தகவல் தொடர்பு & காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிய உதவும் ‘ஜி-சாட் 15’ செயற்கைகோள்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற் கான ‘பி.எஸ்.எல்.வி’, ‘ஜி.எஸ்.எல்.வி’ ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. செயற்கை கோள்களை ராக்கெட்கள் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘சதீஷ்தவான்’ ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தகவல் தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி ‘ஜி.எஸ்.எல்.வி -டி5’ ராக்கெட் மூலம் ‘ஜி- சாட் 14’ செயற்கைகோள், கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி ‘ஜி.எஸ்.எல்.வி -டி5’ ராக்கெட் மூலம் ‘ஜி சாட்-6’ செயற்கை கோளையும் ‘இஸ்ரோ’ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவியது. அதனை தொடர்ந்து தற்போது தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றத்தை அறிவதற்காக நவீன தொழில்நுட்பங்களுடன் ‘ஜி-சாட் 15’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது.

இந்த செயற்கைகோள் தென்அமெரிக்காவின் பிரெஞ்சு கயானவில் உள்ள ‘கொரு’ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘ஏரியன்-5’ ராக்கெட் மூலம் வரும் 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது.
இது குறித்து ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள், “தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறி வதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘ஜி-சாட் 15’ செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனை பிரெஞ்சு கயானவில் உள்ள ‘கொரு’ ஏவுதளத்தில் இருந்து ‘ஏரியன்-5’ ராக்கெட் மூலம் வரும் 10-ந்தேதி விண் ணில் செலுத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். இதில் தகவல் தொடர்புக்காகவும், போக்குவரத்துக்கு துறையில் வழிகாட்டுவதற்கும் மற்றும் காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்வதற்காகவும் ‘கியூ பேண்ட்’ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் ரூ.860 கோடி மதிப்பிலான இந்த செயற்கைகோளின் மொத்த எடை 3,164.5 கிலோவாகும்.
‘ஜி-சாட் 15’ செயற்கைகோளுடன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு தகவல் தொடர்பு மற்றும் ‘டிவி’ ஒளிபரப்புக்கு உதவும் வகையில், ‘ஆர்ப்சாட்-6பி’ என்ற செயற்கைகோளும் ‘ஏரியன்-5’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது”என்று விஞ்ஞானிகள் கூறினர்.


