இந்தியாவில் அதிகரிக்கும் கவரிங் நகைகள் உபயோகம்!
இந்தியாவில் கவரிங் நகைகள் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையில் ஆண்டுக்கு ரூ.8,000 கோடிக்கு கவரிங் நகைகள் விற்பனையாகி வருகிறது. இத்தகைய கவரிங் நகைகள் ‘ஃபேஷன் ஜுவெல்லரி’ என்றும் ‘காஸ்ட்யூம் ஜுவெல்லரி’ என்றும் அழைக்கப்படுகின்றன. பாரம்பரிய தங்க, வைர ஆபரணங்களை காட்டிலும் இந்த நகைகள் பளபளப்பாக இருப்பதுடன், இலகுவாகவும் உள்ளன. எனவே நடப்பு நிதி ஆண்டில் விற்பனை 20–30 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாக கவரிங் நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.15,000 கோடி புழங்கும் துறையாக கவரிங் நகை சந்தை உருவாகும் தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

சமீப காலத்தில் கவரிங் நகைகள் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததே இதற்கு காரணம். கடந்த பல மாதங்களாக ரூபாய் மதிப்பு சரிவடைந்து வந்ததால் 10 கிராம் தங்கம் விலை ரூ.33,000 என்ற அளவை எட்டியுள்ளது.
தங்க ஆபரணங்களுக்கு மாற்றாக கவரிங் தயாரிப்புகளை மக்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டதால், தங்க நகை விற்பனையாளர்களுக்கு கவரிங் ஆபரணங்கள் பெரிய போட்டியாகவே உருவெடுத்து விட்டதாக முன்னணி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. என்றாலும் மாறி வரும் வாழ்க்கை முறைகளும் கவரிங் நகை விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன என்பதை மறுக்க முடியாது.
சர்வதேச அளவில் கவரிங் நகைகள் தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பித்தளை, நிக்கல், வார்ப்பிரும்பு, பிளாஸ்டிக் மணிகள் மற்றும் வண்ணக் கற்களைக் கொண்டு கவரிங் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது தங்கம், பிளாட்டினம், வெள்ளி போன்ற உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களுக்கு மாற்றாக இவை பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் கவரிங் நகைகள், அவற்றின் தரத்தையும், மதிப்பையும் பொறுத்து ரூ.100 முதல் ரூ.50,000 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
நம் நாட்டில் பொதுவாக வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் கவரிங் நகைகள் அதிகம் விற்பனையாகிறது. பெங்களூரைப் பொறுத்தவரை அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்கள், கல்லூரி மாணவிகள் கவரிங் நகைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆடம்பரமாக காட்சியளிப்பதை காட்டிலும் நவநாகரீகமாக காட்சியளிப்பதையே இவர்கள் அதிகம் விரும்புவதாக தெரிகிறது.


