பிரசவ மரணக் கணக்கு – இந்தியாவில் வருஷம்தோறும் 45 ஆயிரம்
இந்தியாவில் வருடத்திற்கு 45 ஆயிரம் பிரசவ மரணங்கள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில்தான் தெரிவித்திருந்தது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு ”இந்தியாவில் பிரசவத்தின் போது ஒரு லட்சம் பெண்களில் 174 பேர் மரணமடைகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 5 பெண்கள் உயிரிழக்கின்றனர். வருடத்திற்கு 45 ஆயிரம் பேர் பிரசவத்தின் போது மரணமடைகின்றனர். இது உலக அளவில் ஏற்படும் பிரசவ மரணத்தில் 17% பேர்.இந்தியாவில் பிரசவ மரணங்கள் அதிகம் நிகழ்வதற்கு, பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு ஏற்படும் அதிகளவிலான ரத்தக் கசிவே காரணம். இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் உலக அளவில் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரசவ மரணங்களில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக மற்றொரு ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ வார இதழான லேன்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக அளவில் நடக்கும் பிரசவங்களில் 25 சதவீத பிரசவங்கள் சரியான மருத்துவரின் துணையின்றியே நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2015-ல் பிரசவத்தின் போது மரணித்த தாய்மார்கள் எண்ணிக்கை அடிப்படையில் உலக அளவில் மூன்றில் ஒருபங்கு இறப்பு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 45,000 பேர் பிரசவத்தின்போது மரணித்துள்ளதாகவும், இந்த பட்டியலில் 58,000 இறப்புகளுடன் நைஜீரியா முதலிடம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் உலக அளவில் 210 மில்லியன் பெண்கள் கர்ப்பம் தரிக்கும்நிலையில், 140 மில்லியன் குழந்தைகள் பிறப்பதாகவும் லேன்செட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக அளவில் பிரசவத்தின்போது மரணிக்கும் பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்த ஆய்வறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.


