எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் பராக்..பராக்..பராக்!
கடந்த பல மாதங்களாக அறிக்கை அரசியல் நடத்திக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று திடீரென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, சந்தித்து பேசினார். அந்த அரைமணி நேர சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்,”மேகே தாட் அணை, நில எடுப்பு மசோதா, செம்மரக் கட்டை விவகாரம், தமிழக மீனவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்னை ஆகிய 5 பிரச்னைகளுக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தேன். இந்த பிரச்னை தொடர்பாக நாளை பிற்பகல் 12.30 மணிக்கு பிரதமரையும் சந்திக்க உள்ளேன்.அப்போது இங்குள்ள ஆளும்கட்சியான அதிமுக தவிர அனைத்துத் கட்சி தலைவர்களையும் சந்தித்து அவர்களையும் அழைத்துச் செல்ல திட்டமிட்டு இங்குள்ள எல்லா தலைவர்களையும் நேரில் சந்திக்கிறேன் ” என்றார்.

விஜயகாந்த் குறிப்பிட்டப்படி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிலும் மேக்கேதாட்டு அணை பிரச்னை உள்ளிட்ட 5 பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ”தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரதமரை சந்திக்கும்போது, காங்கிரஸ் பிரதிநிதி ஒருவரும் அவருடன் செல்வார்” என்றார்.
பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை, விஜயகாந்த் சந்தித்து மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”இது மக்கள் பிரச்னை என்பதால், எதிர்க்கட்சி தலைவர்களிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதால், பிரதமரை சந்திக்க செல்லும் விஜயகாந்துடன், தமிழ் மாநில கட்சியின் பிரதிநிதியையும் அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.
பின்னர் சென்னை, தி.நகரிலுள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்துக்கு விஜயகாந்த் சென்றார். அங்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு குறித்த தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், ”மேக்கேதாட்டு அணை பிரச்னையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றாக திரட்டும் விஜயகாந்தின் முயற்சி பாராட்டுக்குரியது. மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக விஜயகாந்துடன், பா.ஜ.க. பிரதிநிதியும் பிரதமரை சந்தித்து பேசுவார். தமிழக மக்கள் நலனுக்காக தமிழக பாரதிய ஜனதா எப்போதும் துணை நிற்கும்” என்றார்.
அத்துடன் இதேபோல், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும், விஜயகாந்த் சந்தித்து பேசினார். அப்போது பிரதமரை சந்திக்க வருமாறும் விஜயகாந்த் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, ம.தி.மு.க.வைச் சேர்ந்த கண்ணபிரான், தங்களுடன் பிரதமரை சந்திக்க வருவார் என வைகோ உறுதி அளித்தார்.
மேலும் விஜயகாந்த் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தரையும் சந்தித்தார்.


