32°C
விளம்பரம்
Advertisement

’சத்தியவான் சாவித்திரி’-விமர்சனம்!

admin சேலம் Published: November 20, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



புராண மரபின் சாயலில் தொடங்கும் தலைப்பைத் தாங்கி வந்தாலும், இந்தச் சத்தியவான் சாவித்திரி பழங்கதையின் நகலல்ல; சட்டப் போராட்டமும் கிரைம் த்ரில்லரும் பின்னிப் பிணைந்த நவீன திரைக்கதையாக்கும். சட்டம் படித்து முடித்த கீர்த்தி சுரேஷ், சாருகேஷை மணந்து கொண்டு, சென்னையில் பிரபல வழக்கறிஞரான மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றுகிறார். ஒரு சூழலில் தன் குரு மிஷ்கினுக்கு எதிரான முதல் வழக்கிலேயே வென்று கவனம் பெறும் சூழலில், திடீர் உடல்நல பாதிப்பால் ஏற்படும் கரு சிதைவு அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உடைக்கிறது. வழக்கறிஞர் பணியிலிருந்து விலகி மீண்டும் தாய்மை அடையத் துடிக்கும் தருணத்தில், ஷில்பா மஞ்சுநாத் கொலை வழக்கில் கணவர் சாருகேஷ் கைது செய்யப்படுகிறார். செய்யாத குற்றத்திற்காகச் சட்டத்தின் பிடியில் சிக்கிய கணவனை மீட்க கீர்த்தி மீண்டும் களம் இறங்க, பழைய தோல்வியின் கசப்போடு அரசு வழக்கறிஞராக எதிரே நிற்கும் மிஷ்கினை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மையக் களம்.

திரைக்கதையின் கட்டமைப்பும் கோர்ட்ரூம் த்ரில்லரும்

ஒரு நீதிமன்ற நாடகமாகத் தொடங்கும் கதையை, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் வடிவமைத்திருப்பது படத்தின் முக்கிய அணுகுமுறை. முதல் பாதியில் கதாபாத்திரங்களின் அறிமுகமும், தொடக்கக் காட்சிகளின் நகர்வும் சில இடங்களில் சினிமாத்தனமாகவும், எளிதில் யூகிக்கக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன. குறிப்பாக முதல் பாதியின் சில வாதங்களும் திருப்பங்களும் நாடகத்தன்மையின் சாயலைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் வழக்கமான கோர்ட்ரூம் பாணியில் மட்டுமே நின்றுவிடாமல், கொலை வழக்கின் பின்னணியில் ஒளிந்திருக்கும் சஸ்பென்ஸ் முடிச்சையும், எதிர்பார்க்காத திருப்பங்களையும் கையாளும் விதத்தில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்களும், இறுதியில் அவிழ்க்கப்படும் சஸ்பென்ஸ் முடிச்சும், முதல் பாதியின் பலவீனங்களைக் கடந்து கதைக்குப் புதிய வடிவம் தருகின்றன.

நடிப்பின் உள் ஓட்டமும் கதாபாத்திரங்களின் பரிமாணமும்

சாவித்திரி என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், கணவரை இழந்துவிடக் கூடாது என்ற தவிக்கும் மனைவியின் பதற்றத்தையும், சட்டத்தின் முன் நிற்கும் வழக்கறிஞரின் நிதானத்தையும் கண்கள் வழியே கடத்த முயற்சித்திருக்கிறார். சில தருணங்களில் நாடகத்தன்மை எட்டிப் பார்த்தாலும், கதாபாத்திரத்தின் மன அழுத்தத்தையும் போராட்ட குணத்தையும் அவர் வெளிப்படுத்தும் விதம் கவனிக்க வைக்கிறது. மூத்த மற்றும் பிரபல வழக்கறிஞராக வரும் மிஷ்கின், கம்பீரமான உடல்மொழியும் வித்தியாசமான மேனரிசமும் கொண்டு நீதிமன்றக் காட்சிகளுக்கு அழுத்தமும் விறுவிறுப்பும் சேர்க்கிறார்; குருவும் எதிரியுமாக மாறும் தருணங்களில் அவரது பார்வையும் பேச்சும் காட்சிகளின் இறுக்கத்தைக் கூட்டுகின்றன. கணவராக வரும் புது முகமுகம் சாருகேஷ், காதல் உணர்வுகளையும் குற்றச்சாட்டின் தவிப்பையும் இயல்பாகக் கடத்தியிருக்கிறார். கீர்த்தியின் சீனியராக இருந்து பின்னர் உதவியாளராகப் பயணிக்கும் பாலசரவணன், இறுக்கமான சூழல்களுக்கிடையே நகைச்சுவை மூலம் ஆறுதல் தருகிறார். ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா, தீபா சங்கர், மதுசூதன் ராவ், மாலா பார்வதி, ஏ.வெங்கடேஷ், ஆர்.சுந்தராஜன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாகப் பங்களித்துள்ளனர்.

ஒளி, இசை, படத்தொகுப்பு: தொழில்நுட்ப மொழி

ஒரு கிரைம் த்ரில்லருக்குத் தேவையான இறுக்கத்தையும் மர்ம உணர்வையும் உருவாக்குவதில் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், நீதிமன்ற வாதங்களின் போது உருவாகும் இறுக்கத்தையும், புலனாய்வுத் திருப்பங்களையும் ஒளியமைப்பு மற்றும் கேமரா கோணங்கள் வழியே கூர்மைப்படுத்தியிருக்கிறார்; கதாபாத்திரங்களின் மனப்போராட்டத்தையும் காட்சிகளின் விறுவிறுப்பையும் ஒளியின் மூலம் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், பின்னணி இசையில் வேகத்தையும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் மென்மையையும் தந்திருந்தாலும், பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை. படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, முதல் பாதியின் சினிமாத்தனமான நகர்வுகளையும் இழுவையையும் கடந்து, எதிர்பார்க்காத திருப்பங்களைச் சரியான இடங்களில் பொருத்தித் திரைக்கதையின் ஓட்டத்தைச் சமன் செய்திருக்கிறார்.

விமர்சனப் பார்வை

சத்தியவான் சாவித்திரி முழுமையான குறைகளற்ற படைப்பு அல்ல; முதல் பாதியின் நாடகத்தன்மையும், பலவீனமான பாடல்களும் படத்தின் வேகத்தைச் சில இடங்களில் தடுக்கின்றன. எனினும், பழைய கதை மரபைத் தாண்டி கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராகக் கதையை நகர்த்திய விதமும், இரண்டாம் பாதியின் திருப்பங்களும், இறுதி முடிச்சும் படத்தை ஒரு சுவாரசியமான அனுபவமாக மாற்றுகின்றன.

ரேட்டிங்: 3.5 / 5

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்