காதலின் ஆழமும் கடலின் சவாலும்: உலக பென்குயின் தின சிறப்புப் பார்வை!
குள்ளமான உருவம், தத்தித் தத்தி நடக்கும் அழகு, தலையை ஆட்டி ஆட்டிச் செல்லும் நேர்த்தி என பென்குயின்களை ரசிக்காதவர்கள் எவரும் இலர். ஆனால், அந்த மென்மையான தோற்றத்திற்குப் பின்னால் ஒரு மாபெரும் போராட்டமே ஒளிந்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதி உலக பென்குயின் தினமாகக் கொண்டாடப்படும் வேளையில், இயற்கையின் இந்த அதிசயப் பறவைகளின் வியக்கத்தக்க வாழ்வியலை உற்றுநோக்க வேண்டியது அவசியமாகிறது.
காதலும் அர்ப்பணிப்பும்: ஒரு வாழ்நாள் பந்தயம்
பென்குயின்கள் காதலுக்கு மிகச்சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன. ஒருமுறை ஒரு இணையைத் தேர்வு செய்துவிட்டால், பெரும்பாலும் தன் வாழ்நாள் முழுவதும் அந்த இணையுடனேயே வாழ்ந்து முடிக்கும் விசுவாசம் இவற்றுக்கு உண்டு. ஏப்ரல் மாத பனிக்காலம் தொடங்கியதும், கடற்கரையிலிருந்து சுமார் 120 கி.மீ வரை நீண்ட பயணம் மேற்கொண்டு, அங்கு ஆடல் பாடல்கள் மூலம் தன் இணையை இவைத் தேர்வு செய்கின்றன.

தியாகத்தின் வடிவம்: தந்தை பென்குயின்கள்
பென்குயின்களின் இனப்பெருக்க சுழற்சி என்பது ஆச்சரியத்தின் உச்சி. பெண் பென்குயின் இடும் முட்டையை சுமார் இரண்டு மாதங்கள் தன் கால்களுக்கு இடையில் வைத்து, கடும் குளிரிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பை தந்தை பென்குயின் ஏற்றுக்கொள்கிறது.
-
உணவற்ற தவம்: முட்டையை அடைகாக்கும் அந்த இரண்டு மாதங்களும் தந்தை பென்குயின் எதையும் உண்பதில்லை; தன் உடலில் உள்ள கொழுப்புச் சத்தையே ஆற்றலாக மாற்றிக்கொள்கிறது.
-
பனிப்புயல் பாதுகாப்பு: 200 கி.மீ வேகத்தில் வீசும் பனிப்புயலைச் சமாளிக்க, தந்தை பென்குயின்கள் கூட்டமாகச் சேர்ந்து சுழற்சி முறையில் நின்று ஒருவருக்கொருவர் கதகதப்பைத் தந்துகொள்கின்றனர்.
தாயின் பெரும் பயணம்
முட்டையிட்ட பிறகு இரை தேடிச் செல்லும் தாய் பென்குயின், சுமார் 80 கி.மீ வரை பயணித்துக் கடலின் 500 மீட்டர் ஆழம் வரை சென்று இரை தேடுகிறது. 20 நிமிடங்கள் வரை மூச்சடக்கி வேட்டையாடும் திறன் இதற்கு உண்டு. குஞ்சு பொரித்தவுடன், தந்தை பென்குயின் தன் உடலில் சுரக்கும் ஒரு பால் போன்ற திரவத்தை உணவாக ஊட்டிப் பாதுகாக்கும். பிறகு தாய் வந்தவுடன் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு தந்தை இரை தேடச் செல்லும்.
சமூக உணர்வும் சவால்களும்
பென்குயின்களிடம் சமூக அக்கறை மிக அதிகம். ஒருவேளை பெற்றோர் இறந்துவிட்டால், அனாதையாக நிற்கும் குஞ்சுகளை ‘வேலையில்லாத’ (முட்டையை இழந்த) மற்ற பென்குயின்கள் தத்தெடுத்து வளர்க்கின்றன. சில நேரங்களில் மற்ற பறவைகளின் குஞ்சுகளைக் கூட இவை அரவணைத்து வளர்க்கும் பண்பு கொண்டவை.
அழிவின் விளிம்பில் அழகிய பறவைகள்
இவ்வளவு சாதுர்யமான வாழ்க்கைத் தகவமைப்பைக் கொண்டிருந்தாலும், பென்குயின்களுக்கு ஆபத்துகள் குறைந்தபாடில்லை.
-
எதிரிகள்: கடல் சிறுத்தைகள், ஓர்க்கா திமிங்கலங்கள், கடல் சிங்கங்கள் ஆகியவற்றின் வேட்டை ஒருபுறம்.
-
காலநிலை மாற்றம்: மறுபுறம், புவி வெப்பமடைதலால் உருகும் பனிப்பாறைகள் மற்றும் கடல் நீர்மட்ட உயர்வு பென்குயின்களின் வாழ்விடத்தையே கேள்விக்குறியாக்கி வருகின்றன.
தன் இணையுடன் பிணைப்பாக இருந்து, பொறுப்புகளைச் சமமாகப் பகிர்ந்து வாழும் இந்த ரசனைக்குரிய பறவைகளைக் காப்பது மனிதகுலத்தின் கடமையாகும்.
நிலவளம் ரெங்கராஜன்


