தமிழ் குரல் / AI Voice
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உலகின் அனைத்துத் துறைகளையும் போலவே ஊடகத் துறையிலும் அதிவேகமாகப் புகுந்துள்ளது. செய்திகளைத் திரட்டுவது முதல், அவற்றைத் தொகுத்து எழுதுவது, மொழிபெயர்ப்பது, காணொளிகளாக மாற்றுவது வரை பல பணிகளில் இன்று செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தொழில்நுட்பத்தின் இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் வாசகர்களின் மனநிலை மாறியிருக்கிறதா என்றால், இல்லை என்பதே சர்வதேச ஆய்வுகள் காட்டும் யதார்த்தமாக உள்ளது.
செய்தி அறைகளில் தொழில்நுட்பம் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினாலும், தகவலின் உண்மைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் மனிதப் பத்திரிகையாளர் களின் கரங்களிலேயே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒன்பது நாடுகளில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில், முழுமையாகச் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் செய்திகளைச் சராசரியாக 12 சதவீதம் பேர் மட்டுமே வசதியாக உணர்வதாகத் தெரிவித்துள்ளனர். இது ஊடக உலகிற்கு மிக முக்கியமான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
மனித முன்முயற்சியும் நாடுகளின் மனநிலையும்
செய்தி உருவாக்கத்தில் மனிதர்களின் பங்கு எந்த அளவிற்கு இருக்கிறதோ, அந்த அளவிற்கு மக்களின் நம்பிக்கை உயர்கிறது என்பதை இந்த ஆய்வின் புள்ளிவிவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. முழுமையாகச் செயற்கை நுண்ணறிவு தயாரிக்கும் செய்திகளுக்கு வெறும் 12 சதவீத ஆதரவு மட்டுமே இருக்கும் நிலையில், மனிதப் பத்திரிகையாளர் முதன்மையாக இருந்து செயற்கை நுண்ணறிவின் சிறிய உதவியோடு உருவாக்கும் செய்திகளுக்கு 45 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், முழுமையாக மனிதப் பத்திரிகையாளர்களால் எழுதப்படும் செய்திகளையே 67 சதவீதம் பேர் முழுமனதாக நம்புகிறார்கள்.

நாடுகளுக்கு ஏற்ப மக்களின் இந்த மனநிலையில் சிறிய அளவிலான மாறுபாடுகள் காணப்படுகின்றன. பாரம்பரிய ஊடக நெறிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பிரிட்டனில், வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே முழுமையான செயற்கை நுண்ணறிவுச் செய்திகளை ஏற்கத் தயாராக உள்ளனர். தொழில்நுட்ப மாற்றங்களை ஓரளவிற்கு எளிதாக அணுகும் அர்ஜென்டினா மற்றும் ஜப்பானில் கூட இந்த எண்ணிக்கை 16 சதவீதத்தைத் தாண்டவில்லை. எந்த நாடாக இருந்தாலும், செய்தித் தயாரிப்பில் தொழில்நுட்பம் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, பத்திரிகையாளருக்கு மாற்றாக மாறிவிடக் கூடாது என்பதே மக்களின் தீர்ப்பாக உள்ளது.
செய்தி வடிவமும் பயன்பாட்டின் எல்லையும்
மனித மேற்பார்வையுடன் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிகம் கொண்ட செய்திகளில், அந்தச் செய்தி எந்த வடிவத்தில் வெளியாகிறது என்பதை விட, எந்தப் பணிக்காகத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பதே வாசகர்களின் ஏற்பைத் தீர்மானிக்கிறது. தகவல்களை உடனுக்குடன் வழங்க வேண்டிய நிர்பந்தம் உள்ள பிரேக்கிங் நியூஸ் மற்றும் நேரலைத் தகவல்களில் 27 சதவீதம் பேர் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பை ஏற்கின்றனர்.
இதேபோல், அன்றாடச் செய்தி அறிக்கைகள் மற்றும் நகைச்சுவை அல்லது கேலிச் சித்திரப் பகுதிகளில் தலா 26 சதவீதம் பேர் இத்தகைய தயாரிப்பு முறையை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், சமூகப் பிரச்சினைகளை அலசும் கருத்துரைகள் மற்றும் விமர்சனப் பகுதிகளுக்கு வரும்போது இந்த ஆதரவு 22 சதவீதமாகச் சரிகிறது. வெறும் தரவுகளை அடுக்குவதற்குத் தொழில்நுட்பம் உதவலாமே தவிர, ஆழமான பார்வையும், சமூகப் பொறுப்பும், மனித உணர்வுகளும் கலந்த விமர்சனங்களை எழுத மனிதக் குரலையே வாசகர்கள் தேடுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
எளிமை உணர்வும் மாறாத மதிப்பீடுகளும்
மனிதப் பத்திரிகையாளர்கள் முழுமையாக உருவாக்கும் செய்திகளோடு ஒப்பிடும்போது, மனித மேற்பார்வையுடன் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் செய்திகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மக்களின் அடிப்படை மதிப்பீடுகள் மாறவில்லை. முந்தைய ஆய்வுகளோடு ஒப்பிடுகையில், சிக்கலான செய்திகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித் தருவதற்குச் செயற்கை நுண்ணறிவு உதவும் என்ற நம்பிக்கை மக்களிடையே சற்று அதிகரித்துள்ளது. பெரிய தகவல்களைச் சுருக்கி, எளிய மொழியில் தரும் திறனை வாசகர்கள் வரவேற்கிறார்கள்.
இருப்பினும், ஒரு செய்தியின் உயிர்நாடியாகக் கருதப்படும் துல்லியம், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று மக்கள் இன்னும் நம்பத் தொடங்கவில்லை. தவறான தகவல்கள் உருவாகிவிடுமோ என்ற அச்சமும், தகவலின் மூலத்தை உறுதிப்படுத்துவதில் உள்ள ஐயங்களும் வாசகர்கள் மனதில் அப்படியே நீடிக்கின்றன.
நம்பிக்கையின் அடிப்படை
செயற்கை நுண்ணறிவு என்பது ஊடகத் துறையின் வேகத்தையும், செய்திகளை எளிமைப்படுத்தும் திறனையும் பன்மடங்கு அதிகரிக்கும் வல்லமை கொண்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பத்திரிகைத் தர்மம் என்பது வெறும் வார்த்தைகளைக் கோர்ப்பது அல்ல; அது களத்திற்குச் சென்று உண்மையைத் தேடுவதும், சமூகத்தின் மீது அக்கறை கொள்வதும், தவறு நேர்ந்தால் பொறுப்பேற்றுக்கொள்வதும் ஆகும்.
மொத்தத்தில் தொழில் நுட்பம் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும், செய்திகளின் பின்னால் ஒரு மனிதனின் மனசாட்சியும் அனுபவமும் இருக்க வேண்டும் என்பதையே உலகளாவிய வாசகர்களின் மனநிலை உணர்த்துகிறது. செயற்கை நுண்ணறிவை ஒரு சிறந்த உதவியாளராகப் பயன்படுத்திக்கொண்டு, மனிதப் பத்திரிகையாளர்களின் சிந்தனையையும் களப்பணியையும் முதன்மைப்படுத்தும் ஊடகங்களே எதிர்காலத்திலும் மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ளும்.
நிர்மலா ராணி
