குடியரசு தின விழா அணி வகுப்பில் ஒட்டகம் போய் நாய் வருது.. டும்..டும்..டும்!
பயங்கரவாதத்துக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினருக்கு உறுதுணையாக விளங்கும் நோக்கில், ராணுவத்தில் வளர்க்கப்படும் நாய்கள், குடியரசு தின விழாவையொட்டி, டெல்லி ராஜபாதையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன.அதே சமயம் 66 வருடங்களாக இடம்பெற்ற ஒட்டக படை அணிவகுப்பு இந்த ஆண்டு குடியரசு தினவிழா ஊர்வலத்தில் இடம் பெறாது

இந்திய ராணுவத்தில் மோப்ப நாய்களும் உள்ளன. இவைகள் போரில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. மோப்ப சக்தி மூலம் வெடிகுண்டுகளை கண்டு பிடிப்பது கண்ணி வெடி கள் புதைந்து இருக்கும் இடத்தை அறிவது, மலையேறும் வீரர்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.இந்த நாய்களின் பயிற்சி பள்ளி உத்தரபிரதேச மாநிலம் மிரட்டில் உள்ளது. கடந்த 1960–ம் ஆண்டு மார்ச் 1–ந்தேதி இப்பள்ளி தொடங்கப்பட்டது.அங்கு மொத்தம் 1200 நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் லேபரேட்டர்ஸ், ஜெர்மன் ஷெப்பர்டு மற்றும் மான்சி ரக நாய்கள் அடங்கும்.
கடந்த ஆகஸ்டு மாதம் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள தங்தார் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் இந்த மோப்ப நாய்கள் கடும் பணியாற்றி ராணுவ வீரர்களுக்கு உதவியது.வெடிகுண்டுகள் கண்டு பிடிப்பதில் உதவி புரிந்த 4 வயது லேபரோட்டஸ் இன நாயும் அதன் பயிற்சியாளர் காஷ்மீரை சேர்ந்த பஷீர் அகமதுவும், தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் வருகிற 26–ந் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணி வகுப்பில் மோப்ப நாய்களும் இடம் பெறுகின்றன.அதற்காக 36 நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. இவை தங்களது பயிற்சியாளர்களுடன் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்று சாகசங்கள் புரிய உள்ளன.
ராணுவத்தில் சிறப்புக் கவனிப்புடன் வளர்க்கப்படும் நாய், குதிரை, கழுதை போன்ற விலங்கினங்களை, அவற்றின் பணிக்காலத்துக்குப் பின்னர், ராணுவத்தினர் கொன்றுவிடுவதாக, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் அண்மையில் தகவல் வெளியானது. ராணுவத்தினரின் இரக்கமற்ற இந்தச் செயலுக்கு, பொதுமக்கள், பிராணிகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பான பொது நல வழக்கு, தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில்,கடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தின விழா அணிவகுப்பில் மோப்ப நாய்கள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவத்தில் ஒட்டக படை பிரிவு தனியாக இயங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா ஊர்வலத்தில் இந்த ஒட்டக படை பிரிவு இடம்பெறுவது வழக்கம். ஆனால் வருகிற 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழா ஊர்வலத்தில் முதல் முறையாக ஒட்ட கம் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போதுடெல்லி யில் நடைபெறும் குடியரசு தினவிழா ஊர்வல ஒத்திகை நிகழ்ச்சியில் ஒட்டக படை இடம்பெறவில்லை. இதன் மூலம் 66 வருடங்களாக இடம் பெற்ற ஒட்டக படை அணிவகுப்பு இந்த ஆண்டு குடியரசு தினவிழா ஊர்வலத்தில் இடம்பெறாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


