கொளுத்தும் வெயில் காலத்தில் என்ன செய்யலாம்? செய்யப் படாது! – அலெர்ட் ரிப்போர்ட்

கொளுத்தும் வெயில் காலத்தில் என்ன செய்யலாம்? செய்யப் படாது! – அலெர்ட் ரிப்போர்ட்

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது ‘நீர்க் கடுப்பு’ மற்றும் சிறுநீரகக்கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும். கோடை காலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.
Beach background with sun
கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங் களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் ‘ஈகோலை’ என்னும் பாக்ட்டீரியாவால் இந்த ‘நீர் கடுப்பு நோய்’ வருகிறது.

நோய்க்கான அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம் போல் உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறு நீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.

குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.

கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.

மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது.

இதனிடையே இயற்கை ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் அற்புத பணியை அவ்வப்போது செய்து கொள்ளும். மரங்கள், செடிகள் என அனைத்தும் ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ப மாறி கொள்கின்றன. அதுபோல் மனிதனும் ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப தனது உணவு, உடை, ஆடை, பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் மாற்றம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் கோடை காலத்திற்கு ஏற்ப மனிதன் தனது அன்றாட நடைமுறை வாழ்க்கையில் செய்யத்தக்கவை மற்றும் செய்ய தகாதவை என சில நடைமுறைகள் உள்ளன. அவற்றினை கோடை காலம் தொடங்கும்போது நடைமுறைப்படுத்த எத்தணிக்க வேண்டும்.


ஆடை அணிவதில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை:-

கோடை காலம் ஆரம்பித்தவுடன் ஆடை அணிவதில் பெரிய மாற்றம் செய்திட வேண்டும். நைலான் மற்றும் பாலிஸ்டர் ஆடைகள் அணியவே கூடாது. இறுக்கமாக ஆடைகள் அணிவது கூடாது. அடர்த்தியான சாயங்கொண்ட நிறங்களை பயன்படுத்திட கூடாது. தோல் ஆடைகள், சாட்பீன் போன்ற உறுத்தும் ஆடைகளை அணிதல் கூடாது. கோடையில் நம்மை குளிர்விக்கும் பருத்தி ஆடைகளைதான் அணிதல் வேண்டும். லினன் மற்றும் சணல் இழை ஆடைகள் அணியலாம். தளர்வான, மென்மையான நிறங்களை கொண்ட ஆடைகள் அணியலாம். வெள்ளை நிற ஆடைகள் அதிகம் பலனளிக்கும்.

கோடைகாலத்தில் உடற்பயிற்சியின்போது கவனிக்க வேண்டியவை:

கோடை காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருக்கும். அதன் காரணமாய் நமது வெளிப்புற பணிகள் அதிகமாக நடைபெற்று உடலில் அதிக கலோரிகள் செலவாகும். மேலும் கோடைகால உடற்பயிற்சி என்பது நீச்சல் கூடங்களில்தான் இருக்கும். நீச்சல் பயிற்சி, அக்வா ஏரோபிக்ஸ், தண்ணீர் ஜாக்கிங், சைக்கிளிங், நடைபயிற்சி, நிழலான இடங்களில் சிறு உடற்பயிற்சிகள், யோகா, பிராணயாமம் போன்றவைகள் செய்யலாம்.

கோடையில் உடற்பயிற்சி செய்ய விரும்புவோர் சூரிய ஒளி அதிகம் படும் இடங்களில் நின்று உடற்பயிற்சி செய்யக் கூடாது. கோடைகாலத்தில் பொதுவாகவே இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். எனவே அதிக கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டாம். அதுபோல் இடைவெளி விடாது உடற்பயிற்சி செய்ய வேண்டாம். உடற்பயிற்சி ஆடைகள் வியர்வை இழுக்காத சிந்தெடிக் ஆடைகளாக இருத்தல் கூடாது.

கோடையில் வெளியே செல்லும்போது செய்யத்தக்கவை:-

பெரும்பாலும் அதிக வெயில் கொளுத்தும் மதியநேர பயணம் தவிர்ப்பது நல்லது. அதற்கேற்ப நமது பணிநேரத்தை மாற்றம் செய்து கொள்ளுதல் வேண்டும். வெளியில் அப்படியே செல்ல நேர்ந்தால் குடை எடுத்து செல்வது நல்லது. தொப்பி அணிந்து செல்லலாம். குளிர்ச்சி தரும் கூலிங்கிளாஸ் அணிந்து செல்ல வேண்டும். உயர் எஸ்.பி.எப். கொண்ட சன்ஸ்கிரீன் லோஷனை முகத்தில் பூசிச்செல்ல வேண்டும். கையில் தண்ணீர் பாட்டில் அவசியம் இருப்பது நல்லது.

வெளியில் செல்லும்போது பிளாஸ்டிக் செருப்புகளை அணிந்து செல்லக்கூடாது. வெயிலில் நின்றுகொண்டு அதிக குளிர்ச்சியான பானங்களை அருந்துதல் கூடாது. அதிக சோர்வுடன் தொடர்ந்து நடந்து செல்லக்கூடாது.

கோடைகாலத்தில் சாலையோரம் விற்கும் உணவுகள் மற்றும் குளிர்பானங்களை தரமானதா என அறியாமல் உண்ணுதல் கூடாது. அதிக கேஸ் கொண்ட குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்திட வேண்டும். கோடைகாலத்திற்கு ஏற்ப நம்மையும் நாம் மாற்றி கொள்ளும் போது கோடையும் ஓர் மகிழ்ச்சியான பருவகாலமே.

error: Content is protected !!