சின்னத்திரை நடிகர்களுக்கு கவுன்சலிங்!
சின்னத்திரை நடிகர்கள் சங்க 11வது பொதுக்குழு, வடபழநியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தலைவர் ஜி.சிவன் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண் முன்னிலை வகித்தனர். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்துக்கு ெசாந்தக் கட்டிடம் கட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது, நடிகர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க அவர்களின் போட்டோ ஆல்பம் மற்றும் அவர்களைப் பற்றிய விவரங்களை அறிவதற்கு இணையதளம் தொடங்குவது, சின்னத்திரை நடிகர்-நடிகைகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் இப்போது அதிகரித்து வருவதால், அதைத் தடுக்க சங்கத்தின் மூலம் மனநல நிபுணர்களை நியமித்து, சம்பந்தப்பட்டவருக்கு கவுன்சலிங் அளிப்பது என, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது பொதுக்குழுவில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசியதாவது:நான் குறும்படங்களிலும், சினிமாவிலும் நடிப்பதற்கு முன், டி.வியில் ‘பெண்’ என்ற தொடரில் சீதாவின் மகனாக நடித்தேன். அன்று வாங்கிய சம்பளம்தான், குடும்பத்தின் கஷ்டத்தைப் போக்கியது. தொடர்ந்து நடிக்க விரும்பிய எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன்.
இப்போது சினிமாவில் முன்னேறி வருகிறேன். நடிப்பு சம்பந்தமாக எனக்குப் பிள்ளையார் சுழி போட்டது, சின்னத்திரை. இப்போது டி.வி தொடர்களின் கதைகள் ஒரேமாதிரி இருப்பதாகச் சொல்கிறார்கள். வெவ்வேறு கதைக்களங்களில் தொடர்கள் வர வேண்டும். அதற்கு இயக்குனர்கள்தான் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். டி.வி நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள், கதாசிரியர்கள் அனைவரும் டி.வி தொடரைஅடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஏராளமான டி.வி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.


