’பாண்டவர் அணி’ – பார்சலேய்! – விஷால் அறிவிப்பு
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 18–ந்தேதி சென்னையில் பரபரப்பாக நடந்தது. இதில் பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகர்கள் வெற்றி பெற்று நடிகர் சங்கத்தை கைப்பற்றினர். தலைவராக நடிகர் நாசர், பொது செயலாளராக விஷால், துணைத் தலைவர்களாக பொன் வண்ணன், கருணாஸ், பொருளாளராக கார்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பாண்டவர் அணியைச் சேர்ந்த 20 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந் தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வுக்குப்பின் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்தித்தார்கள். அச் சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
இச்சந்திப்பில் நடிகர் சங்கத்தின் அறங்காவலரில் ஒருவராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்திருப்பதாக விஷால் தெரிவித்தார். மேலும், இனிமேல் ‘பாண்டவர் அணி’ என்று தங்களைக் குறிப்பிட வேண்டாம் என்றும், நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம்.. நடிகர் சங்கம் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று என்று கேட்டுக் கொண்டார்
புதிய நிர்வாகிகளுக்கு வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், நடிகருமான ஐசரிகணேஷ் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், “நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி இந்த அளவுக்கு வெற்றிபெறும் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை. ஆனால் நான் எதிர் பார்த்தேன். நான் நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறேன்.எனது தந்தை ஐசரிவேலன் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். அந்த அறக்கட்டளை சார்பில் நலிந்த நாடக நடிகர்கள் 150 பேருக்கு 12 ஆண்டுகளாக ரூ.500 வீதம் மானியம் வழங்கி வருகிறேன். இனி இப்போது முதல் மானிய தொகை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அதேபோல் கல்வியாளர் ஜேப்பியார் சார்பில் 300 நாடக நடிகர்களுக்கும் கல்வியாளர்கள் பச்சமுத்து, வெங்கடா சலம், ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம் ஆகியோர் 300 பேருக்கு மானியம் வழங்க முன்வந்து இருக்கிறார்கள். நடிகர் சங்கம் சிபாரிசு செய்யும் நாடக நடிகர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.மேலும் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சார்பில் 3 ஆயிரம் பேரக்கு மருத்துவ இன்சூரன்ஸ் கார்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நடிகர் சங்க உறுப்பினர்களின் மகன், மகள் அல்லது பேரன்– பேத்திகள் 100 பேருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவசமாக கல்வி அளிக்கப்படும். இதேபோல் மற்ற பல்கலைக் கழகங்களிலும் 100 பேரை சேர்க்க ஏற்பாடு செய்யப்படும். நடிகர் சங்கம் சிபாரிசு செய்பவர்களுக்கு இந்த கல்வி உதவி வழங்கப்படும்.நடிகர் சங்கத்துக்கு மிக விரைவில் அடுத்த ஆண்டே கட்டிடம் கட்ட வேண்டும். இதற்கு நாங்கள் உதவி செய்யத் தயாராக உள்ளோம்”என்று அவர் பேசினார்.
இச்சந்திப்பில் துணைத் தலைவர் பொன்வண்ணன் பேசியது, “சரத்குமார் சார் SPIC சினிமாஸ் மூலம் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார். அது இன்னும் எங்கள் நிர்வாகத்துக்கு வந்து சேரவில்லை. இன்னும் 2 நாட்களில் அது தொடர்பான விஷயங்கள் எங்களை வந்து சேரும். அதைப் படித்து, ஆராய்ந்து நிர்வாகம் முடிவு எடுக்கும்.
எங்களது 41 தேர்தல் வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். அந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவது தான் எங்கள் கடமை. ரஜினி சார் மட்டுமன்றி பல நண்பர்கள் ‘தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்’ என பெயர் மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் சங்கம் ஆரம்பிப்பதில் எந்த ஒரு பிரச்சினை இல்லை. ஆனால், பெயர் மாற்றத்துக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்கிறது. சட்டரீதியாக அது முடியும் எனில் அந்த தமிழ் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.
மேலும், நடிகர் சூர்யா தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்கொடையாக 10 லட்ச ரூபாய் அளித்திருக்கிறார்.













