தமிழ் குரல் / AI Voice
நவீன தொழில்நுட்பம் பற்றி வாயடைத்து பேசும் நாம், மூன்று வேளையும் சாப்பிடுகிறோம். ஆனால் அதற்கான உணவை படைக்கும் விவசாயத்தையும் விவசாயிகளையும் ஒரு பொருட்டாகவே பார்ப்பதில்லை. அப்படித்தான், பலவிதமான தேர்தல்களில், இந்த உள்ளாட்சி தேர்தல் பற்றிய பார்வையும்.

வீடுகட்டுதல், பிள்ளைகள் கல்வி, திருமணம் போன்ற நீண்ட கால திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தீர்மானித்துவிட்டு அதற்காக சில காரியங்களை வித்திட்டுவிடுவோம். இருப்பினும், தினந்தோறும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்க மாட்டோம். அதுபோலத்தான் நாடாளுமன்றத்தேர்தலும். அதன்மூலம் நமக்கு பெரிய விஷயங்கள் கிடைத்தாலும், நேரடியாக என்பதைவிட, நம்மையும் தாண்டி நாட்டிற்கே பரவலாக அமையக்கூடியவை. இதேபோல,மாதாந்திர திட்டச்செலவுகளுக்கு நிகரானது, மாநில சட்டசபை தேர்தல். இதனுடைய பலன்கள் ஓரளவுக்கு, நமக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் நாம் இருக்கும் இடத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளை நேரடியாக நிறைவேற்ற வேண்டிய இடத்தில் உள்ளது உள்ளாட்சி தேர்தல்தான். நாமோ, ஏதோ வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் என்று இரண்டாம் கட்ட ரகத்தில் வைத்தே அவற்றைப்பற்றி பேசி வருகிறோம். நாடாளுமன்றம், சட்டமன்றங்களை விட நமக்கு மிகவும் வேண்டியவை உள்ளாட்சி அமைப்புகளே.
உதாரணத்திற்கு ஒரு ‘சாதாரண’ கிராம பஞ்சாயத்தை பார்ப்போம். அதன் பணிகளும் அதிகார வரம்புகளும் பிரமிப்பாகவே இருக்கும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தும் வீடு என்று வரும்போது முதலில் தேவை குடிநீர்தான். இந்த குடிநீரைப்பெற வேண்டுமானால், அதற்க்கான இணைப்புகள் வேண்டுமானால் மனுவோடு போக வேண்டிய இடம் பிரதமர் அலுவலகமோ, முதலமைச்சர் அலுவலகமோ அல்ல, நம் அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்குத்தான். அப்புறம், ஒரு நாள் தெருவில் குப்பைகளை அகற்றாவிட்டாலும், வீட்டுக்குப்பைகளை அள்ளிச்செல்ல வண்டிகள் வராவிட்டாலும் எல்லாமே நாறிப்போய்விடும். இதற்கான வேலைகளை தினமும் செய்வது, உள்ளாட்சி அமைப்புகள்தான்.
பாதாள சாக்கடை இணைப்பு வேண்டும் என்றாலும் அங்குதான் நாடவேண்டும். யோசித்துபாருங்கள், வீட்டிற்கோ, கட்டிடத்திற்கோ புதைவடிகால் வசதி இல்லாவிட்டால் என்னென்ன நடக்கும்? வெளியேறும் கழிவு நீருக்காக பிரமாண்ட செப்டிக் டேங் கட்டவேண்டும். அது நிரம்பிவிட்டால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியதிருக்கும். இதற்கெல்லாம் பெரும் தொகை செலவாகும் என்பது, சொல்லித் தெரிய வேண்டியதேயில்லை.
தெருவிளக்குகள், பொது நீர்தேக்க தொட்டிகள், பள்ளிகள் என பல விஷயங்களை நிர்மாணித்து தொடர்ந்து பராமரிப்பது உள்ளாட்சிகளே. ஆறுமாதத்திற்கொருமுறை மக்கள் கட்டும் சொத்துவரி, குடிநீர்வரி, பாதாள சாக்கடை இணைப்புக்கான வரி எவ்வளவு என்பது போன்றவற்றை நேரடியாக தீர்மானிப்பது, முதலமைச்சரோ, அமைச்சர்களோ அல்ல. மக்களின் அருகிலேயே இருக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள்தான்.மாநகராட்சி, நகராட்சிகளை காட்டிலும் மிகவும் வலுவான அதிகாரம் பெற்றவை கிராம பஞ்சாயத்துக்கள். அவற்றின் ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையையும் அதன் எல்லைக்குள் யாரும் நடத்திவிடமுடியாது.
உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான கோகோ கோலா கம்பெனிக்கு எதிராக, ஒற்றை தீர்மானத்தை கொண்டுவந்து அங்கிருந்து விரட்டியடித்தது கேரளாவில் உள்ள பிளாச்சிமடா பஞ்சாயத்து. சாலைகள் அமைத்தல், ஏரி, குளங்களை தூர்வாருதல், பராமரித்தல் என பல முக்கியமான பணிகள், ஆரம்பகட்டத்தில் சார்ந்திருப்பது உள்ளாட்சிகளையே. மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக சகாயம் இருந்தபோது, கூத்தங்குடி ஊராட்சியில் சுற்றுவட்டார உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளிடையே பேசியதை பார்ப்போம்.
‘’நீங்கள் பதவியில் இருக்கும் காலத்தில் உங்கள் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். ஏரி, குளங்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். குளங்களின் கரைகளை வலுப்படுத்த, குளங்களை ஆழப்படுத்த, வரத்து கால்வாய்களை ஆழப்படுத்த, அகலப்படுத்த, கரைகளில் மரங்கள் நடுவதற்கு, ஒரு முன்மாதிரி ஏரி, குளங்களை உருவாக்குவதற்கு நீங்கள் முன்வர வேண்டும். ஏனென்றால் ஏரி, குளங்கள் தான் நம்முடைய வேளாண்மைக்கு, அவசியமான நீர் ஆதாரங்கள்.
ஊராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை. எனவே, உங்கள் ஊராட்சிகளிலுள்ள அடிப்படை பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, அதில் எந்த பிரச்சனைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.உங்கள் கடமைகள் மிகப்பெரியது. அதற்கான நிதியாதாரமும் மிகப் பெரியது. உங்கள் நிதியாதாரத்தையும் தாண்டி நிதி தேவைப்படும் சூழ்நிலையில் அதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லுங்கள். நீங்கள் நினைத்தால் அனைத்துமே சாத்தியம்; அனைத்துமே சரித்திரம்.”
உள்ளாட்சிகளின் விஸ்வரூபத்தை பார்க்க வேண்டுமானால் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம்-1994ஐ புரட்டினால் போதும். அங்கே, விதி எண் 110 தொடங்கி நீண்டுகொண்டுபோகும் விதிகளை பார்த்தால், அடேங்கப்பா இவ்வளவு அதிகாரமா என வியந்துபோவீர்கள். பெட்டிக்கடை என்றாலும் சரி, பெரிய வணிகவளாகம் என்றாலும் சரி. பஞ்சாயத்தின் எல்லைக்குள் வந்துவிட்டால் விதி எண் 148-ன்படி அவற்றிற்கு அனுமதி கொடுக்கலாமா வேண்டாமா என்பதை பஞ்சாயத்துதான் தீர்மானிக்கும். 151 என்ற அதிகாரத்தை பஞ்சாயத்து கையில் எடுத்தால், சாலையோர வியாபாரம்கூட யாரும் செய்யமுடியாது. புதிதாக கட்டடங்கள் கட்ட, அவ்வளவு ஏன், வண்டிகளை நிறுத்த பொது இடம் வேண்டும் என்றாலும் பஞ்சாயத்துதான் 154 என்ற விதியை பயன்படுத்தி முடிவு செய்யும். பிறப்பு, இறப்பு, பட்டா, சிட்டா, அடங்கள் என பல விதமான ஆவணங்களை பெறவேண்டுமானாலும் உள்ளாட்சி அமைப்புகளே மக்களுக்கு கதி.
குடும்பத்தில் தொலைநோக்கு திட்டங்களைவிட, அன்றாட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்தால்தான் வாழ்க்கை நிம்மதியாக ஓடும் என்பதைப்போல, மக்களுக்கு நேரடித் தேவைகளை பூர்த்தி செய்யும் இடத்தில்தான் உள்ளாட்சிகள் இருக்கின்றன. ஆனால் அதற்கான தேர்தல்கள் மீதோ, மக்கள் பிரதிநிதிகளை சரியாக தேர்ந்தெடுக்கவேண்டியதின் அவசியம் பற்றியோ பெரும்பாலானோர் அக்கறையே காட்டுவதில்லை, காரணம், அவற்றின் பலன்கள் பற்றி அறிந்துகொள்ளாததுதான்.தெருச்சாக்கடை அடைத்துக்கொண்டாலோ, துரத்தும் வீதி நாய்களை ஒழிக்கவேண்டும் என்றாலோ, மக்கள் உடனே உதவிக்காக அணுக வேண்டியது எம்எல்ஏ., எம்பி., ஆகியோரை அல்ல, உள்ளாட்சியில் கடைசி அங்கத்தினராக திகழும் வார்டு கவுன்சிலரைத்தான்.
எம்பி, எம்எல்ஏ தேர்தல் என்பது ஹோட்டல்களில் சாப்பிடுவது மாதிரி. வெளியே போகும் சமயங்களில் மட்டும் அது தேவைப்படும். ஆனால் உள்ளாட்சித்தேர்தலும் அதனால் விளையும் பலன்களும் என்பது வீட்டு சாப்பாடு மாதிரி. தினந்தோறும் அது கண்டிப்பாக தேவை என்கிற அளவுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.
