32°C

70 கலைகள்…ஒரே கலைஞன்!உலக சினிமா வரலாற்றில் அசாத்திய சாதனை படைக்கும் ‘ONE MAN’

admin Published: August 9, 2026 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:
திரைப்படம் என்பது இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், நடிகர்கள், ஒப்பனைக் கலைஞர், ஒலிப்பதிவாளர் எனப் நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டு உழைப்பில் உருவாகும் ஒரு பிரமாண்டக் கலை வடிவம். ஒவ்வொரு முக்கியத் துறையிலும் பத்திற்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றினால் மட்டுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக உருவாக்க முடியும் என்பதுதான் சினிமா உலகின் இதுவரை எழுதப்படாத விதி.
ஆனால், அந்த விதியை உடைத்தெறிந்து, உலக சினிமா வரலாற்றிலேயே யாரும் செய்யத் துணியாத ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் தமிழரான இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளையும் எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்து உருவாகியுள்ள ‘ONE MAN’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஒற்றை ஆளின் சினிமா யாகம்

பொதுவாக ஒரு காட்சியைப் படமாக்க வேண்டுமென்றால் கேமராவைப் பிடிக்க ஒருவர், வெளிச்சம் அமைக்க ஒருவர், ஒலிப்பதிவு செய்ய ஒருவர், கதாபாத்திரத்திற்கு ஒப்பனை செய்ய ஒருவர் எனப் பல கரங்கள் தேவைப்படும். ஆனால், சங்ககிரி ராஜ்குமார் தன் படப்பிடிப்புத் தளத்தில் தனக்கான உதவியாளராகக்கூட வேறு யாரையும் அமர்த்திக் கொள்ளவில்லை.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கேமராவைத் தானே கோணங்களில் பொருத்தி, பிரேம் செட் செய்து, மைக் ஆன் செய்து, தன் முகத்திற்குத் தானே ஒப்பனை செய்து கொண்டு, கேமரா முன்னால் சென்று நடித்துக் காட்டியிருக்கிறார். நடித்த முடித்த காட்சிகளை எடிட்டிங் சூட்டிற்கு எடுத்துச் சென்று, கலர் கிரேடிங், விஎஃப்எக்ஸ் (VFX), ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை வரை அத்தனை பணிகளையும் தன் சொந்த விரல்களாலேயே செய்து முடித்திருப்பது கற்பனைக்கும் எட்டாத சாதனை.
கலைப்படமல்ல… அதிரடி ஆக்ஷன் விருந்து!
ஒரு தனி நபர் எடுக்கும் படம் என்றால் அது உலகத் திரைப்பட விழாக்களுக்கான மெதுவான ஓட்டம் கொண்ட கலைப்படமாகவோ (Art Film) அல்லது ஒரே அறைக்குள் நடக்கும் கதையாகவோதான் இருக்கும் என்று பலரும் கணக்கு போட்டனர். ஆனால், அந்த எண்ணத்தை முற்றிலும் தவிடுபொடியாக்கியுள்ளார் இயக்குநர்.
வணிக ரீதியிலான ஒரு பிரமாண்ட ஆக்ஷன் திரைப்படத்திற்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் ‘ONE MAN’ திரைப்படத்தில் அள்ளித் தெளித்துள்ளார்.
  • அமெரிக்காவின் பரபரப்பான சாலைகளில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சிகள்.
  • பார்ப்போரைக் கண்மைக்க வைக்கும் ஹெலிகாப்டர் சேசிங்.
  • ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகும் பிரமாண்டக் காட்சி அமைப்பு.
  • ஆபத்தான பெரிய அருவியில் இருந்து குதித்து ஐந்து பேர் தப்பிப் பிழைக்கும் அதிரடி ஆக்ஷன்.
இவை அனைத்தையும் ஒரு படக்குழுவின் துணையின்றி, தனி ஒரு மனிதனாகக் களத்தில் நின்று படமாக்கியிருப்பது சினிமா உலகை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.

ஒரே முகம்… பல பிம்பங்கள்!

இப்படத்தின் மற்றொரு வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்திருக்கிறார். வழக்கமாக ஒருவரே பல வேடங்களில் நடிக்கும்போது ஒப்பனையிலும் நடிப்பிலும் பெரிய சிரமங்கள் இருக்கும்.
ஆனால், திரையரங்கில் சிறப்புக் காட்சியைப் பார்த்த திரைத்துறைப் பிரபலங்கள், “படம் தொடங்கும் சில நிமிடங்களிலேயே அவர் சங்ககிரி ராஜ்குமாராகத் தெரியவில்லை. ஒவ்வொன்றும் தனித்தனி மனிதர்களாக, தனித்தனி கதாபாத்திரங்களாகவே மனதிற்குள் பதிகிறார்கள். இவனிடமிருந்து அவன் எப்படித் தப்பிப்பான், இவனால் அவனுக்கு என்ன ஆபத்து வரப்போகிறது என்ற விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டம் நம்மை இருக்கையின் நுனிக்கே கொண்டு வருகிறது” எனப் பாராட்டித் தள்ளியுள்ளனர்.

ஆதாரப்பூர்வமான உருவாக்கப் பதிவு

“ஒரு மனிதனால் 70 துறைகளின் வேலைகளையும் செய்துவிட முடியுமா?” என்ற சந்தேகம் எவருக்கும் வந்துவிடக் கூடாது என்பதில் இயக்குநர் மிகவும் தெளிவுடனும் நேர்மையுடனும் செயல்பட்டுள்ளார். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தான் எப்படி எடுத்தேன், கேமராவை எங்கு வைத்தேன், எப்படி இயங்கினேன் என்பதை மற்றொரு கேமராவில் ‘மேக்கிங் வீடியோவாக’ (Making Video) முழுமையாகப் பதிவு செய்து வைத்துள்ளார். இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல, எதிர்கால சினிமா மாணவர்களுக்கான ஒரு பெரும் வரலாற்று ஆவணம் என்றால் மிகையல்ல.

ஆகஸ்ட் 21-ல் காத்திருக்கும் வரலாற்றுத் தருணம்

பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், முன்னணி நட்சத்திரங்களின் கோடிக்கணக்கிலான பட்ஜெட் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் போலவே, ஒரு தமிழனாகத் தான் செய்திருக்கும் இந்த வரலாற்றுச் சாதனையைத் தமிழ் ரசிகர்களும், உலக சினிமா ஆர்வலர்களும் திரையரங்குகளில் கொண்டாடித் தீர்ப்பார்கள் என்ற முழு நம்பிக்கையோடு இருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
ஒரு மனிதனின் அசைக்க முடியாத தன்னம்பிக்கைக்கும், சினிமா மீதான தீராத காதலுக்கும் சான்றாக விளங்கும் ‘ONE MAN’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் சாதிக்க வருகிறது.