உலக கை கழுவும் தினம் – இன்று!
தமிழகத்தில் உள்ள 53 சதவீதம் பேர் கழிப்பறைகளைப் பயன்படுத்தாமல் திறந்த வெளியில் மலம் கழிப்பதாக கிராமாலயா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவன இயக்குநர் தாமோதரன் தெரிவித்தார்.
உலக கை கழுவும் தினத்தையொட்டி (அக்.15) சென்னை அண்ணா நகரில் உள்ள லியோ மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எப்படி முறையாக கை கழுவுவது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தாமோதரன் ”திறந்த வெளியில் மலம் கழித்தல், சுத்தமாக கை கழுவாதது, சுகாதாரமில்லாத நீர், உணவு உட்கொள்வது போன்றவற்றால் டைஃபாய்டு, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, வாந்தி, சீதபேதி, சிறுநீர்ப் பாதை நோய்த் தோற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. உலக அளவில் கையால் உணவருந்தும் பழக்கம் கொண்டவர்களில் இந்தியாவில்தான் அதிகம் பேர் உள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி சுத்தமாக கை கழுவதற்கு 30 வினாடிகள் போதும் என தெரிவித்துள்ளது.
அதில், 6 படி நிலைகள் உள்ளன. முதலில் கையில் சோப்பு போட்டு, உள்ளங்கைகள் இரண்டையும் தேய்க்க வேண்டும். அடுத்து ஒரு கையின் விரல்களின் இடுக்குகளை மற்றோரு கையால் உள்புறமும், அடுத்து வெளிப்புறமும் தேய்க்க வேண்டும். பின்பு விரல்களின் நுனிகளை குவித்து மற்றோரு உள்ளங்கையில் தேய்க்க வேண்டும். அடுத்து கட்டை விரலை மட்டும் மாறி மாறி தேய்க்க வேண்டும். கடைசியாக மணிக்கட்டிற்கு மேல் இருந்து தேய்த்துக் கழுவ வேண்டும்.
இதுபோல, கழிப்பறையை பயன்படுத்திய பின்பும், உணவு அருந்துவதற்கு முன்பும், குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதற்கு முன்பும், விளையாடிய பின்பும் கை கழுவ வேண்டும். கை கழுவதுபோல கழிப்பறையை பயன்படுத்துவதும் அவசியமானது. ஆனால், தமிழகத்தில் 53 சதவீதம் பேர் கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை என்றார் தாமோதரன்.


