா, காபியா’’ என்று கேட்ட காலம் போய், “கிரீன் டீயா, லெமன் டீயா வொயிட் டீயா” எனக் கேட்டு, கலர் கலராய் டீ விற்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழக்கமாகச் சாப்பிடும் டீ, ‘டஸ்ட் டீ’ வகையில் வரும். டீ வகைகளில் உடலுக்கு எந்த நலனையும் தராத டீ இது.

tea day dec 15

தற்போது உலகில் தண்ணீருக்கு அடுத்த படியாக உலக மக்களால் அதிக அளவில் அருந்தப்படும் பானமாக தேநீர் என்ப்படும் டீ உள்ளது. தேயிலையை சர்வ நோய் நிவாரணி பானமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தமையினால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன. எனவே தேயிலை உற்பத்தியின் தேவை மக்கள்தொகை அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்துச் செல்லவேண்டிய தேவை உள்ளது. எனவே, தேயிலை உற்பத்திற்கான சூழலைக் கொண்டுள்ள நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அறுபதுகளுக்கு முன்பதாக சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளே தேயிலையை உற்பத்தி செய்து வந்தன. ஆனால் இன்று உலகின் 58 நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் பிரிட்டிஷார் நம் நாட்டில் திணித்தவற்றுள் மிக முக்கியமானது தேயிலை.

அவர்கள் தேவைக்காக நம்மை பயிரிடச் சொல்லி பின்பு நம்மையே நுகர வைத்து அதன் தேவையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டினார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு சர்வதேச அளவில் தேயிலையின் தேவை அதிகரித்தையொட்டி இந்திய அரசு தேயிலை பயிரிடுவதை ஊக்கப்படுத்தியது. மலைவாழ் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பையும் அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் தேயிலை அளித்து வருகிறது.

சர்வதேச தேயிலை தொழிலாளர் மாநாடு ஒன்றின் தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேஸிலின் போர்டே அல்க்கிரியில் உலக சமூக மாமன்ற கூடுதல் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் ஆங்கிலேயரின் ஆட்சியில் முதலாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் நடத்திய முதலாவது சம்பளப் போராட்டத்தினை நினைவு கூறும் விதமாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் தேதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு புது டெல்லியில் 2005 டிசம்பர் 15 அன்று நடந்தேறியது.

இந்த தேயிலை துறையை பற்றியும் தேநீரை பற்றியும் சில தகவல்கள் உங்களுக்காக….

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தென்மேற்கு சீனாவில் ஷாங் பேரரசர்கள் தேநீரை மருந்தாக பயன்படுத்தியதற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன.

கி.மு.800 களில் தேநீர் அருந்தும் பழக்கம் ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானிலிருந்தே ஐரோப்பிய நாடுகளுக்கு தேயிலை பரவியது.

17ஆம் நூற்றாண்டில் தான் பிரிட்டனில் தேநீர் மிக பிரபலமடைந்தது. இதன் பிறகே இந்தியாவில் தேயிலை உற்பத்தியை பிரிட்டிஷார் தொடங்கினர்.

முதன் முதலில் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டவர் மணிராம் தேவான்

தேயிலையை பற்றி படிக்கக்கூடிய கலைக்கு டேசியோகிராபி (Tasseography) என்று பெயர்.

சீனா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் தேநீர் விழா நடத்தப்படுகிறது.

மத விழாக்கள், திருமணம் போன்றவற்றின் போது தேநீர் விருந்து நடத்தப்படுகிறது.

சீனர்கள் இதை `ஆர்ட் ஆஃப் டீ’ என்று அழைக்கிறார்கள்.

இந்தியாவில் இரண்டாவது அதிகம் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய துறை தேயிலை துறை.

ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் தேநீர் அருந்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் பிரிட்டிஷார் விளம்பரப்படுத்தினர். 1920-ம் ஆண்டுக்கு பிறகுதான் இந்தியாவில் தேநீர் அருந்துவது மிகவும் பரவலானது.

உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில்

சீனாவின் பங்கு 36%

இந்தியாவின் பங்கு 22.6%

உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் நுகர்வு 25%

இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் அஸ்ஸாம். அஸ்ஸாமில் 3,04,000 ஹெக்டேரில் தேயிலை பயிரிடப்படுகிறது. அஸ்ஸாம் டீ என்பது உலகளவில் மிகவும் பிரபலம்.

2014-ம் ஆண்டு தகவலின் படி இந்தியாவில் தேயிலை சந்தையின் மதிப்பு 20,000 கோடி ரூபாய். இதில் கிரீன் டீ சந்தையின் மதிப்பு 250 கோடி ரூபாய்

எகிப்தியர்கள் ஹைபிஸ்கஸ் என்று அழைக்கக்கூடிய செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் டீயையே அருந்துகின்றனர். இதன் பெயர் கார்ஹடே.

ஐரோப்பியர்கள் மாலை 3 மணியிலிருந்து 6 மணிக்குள் டீ அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்

உடல் எடையை குறைப்பதற்கு வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் கிரீன் டீயை விரும்புகிறார்கள். 1800களுக்குப் பிறகு கிரீன் டீ உலகளவில் பிரபலமடைந்தது. அதிலும் அமெரிக்கர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

கமீலியா சைனசிஸ் என்ற தேயிலையிலிருந்துதான் இந்த டீத்தூள் தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் ஜப்பான்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட் :

•உலகம் முழுவதும் 1500 தேநீர் வகைகள் உள்ளன.

•சீனாவில் உள்ள ஹூனான் பிரதேசம்தான் தேயிலையின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அங்கு கிடைத்த 800 ஆண்டுகள் பழமையான தேயிலைச் செடிகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

•சீனாவில் கிரீன் டீ தேசிய பானமாகும்.

•உலகிலேயே அதிகமாகத் தேநீர் பருகுபவர்கள் உள்ள நாடு இந்தியாதான். நாட்டின் தேயிலை உற்பத்தியில் 80 சதவீதத்தையும், உலக உற்பத்தியில் 20 சதவீதத்தையும் ருசிப்பவர்கள் இந்தியர்கள்தாம்.

•இந்தியாவில் அசாம், டார்ஜிலிங், வட வங்காளம் மற்றும் நீலகிரி டீ வகைகள் அதிகமாகக் கிடைக்கின்றன.

•சாதாரண டீயுடன் சேர்ந்து இப்போது ஆர்கானிக் டீ, கிரீன் டீ, ஒயிட் டீ, ஹுலாங் டீ, ஃபிளேவர்டு டீ, டீ காஃப் டீ, ஹெர்பல் டீ போன்ற மருத்துவப் பயன்பாடுள்ள தேநீர் வகைகளும் இப்போது கிடைக்கின்றன.

•ஷன்ஷா, கியமாகரோ, ஜென்மாய்ஷா, மேட்ஷா, பன்ஷா, குகிஷா, ஹங்ஜிஷா இவையெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா? ஜப்பானில் கிடைக்கும் புகழ் பெற்ற டீயின் பெயர்கள்.

•உலகத்தில் ஜப்பானியர் மட்டுமே சா நோ ஹூ என்ற டீ விழா எடுக்கிறார்கள். தேநீர் உடல் நலத்துக்கு மட்டுமல்ல, ஆன்மீக நலனுக்கும் உகந்தது என்பது அவர்களுடைய நம்பிக்கை.

•தேநீரைப் பற்றியும், தேயிலைத் தொழிலைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கென்றே ஓர் இதழ் வெளிவருகிறது. பெயர்: டீ தி மகஸின். இந்த ஆங்கில இதழின் நிறுவனரான பேர்ஸ் டெக்ஸ்டர் என்ற பெண்மணி ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார். அதற்குப் பெயர்: தி டீ ஸ்கூல்.

Related Posts