மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், திருமா – சொத்துப் பட்டியல் இதோ:

மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், திருமா – சொத்துப் பட்டியல் இதோ:

சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 4–வது நாளான நேற்று காலை மனு தாக்கல் தொடங்கியது. அப்போது தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத் தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 1,049 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 2,101 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
tn apr 28
தமிழக சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.நேற்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக அயனாவரத்தில் உள்ள திரு.வி.க.நகர் மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு மதியம் 2 மணி அளவில் வந்தார்.தி.மு.க–காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மு.க.ஸ்டாலி னுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடைய வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர், மாநகராட்சி அலுவலகத்துக்குள் மு.க. ஸ்டாலின் சென்றார். அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரி (கொளத்தூர் தொகுதி) எஸ்.பி.கார்த்திகாவிடம், ரூ.10 ஆயிரம் வேட்புமனு தொகையுடன் மு.க.ஸ்டாலின் மனுவை தாக்கல் செய்தார். அப்போது உறுதிமொழியையும் அவர் எடுத்துக்கொண்டார்.

வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், வங்கி சேமிப்பு, அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 13 லட்சத்து 83 ஆயிரத்து 988 ஆக உள்ளது. (அசையும் சொத்துகள் மதிப்பு ரூ.80 லட்சத்து 33 ஆயிரத்து 242, அசையா சொத்துகள் மதிப்பு ரூ.3 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 746 ஆகும்.)மு.க.ஸ்டாலின் வசம் கையிருப்பு தொகையாக ரூ.50 ஆயிரம் உள்ளது. மேலும் 3 வங்கிகளில் அவருக்கு வைப்பு தொகையாக 23 லட்சத்து 13 ஆயிரத்து 442 உள்ளது. இதுதவிர வங்கி சேமிப்பு கணக்கில் ரூ.15 லட்சத்து 22 ஆயிரத்து 670–ம், தேர்தல் செலவுக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 லட்சத்து ஆயிரம் உள்ளது.

மேலும் அஞ்சுகம் குடும்ப அறக்கட்டளையில் ரூ.90 ஆயிரத்து 930–ம், தயாளு குடும்ப அறக்கட்டையில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு மதுரை மாவட்டம் மாடக்குளத்தில் 21 சென்ட் காலி மனை உள்ளது. இதன் மதிப்பு ரூ.30 லட்சத்து 55 ஆயிரம் ஆகும். மு.க.ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் 3.85 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.1 கோடியே 82 லட்சத்து 92 ஆயிரம் ஆகும். தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் 2.85 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 610 ஆகும். இது தவிர சென்னை வேளச்சேரி சீதாபதி நகரிலும், திருவாரூர் சன்னதி தெருவிலும் ஸ்டாலினுக்கு வீடுகள் உள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.3 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 746 ஆகும்.

மு.க.ஸ்டாலினுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும், அதே போல் அவரிடம் தங்க நகைகள் எதுவும் இல்லை என்றும் சொத்து பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவின் பெயரில் ரூ.31 லட்சத்து 25 ஆயிரத்து 837 அசையும் சொத்துகளும், ரூ.1 கோடியே 38 லட்சத்து 93 ஆயிரத்து 136 அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.1 கோடியே 70 லட்சத்து 18 ஆயிரத்து 973 சொத்துகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தே.மு.தி.க– மக்கள் நல கூட்டணி–த.மாகா. சார்பில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய உளுந்தூர்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து வேனில் ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு புறப்பட்டார். அப்போது வழி நெடுகிலும் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். மதியம் 1.30 மணி அளவில், தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தனிடம் விஜயகாந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.அப்போது உறுதிமொழி ஏற்கும்படி தேர்தல் அதிகாரி கூறியதற்கு, இப்போது உறுதிமொழி எடுத்துவிட்டு வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் உறுதிமொழி ஏற்பது தேவையற்றது தானே. அதனால் வேட்புமனு ஏற்றுக் கொண்ட பிறகே உறுதிமொழி ஏற்க சொல்லலாமே என விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் அமைதிப்படுத்தியதை அடுத்து விஜயகாந்த் உறுதிமொழி வாசித்து, வேட்புமனுவை தாக்கல் செய்தார்

மேலும் விஜயகாந்த் மனு தாக்கல் செய்த போது, தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்து இருந்தார். அதில் தன் பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 60 லட்சத்து 16 ஆயிரத்து 721–ம், அசையா சொத்தின் மதிப்பு ரூ.19 கோடியே 37 லட்சத்து 75 ஆயிரத்து 500–ம், மனைவி பிரேமலதா பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.4 கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 893, அசையா சொத்தின் மதிப்பு ரூ.17 கோடியே 42 லட்சத்து 76 ஆயிரத்து 600–ம், தங்கம் 1,410 கிராம் ஆகும்.அவரை சார்ந்தவர் 1– அசையும் சொத்தின் மதிப்பு ரூ.87 லட்சத்து 11 ஆயிரத்து 212, அசையா சொத்து ரூ.1 கோடியே 97 லட்சத்து 22 ஆயிரம். சார்ந்தவர் 2– அசையும் சொத்து ரூ.1 கோடியே 75 லட்சத்து 2 ஆயிரத்து 425, தங்கம் 720 கிராம் ஆகும்.

விஜயகாந்தின் கடன் ரூ.7 கோடியே 61 லட்சத்து 4 ஆயிரத்து 45–ம்,, பிரேமலதா பெயரில் ரூ.1 கோடியே 87 லட்சத்து 34 ஆயிரத்து 38–ம் உள்ளது. கையிருப்பாக விஜயகாந்திடம் ரூ.9 லட்சத்து 25 ஆயிரமும், பிரேமலதா பெயரில் ரூ.22 லட்சத்து 80 ஆயிரத்து 825–ம் உள்ளது. அவர்களை சார்ந்தவர்கள் 1–, சார்ந்தவர் 2 என்று தலா ரூ.50 ஆயிரம் உள்ளது. மேலும் பல்வேறு வழக்குகள் தொடர்பாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 31 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக காலை 11.15 மணிக்கு காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்துக்கு வந்தார்.அப்போது அங்கிருந்த போலீசார், தேர்தல் விதிமுறைப்படி ஒரு வேட்பாளருடன் 4 பேர் மட்டும்தான் செல்ல வேண்டும் என்று கூறி அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து தொல்.திருமாவளவனுடன் 4 பேரும், மாற்று வேட்பாளரான, அக்கட்சியை சேர்ந்த காட்டுமன்னார்கோவில் தொகுதி செயலாளர் மணவாளனுடன் 4 பேரும் உள்ளே சென்றனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துக்குமாரசாமியிடம், தொல். திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து மாற்று வேட்பாளரான மணவாளன் மனுதாக்கல் செய்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவன் போட்டியிடுகின்றார்.தொல்.திருமாவளவன் தாக்கல் செய்த சொத்து பட்டியலில் சென்னை, அரியலூர், புதுடெல்லி உள்ளிட்ட 6 வங்கிகளில் ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்து 212 வைப்புத்தொகை இருப்பதாகவும், ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 728 முதலீடு செய்து இருப்பதாகவும், ரூ.2 லட்சத்துக்கு காப்பீடு செய்துள்ளதாகவும், ரூ.15 லட்சம் மதிப்பில் கார் உள்ளதாகவும் என மொத்தம் ரூ.39 லட்சத்து 78 ஆயிரத்து 940–க்கு அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் தனது பெயரில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிலம், ரூ.18 லட்சத்து 27 ஆயிரத்து 800 மதிப்பில் வீடு ஒன்று இருப்பதாகவும், தனது தாயார் பெரியம்மாள் பெயரில் ரூ.7 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் நிலம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts