32°C

மண்ணில் தழைக்கட்டும் மனிதாபிமானம்: சுயநல இருள் கிழிக்கும் ‘உலக மனிதநேய நாள்’!

admin Published: June 21, 2026 6 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

ண்டுதோறும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் ‘உலக மனிதநேய நாள்’ (World Humanist Day) மிக முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது. விஞ்ஞானத்தின் துணையோடு மனிதன் நிலவில் தடம் பதித்துவிட்ட போதிலும், தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் சக மனிதனின் மனதில் இடம் பிடிக்க முடிந்ததா என்றால், அங்குக் கேள்விக்குறிதான் எஞ்சுகிறது. இதனைத்தான் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங், “இலட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள சந்திர மண்டலத்தில் இடம் பிடித்த மனிதனால், பக்கத்து வீட்டில் உள்ள மனிதர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லையே” என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டார். மனிதநேயத்தின் அவசியத்தை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால், இன்றைய உலகில் மனிதநேயம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வணிக நோக்கோடும், சுயநலத்தோடும் செயல்படும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், பேராசை பிடித்த மனிதர்கள் என சமுதாயம் சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மனிதாபிமானமும், உயிரிரக்கமும் மறைந்து வரும் இந்த நவீன யுகத்தில், மனிதநேயத்தின் உன்னதத்தை உலகிற்கு உரக்கச் சொல்லும் நாளாக இந்த ஜூன் 21 அமைகிறது.

தமிழ் மண்ணின் அறமும் இலக்கியச் சான்றுகளும்

“அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு” என்பார் திருவள்ளுவர். எலும்பும் தோலும் போர்த்திய உடம்பை வைத்துக்கொண்டு மனிதநேய உணர்வுகளின்றி எத்தனை கோடி பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என கணக்கிடத் தேவையலை. ஏனெனில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மனித குலம் அப்படித்தான் இருக்கிறது. நமது முன்னோர்கள் மனிதநேயத்தை வெறும் சொல்லாக மதிக்காமல், வாழ்வியல் நெறியாகவே வாழ்ந்து காட்டியுள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளும், “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்யமும், “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற மகாகவி பாரதியின் சினமும் தமிழ் மண் உலகிற்குத் தந்த உன்னதமான மனிதநேயக் கொடைகள். ஆனால், நாம்கூட இன்று பழம்பெருமைகளில் மயங்கி புதிய சரித்திரம் படைக்க மறந்து வருகிறோம். “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ” என்ற பாரதியின் வரிகளை நாம் மீண்டும் சிந்திக்க வேண்டும்.

சங்க காலத்து கடையெழு வள்ளல்கள் தங்களது அளப்பரிய கருணைச் செயல்களால் மனிதநேயத்தின் சிகரங்களாகத் திகழ்ந்தனர்:

  • குளிரால் நடுங்கிய காட்டு மயிலுக்குத் தன் போர்வையைக் கொடுத்தான் பேகன்.

  • பற்றுக் கோடின்றி வாடிய முல்லைக்கொடி படரத் தன் அரச தேரினையே ஈந்தான் பாரி.

  • வலிமைமிக்க குதிரைகளை இரவலர்களுக்குக் கொடையாக வழங்கினான் காரி.

  • ஒளிமிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் சான்றோர்களுக்குக் கொடுத்தான் ஆய்.

  • நீண்ட நாட்கள் உயிர் வாழ வைக்கும் அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல், தமிழ் தழைக்க அவ்வைக்கு ஈந்தான் அதியமான்.

  • பசியோடு வந்தவர்களுக்கு அள்ளி வழங்கி மகிழ்ந்தான் நள்ளி.

  • கூத்தாடுபவர்களுக்குத் தன் வளமான நாடுகளையே பரிசாக அளித்தான் ஓரி.

வானுலக அமிர்தமே கிடைத்தாலும் அதைப் பிறருக்குக் கொடுத்து உண்ணும் தகைமையாளர்களாலும், தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் சான்றோர்களாலும்தான் இந்த உலகம் இன்னமும் அழியாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று புறநானூறு நமது முன்னோர்களின் மனிதநேயப் பண்பைப் பறைசாற்றுகிறது.

இதிகாசங்களும் ஆன்மீகமும் காட்டும் பிறரன்பு

மனிதநேயம் என்பது போர்க்களத்திலும் போற்றப்பட வேண்டிய ஒன்று என்பதை நமது இதிகாசங்கள் உணர்த்துகின்றன. ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் மாலை நேரங்களுக்குப் பின் போர் செய்வது தவிர்க்கப்பட்டது; பெண்கள், குழந்தைகள் மற்றும் நிராயுதபாணிகள் மீது ஆயுதம் ஏந்துவது விலக்கப்பட்டது. போர்க்களத்தில் ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக நின்ற எதிரியான ராவணனைப் பார்த்து, ராமன் “இன்று போய் நாளை வா” என்று கூறியதன் பின்னணியில் இருப்பது மனிதாபிமானமே அன்றி வேறில்லை. தன்னைத் தாக்கும் பகைவர்களுக்கும் தீங்கு செய்யாத அஹிம்சை வழியைத் தன் போராட்டக் களமாக்கிக் காட்டினார் அண்ணல் காந்திஜி. “நம் கண் முன்னால் காணும் சக மனிதனை நேசிக்க இயலவில்லை என்றால், கண்களுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பு செலுத்த இயலும்?” என்ற வினாவிற்குத் தன் வாழ்நாளையே விடையாக அர்ப்பணித்தார் அன்னை தெரசா.

ஒருமுறை திருத்தலம் அருகே, ஒரு குடும்பத்தினர் உணவருந்த உட்கார, ஓர் ஏழைத்தாய் வந்து பிச்சை கேட்டார். ஆனால் குடும்பத்தலைவரோ, பிச்சையிடாதது மட்டுமல்ல, அவரைத் தட்டியும் அனுப்பினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சந்நியாசி, “சகமனிதரை வெறுத்துவிட்டு, உங்களால் எப்படி இறைவனிடம் அன்புகூரமுடிகிறது. இறைவனின் குழந்தையான அந்த ஏழைத்தாய்க்கு நீங்கள் உதவ மறுத்ததை, இறைவன் ஏற்றுக்கொள்வாரா?” என்று சாடினார். உண்மையான அன்பு என்பது கடவுளை வழிபடுவதில் மட்டும் இல்லை; கடவுளின் சாயலாக இருக்கும் ஏழை எளிய மனிதர்களை நேசிப்பதில்தான் இருக்கிறது. “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற வாசகம் உணர்த்துவதும் இதைத்தான். “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டபோது, உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வதும், உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வதும், என பதில் வந்தது. இறையன்பு பிறரன்பு இவை இரண்டும் இரண்டு கண்களைப் போன்றன. கண்ணால் காணும் மனிதனை மதிக்காதவனால், காணாத கடவுளை ஒருபோதும் முழுமையாக உணர முடியாது.

மிருகமாகும் மனிதனும் தழைத்து நிற்கும் உலகமும்

மனிதகுலம் வரலாற்றில் கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களை எதிர்கொண்டு வென்றது. காடுகளில் கொடிய மிருகங்களின் தாக்குதல்களைச் சமாளித்து நாகரிக மனிதனாக வாழத் துவங்கியது. ஆனால், மனிதன் சமுதாயமாக வாழத் தொடங்கிய பிறகு, மனிதர்களிலேயே பலர் மிருகங்களாக மாறி, மற்றவர்களை இனத்தின் பெயரால், நிறத்தின் தன்மையால், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தாக்கத் தலைப்பட்டனர், தாக்கிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான் இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது.

நாம், நமது என்ற பரந்த வட்டத்தில் வாழ வேண்டிய மனிதன், நான், எனது என்ற குறுகிய வட்டத்தில் சுருங்கிக் கொண்டிறான். எதையும் சாதித்துவிடலாம் என்ற இளைஞர்களின் தவறான சிந்தனை, மக்களை பகடைக்காய்களாக்கி தவறான வழி நடத்தி, காரியங்களை சாதிக்கும் நேர்மையற்ற அரசியல்வாதிகள், எதையும் கண்டுகொள்ளாமல் சுயநலத்துடன் இருக்கும் மக்கள், காசுக்காக மனசாட்சியை விற்று வாக்களிக்கும் வாக்காளர்கள், எல்லாவற்றிற்கும் இலஞ்சம் கேட்கும் இரக்கமற்ற அரசு அலுவலர்கள் போன்ற மனித நேயமற்ற மனிதர்கள் சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகில் மனிதநேயம் குறைய குறைய உலகம் விரைவில் அழிந்து விடும் ஆபத்து அச்சுறுத்துகின்றது.

ஆயினும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்போடும், தன்னலமற்ற பொதுநலத்தோடும் மனிதநேயத்தைக் காக்கும் உத்தமர்கள் சிலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நேரும்போதும், போர் மற்றும் வன்முறைச் சம்பவங்களின் போதும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கவும், அகதிகளாக நிற்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் களத்தில் நிற்கும் மனிதநேயப் பண்பாளர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களின் அந்த உன்னத சேவையை நன்றியறிதலுடன் நினைவுகூரும் நாளாக இத்தினம் அமைகிறது.

பிறர் நலம் பேணும் சமுதாயக் கடமை

சக மனிதர்களிடம் காட்டும் எல்லையற்ற அன்பும், உயிரிரக்கப் பண்பும்தான் மனிதநேயத்தின் அடித்தளம். பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துயரம் துடைத்தல், இளகிய இதயத்தோடு உறுதியான நற்செயல் புரிவதே மனித வாழ்வின் பயன். நாம் இந்த உலகில் வாழ்வது ஒரே ஒரு முறைதான்; அந்த வாழ்வு பிறருக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும்.

எல்லைகள் கடந்து ஏழைகளுக்கு இரங்குவதும், பசிப்பிணி நீக்கி மனிதர்களை வாழ வைப்பதும் நம் ஒவ்வொருவரின் சமுதாயக் கடமையாகும். “அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய், தம்நோய்போல் போற்றாக் கடை” என்கிறார் வள்ளுவர். சக உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதாவிட்டால், மனிதன் பெற்ற அறிவினால் எந்தப் பயனும் இல்லை. சுயநலமும் பேராசையும் பெருகிவிட்ட இந்த உலகை அழிவிலிருந்து காப்பாற்றுவது மனிதநேயம் மட்டுமே. “பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதர்கள் இன்றும் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் அழியாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதநேய விதைகளை அடுத்த தலைமுறையின் நெஞ்சிலும் விதைப்போம்!