32°C
விளம்பரம்
Advertisement

20% தீபாவளி போனஸ்: ஜெயலலிதா அறிவிப்பு!

admin சேலம் Published: October 21, 2013 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் 9 பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
21 - jayalalitha
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,”மக்களுக்கு இன்றியமையா சேவைகளை வழங்குவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று சொன்னால் அது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதற்கேற்ப உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களிடையே உற்சாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2012-
2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி,

1. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை, அதாவது 20

விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

2. கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும், லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடும் வழங்கப்படும்.

3. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

4. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

5. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

6. மொத்தத்தில், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்” எனக் கூறியுள்ளார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்