போர் விமானங்களில் பெண் விமானிகள் :இந்திய ராணுவ அமைச்சகம் பர்மிஷன்!

போர் விமானங்களில் பெண் விமானிகள் :இந்திய ராணுவ அமைச்சகம் பர்மிஷன்!

இந்திய விமானப்படையில் தற்போது 1,500 பெண்கள் பணிபுரிகிறார்கள். சரக்கு விமான போக்குவரத்து, ஹெலி காப்டர், பொறியியல், நிர்வாகம், கணக்கு பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் வேலை செய்கிறார்கள். 94 பெண்கள் விமானிகளாகவும், 14 பெண்கள் வழிகாட்டும் பிரிவிலும் பணியாற்றுகிறார்கள்.இந்த நிலையில், ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கடந்த வாரம் முப்படை தளபதிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், விமானப்படையில் பெண்கள் சிறப்பாக பணி புரிவதால் அவர்களை போர் விமானங்களில் விமானி களாக நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
lady pilot
கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய விமானப்படை தளபதி அரூப் ராஹா, போர் விமானங்களில் விமானி களாக பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.மனோகர் பாரிக்கர் கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகளுக்கு எதிராக தற்போது தாக்குதல் நடத்தி வரும் ஐக்கிய அரபு அமீரக விமானப்படையில் போர் விமானிகளாக பெண்கள் பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ராணுவ அமைச்சகத்தின் சார்பில் நேற்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “இந்திய விமானப்படையில் சரக்கு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றை இயக்கும் பணியில் பெண்கள் சேர்க்கப் பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஆண் விமானிகளுக்கு நிகராக அவர்களுடைய பணிகள் பாராட்டும்படி உள்ளன.
எனவே பெண் விமானிகளை போர் விமான பிரிவில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. தற்போது தேசிய விமானப் படை அகாடமியில் பயிற்சி பெற்று வரும் பெண்கள் போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டு 2016–ம் ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் போர் விமானிகளாக நியமிக்கப்படுவார்கள்.

பின்னர் ஓராண்டு காலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அது முடிந்ததும் 2017–ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அவர்கள் போர் விமானங்களை இயக்குவார்கள். இதற்கான ஒப்புதலை ராணுவ அமைச்சகம் அளித்து உள்ளது. போர் விமானிகளாக பெண்களை நியமிப்பதன் மூலம், இந்த துறையில் சிறப்பாக பணியாற்றி தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Posts