32°C

‘மகுடம்’ டிரெய்லர் விழா: “35 வருட கனவு நனவானது!”-உருகிப் பேசிய விஷால்!

admin Published: August 9, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:
டிகர் விஷால் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகி, கதாநாயகனாகவும் நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய விஷால், தனது சினிமா பயணம், இயக்கம் பற்றிய கனவு மற்றும் தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதன் முக்கியத் தொகுப்பு:
14 மாத சிரமமும் வருங்கால மனைவியின் ஆதரவும்
“எனக்கு இந்தத் திரைப்படத்தை அமைத்துக் கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி சாருக்கு நன்றி. அவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார். மேலும், கடந்த 14 மாதங்களாக படம் ஏதும் இல்லாமல் நான் மிகுந்த சிரமத்தில் இருந்த காலத்தில், எனக்கு உறுதுணையாக இருந்து இந்த நொடி வரை உடன் நின்றவர் என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. வேறு யாராக இருந்தாலும் இந்நேரம் விலகிப் போயிருப்பார்கள்.”
35 வருடக் கனவும் பெற்றோர் தியாகமும்
“இயக்குநராக வேண்டும் என்பது எனது 35 கால கனவு. ராம்கோபால் வர்மாவின் ‘உதயம்’ படம் பார்த்தது முதல் எனக்குள் இந்த ஆசை இருந்தது. அர்ஜுன் சாரிடம் என்னை உதவி இயக்குநராகச் சேர்க்க என் அப்பா 4 மணி நேரம் காத்திருந்தார். என் அம்மா இல்லை என்றால் ‘சண்டக்கோழி’ படமே வந்திருக்காது. ‘நீங்க செலவு பண்ணலனா நான் பண்றேன்’ என்று அப்பாவிடம் சண்டையிட்டு என்னை நடிக்க வைத்தவர் என் அம்மா. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது படமாக உருவாகியுள்ள இதில், ஆர்.பி. சௌத்ரி சார் அறிமுகப்படுத்தும் 45-வது புதுமுக இயக்குநர் நான் தான் என்பதில் பெருமை கொள்கிறேன்.”
இயக்கத்தில் உதவிய ஈகோ இல்லாத குழு
“கேமராவிற்கு முன்னாடியும் பின்னாடியும் உழைப்பது சவாலாக இருந்தது. ‘இவன் ஏன் நடிப்பைச் சொல்லித்தர்றான், இசையில் தலையிடுறான், ஸ்டண்ட்டுக்கு ஐடியா தர்றான்’ என்று என் குழுவில் யாரும் தவறாக நினைக்கவில்லை. இந்த ஈகோ இல்லாத கூட்டத்தினால் தான் ‘மகுடம்’ சிறப்பாக வந்துள்ளது. பாலா அண்ணனிடம் நடிகர்களிடம் வேலை வாங்குவதையும், சுந்தர்.சி சாரிடம் எந்தச் சூழலையும் இலகுவாகக் கையாள்வதையும் கற்றுக் கொண்டேன். நடிகர்கள் துஷாரா, அஞ்சலி, ஜான் விஜய், மாயா, அஸ்வின் ஆகியோர் நான் சொன்னதை ஏற்று நடித்தார்கள்.”
ஜி.வி. பிரகாஷின் இசை & மாஸான கிளைமாக்ஸ்
“ஜி.வி. பிரகாஷ் புதுமுக இயக்குநர்களுக்குக் கிடைத்த வரம். இந்தப்படத்திற்குத் தனது இசையால் உயிர் கொடுத்திருக்கிறார். பாடலாசிரியர்கள் உமாதேவி, ஏகாதசி, விவேக், கருணா ஆகியோருக்கு நன்றி. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திலும் வராத ஒன்று. கடைசி 8 நிமிடங்கள் தியேட்டரில் மேஜிக் நடக்கும். இளையராஜா சாரின் இசையையும் இதில் பயன்படுத்தியுள்ளோம்.”
விஜய் பற்றிய பேச்சு & ரிலீஸ் தேதி
“எனக்குப் பிடித்த நடிகர் விஜய் இன்று முதல்வராக இருக்கிறார். அவருடைய படங்களை நான் எப்படி ரசித்துப் பார்ப்பேனோ, அதே ரோஹிணி தியேட்டரில் என் ‘மகுடம்’ படத்தையும் பார்க்கப்போகிறேன். படம் வரும் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. சில சிக்கல்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி படம் வெளியாகும். ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெறும் வெற்றி விழாவில் மேலும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று விஷால் பேசினார்.