தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போகும் முன்பு போலீசுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிடுங்க!
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் நபர்கள், எஸ்எம்எஸ் மூலம் காவல்துறைக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நேரில் போய் தகவல் தெரிவிக்க இயலாதவர்கள் 9840700100 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதற்காக மாநகர காவல்துறையில் இயங்கும் 132 காவல் நிலையங்களிலும் பூட்டியிருக்கும் வீடுகள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அந்த பதிவேட்டில் சம்பந்தப்பட்ட நபர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு அந்த பகுதி போலீசார் அந்த வீட்டை கண்காணிப்பர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து சென்னையில் வந்து குடியிருப்பவர்கள் ஏராளம். தீபாவளி பண்டிகைக்கு அவர்கள் குடும்பத்தாருடன் சொந்த ஊர் செல்ல ரயில் மற்றும் பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் பட்டப்பகலிலேயே பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் சென்னையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பண்டிகைக்காக ஒட்டுமொத்தமாக பலர் வீட்டை பூட்டிச்சென்றால் கொள்ளையர்களுக்கு கொண்டாட்டமாகி விடும் என்ற நிலையில் மாநகர காவல்துறை புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.
* வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊர் செல்வோர் தங்கள் எல்லைக்குட்பட்ட, அருகில் உள்ள காவல் நிலையங்களில் தாங்கள் வெளியூர் செல்லும் தகவலை பதிவு செய்ய வேண்டும்.
* இதற்காக மாநகர காவல்துறையில் இயங்கும் 132 காவல் நிலையங்களிலும் பூட்டியிருக்கும் வீடுகள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அந்த பதிவேட்டில் சம்பந்தப்பட்ட நபர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு அந்த பகுதி போலீசார் அந்த வீட்டை கண்காணிப்பர்.
* வீட்டை பூட்டிச்செல்லும்போது தங்களது பயண விவரங்களையும் அதாவது புறப்படும் நாள், திரும்ப வரும்நாள் போன்ற விவரங்களையும், வீட்டில் மதிப்புமிக்க பொருட்கள் உள்ளதா என்ற விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
* நேரில் வந்து தகவல் தெரிவிக்க இயலாதவர்கள் 9840700100 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். இந்த எஸ்எம்எஸ் தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.


