32°C
விளம்பரம்
Advertisement

மன்னிப்பு கேட்க மறுத்த பத்திரிகை: கொல்கத்தாவில் பற்றி எரியும் ‘காவி’ சர்ச்சை!

admin Published: September 6, 2026 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ந்திய ஊடக உலகில் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான கொல்கத்தாவின் ஆனந்தபஜார் பத்திரிகை அலுவலகம் மீது அண்மையில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல், பத்திரிகை சுதந்திரம் மற்றும் அரசியல் சகிப்புத்தன்மை குறித்த புதிய விவாதத்தை நாடு முழுவதும் கிளப்பியுள்ளது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மாணவர் மோதல் தொடர்பான செய்திக்கு வைக்கப்பட்ட ஒரு தலைப்பே இந்த ஒட்டுமொத்தப் புயலுக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

சர்ச்சையை மூட்டிய அந்த ஒற்றை வார்த்தை

ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் அமைப்புகளுக்கு இடையே வன்முறை வெடித்தபோது, அதுகுறித்த செய்தியை ஆனந்தபஜார் நாளிதழ் தனது முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியின் தலைப்பில் பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையைக் குறிக்க கெருவா குண்டாமி அதாவது காவி ரவுடித்தனம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருந்தது.

இந்த வார்த்தைப் பிரயோகம் இந்து சமயத்தின் புனித நிறமான காவியை இழிவுபடுத்துவதாகக் கூறி, வலதுசாரி அமைப்புகளும் பாஜக தலைவர்களும் கொதித்தெழுந்தனர். மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி நாளிதழின் ஆசிரியர் மற்றும் செய்தியாளர்கள் மீது காவல்துறையிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

மன்னிப்புக் கெடுவும் கொல்கத்தாவில் அரங்கேறிய வன்முறையும்

நாளிதழ் நிர்வாகம் இந்தத் தலைப்புக்காக பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று 24 மணி நேரக் கெடு விதிக்கப்பட்டது. தவறும் பட்சத்தில் பத்திரிகை அலுவலகம் முடக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஒரு செய்தி நிறுவனமாகத் தனது ஆசிரியரின் சுதந்திரத்தில் தலையிட முடியாது என்பதில் ஆனந்தபஜார் நிர்வாகம் உறுதியாக நின்று மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டது.

இதன் விளைவாக, கொல்கத்தாவில் உள்ள ஆனந்தபஜார் பத்திரிகையின் பிரதான அலுவலகத்தை ஒரு கும்பல் சூழ்ந்தது. அலுவலகத்தின் வெளிப்புறச் சுவர்களில் காவிச் சாயத்தை ஊற்றியும், ஆவேச முழக்கங்களை எழுப்பியும் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் இந்தச் சம்பவத்தைத் தடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்ததாக ஊடக ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஊடக உலகை உலுக்கிய பய உணர்வு

ஒரு செய்தியின் தலைப்பில் முரண்பாடு இருந்தால், அதற்கு மறுப்புத் தெரிவிப்பது அல்லது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஜனநாயக வழிமுறையாகும். அதை விடுத்து, பத்திரிகை அலுவலகத்தின் மீதே வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது ஊடகங்களின் குரலை நசுக்கும் செயல் என்று கொல்கத்தா பத்திரிகையாளர்கள் கண்டித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் வன்முறை சம்வங்களில் ஈடுபட்டவர்களின் செயலைத் சுட்டிக்காட்டியதற்கே இந்த அளவுக்கு அச்சறுத்தல் தரப்படுவது, செய்தி அறைகளில் பணியாற்றும் நிருபர்களுக்குப் பெரும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது. அதிகாரத்திலிருப்பவர்களையோ அல்லது அவர்களின் அமைப்புகளையோ விமர்சித்தால் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தை உருவாக்கவே இதுபோன்ற சம்பவங்கள் நடத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணும் சவால்களும்

ஆனந்தபஜார் பத்திரிகை மீதான இந்தத் தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும் மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. செய்தித் தலைப்பு தவறு என்று போராடியவர்கள், இறுதியில் வன்முறையில் ஈடுபட்டதன் மூலம் அந்தத் தலைப்பு சரியானதுதான் என்பதைத் தங்களின் செயலாலேயே நிரூபித்துவிட்டதாகப் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அரசியல் நெருக்குதல்களுக்கும் வன்முறை மிரட்டல்களுக்கும் பணியாமல், உண்மையை உள்ளபடிச் சொல்வதே இதழியல் அறம் என்பதில் ஆனந்தபஜார் பத்திரிகை உறுதியாக நிற்பது, இந்தியாவின் ஊடகத் துறைக்கு ஒரு முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகள்