மற்றுமொரு குமாரசாமி கணக்கு!
தமிழக அரசின் கடன் சுமை பற்றி மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது. இது அதிமுகவைச் சேர்ந்த ஆவடிகுமார் ஒரு செய்திக் கட்டுரைக்காக பேசும்போது சொன்ன தகவல்: ‘1996இல் அதிமுக ஆட்சி முடியும்போது தமிழ்நாடு கடனே இல்லாத மாநிலமாகத்தான் இருந்தது. அடுத்துவந்த, 1996 – 2001 திமுக அரசு, 35 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டுச் சென்றது. இதிலிருந்துதான் அரசு கடன் சுமையில் விழத் தொடங்கியது’ என்றார்.

இது சரியான தகவல்தானா என்று உறுதிப்படுத்த முடியவில்லை. 1996 மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைப் பார்த்தால் உறுதியாகிவிடும். ஆனால், இணையத்தில் அந்த அறிக்கை இல்லை. இந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், 35,000 கோடி கடனுக்கான வட்டியை சராசரியாக 10 சதவிகிதம் என வைத்துக்கொண்டால் (தற்போது தமிழக அரசு 11 சதவிகிதம் வட்டி கட்டுகிறது என தகவல்), அடுத்து வந்த 2001 – 2006 அதிமுக ஆட்சியின் ஐந்தாண்டு காலத்தில், ஆண்டுதோறும் வட்டி, அடுத்தடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த வட்டிக்கு வட்டி என்னும் வகையில், 56,367 கோடி ரூபாய் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
2006இல் அதிமுக ஆட்சி முடியும்போது தமிழக அரசின் கடன் சுமை, 56 ஆயிரம் கோடியாக இருந்தது. (இதுவும் ஆவடிகுமார் தகவல்) அதாவது, 2001 – 2006 ஆட்சி காலத்தில் கூடுதலாக கடன் வாங்கப்படவில்லை எனக் கொள்ளலாம். அடுத்து, 2006 – 2011 திமுக ஆட்சி. இந்த ஐந்தாண்டு காலத்தில் வட்டி, வட்டிக்கு வட்டி என்னும் வகையில் 90777 கோடியாக கடன் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், 31-3-2011 அன்று தமிழ்நாடு அரசின் கடன் 1,01,541 கோடியாக உயர்ந்திருந்தது. அதாவது, 2006 – 2011 ஆட்சி காலத்தில் கூடுதலாக 10,764 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
2011 நிதிநிலை அறிக்கையில் இருந்த கடனுக்கு, 2011 – 2016 ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 10 சதவிகித வட்டி, வட்டிக்கு வட்டி என்னும் வகையில் பார்த்தால், இப்போது கடன் 1,63,531 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், கடைசியாக பன்னீர் செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைபடி, தமிழக அரசின் கடன் 2,47,031 கோடியாக உள்ளது. அதாவது, 2011 – 2016 ஆட்சி காலத்தில் கடன் சுமை கூடுதலாக 83,500 கோடி அதிகரித்துள்ளது.
2011இல் தமிழக அரசின் கடன் சுமை பற்றி விமர்சித்த ஜெயலலிதாவுக்கு, பதில் சொன்ன அன்றைய முதல்வர் கருணாநிதி, ‘கடன் வாங்குவது தப்பு இல்லை. நிர்வாகம் நடத்தக் கடன் அவசியம். குடும்பம் இருப்பவர்களுக்குக் கடனின் அவசியம் தெரியும். குடும்பம் இல்லாதவர்களுக்கு கடனின் தேவைத் தெரியவில்லை போலும்’ என்று சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக இரண்டு பேரும்தான் காரணம். இப்படி, ‘இரண்டு பேரும்தான் காரணம்’ என்று சொன்னாலே, “ஏன் ஏன்… அதிமுகதானே ஆளுங்கட்சி. அவங்களை மட்டும் விமர்சிங்க. திமுகவை ஏன் விமர்சிக்கிறீங்க. நீங்க அதிமுக பி டீமா? எதிர்ப்பு ஓட்டுகள் சிதறி மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரணும்னு வேலை பார்க்கிறீங்களா’ன்னு நண்பர்களே பதறுகிறார்கள். நட்புக்கே பங்கம் வந்துவிடும் போலிருக்கிறது. நம்மால் சொல்லாமலும் இருக்க முடியலை. கையும் மனதும் துறுதுறு என்று வருகிறது.
தளவாய் சுந்தரம்


