கபாலி & சிங்கம் 3 திரைப்படங்கள் கல்யாண மண்டபங்களில் ரிலீஸ்1 – தயாரிப்பாளர் சங்கம் தகவல்
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் , “விஜய் நடித்துள்ள தெறி படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள 60 தியேட்டர்களில் திரையிட மறுத்து விட்டனர். ஆனாலும், இந்த பகுதிகளில் பல தியேட்டர்களில் தெறி படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தெறி படத்தை செங்கல்பட்டு ‘ஏரியா’வில் திரையிட எஸ்.பி.ஐ.சினிமா விநியோக உரிமை பெற்றது.

செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் சிலர் தொடர்ந்து பிரச்சினைகள் செய்து படத்தை திரையிட விடாமல் தடுக்கின்றனர். அதையும் மீறி இந்த படத்தை பல தியேட்டர்கள் திரையிட முன் வந்துள்ளன. படிப்படியாக அந்த தியேட்டர்களின் எண்ணிக்கை உயரும். தெறி படத்தை திரையிடாத செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள 60 தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தியேட்டர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
விரைவில் வெளிவரவுள்ள 24, சிங்கம்-3, கபாலி உள்ளிட்ட பெரிய படங்களையும், சிறிய படங்களையும் இந்த 60 தியேட்டர்களிலும் திரை யிட கொடுக்கமாட்டோம். ரசிகர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால், இந்த மாவட்டங்களில் அரசிடம் அனுமதி பெற்று திருமண மண்டபங்களில் புதிய படங்களை திரையிடுவோம்”என்று அவர்கள் கூறினார்கள்.
மேலும் தெறி படத்தின் திருட்டு விசிடி தயாரிக்க முயன்ற பாலிமர் டி.வி.க்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலிமர் தொலைக்காட்சிக்கு ஒத்துழைப்பு கிடையாது என தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்கள் முடிவு செய்துள்ளது. திரைப்பட தொழி லாளர் கள் சங்கமும் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதும் இதற்கான பிரஸ் மீட்டில் பாலிமர் தொலைக்காட்சி நிருபர் மற்றும் ஒளிப்பதி வாளர்கள் மீது மிரட்டல் விடுத்த போக்கை -சென்னைபத்திரிகையாளர் மன்றம் கண்டனம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


