விமர்சனம்: பிரேக்ஃபாஸ்ட் – காதலில் வேகம்… பிரிவில் விவேகம்?

விமர்சனம்: பிரேக்ஃபாஸ்ட் – காதலில் வேகம்… பிரிவில் விவேகம்?

ஸ்மார்ட்போன் உலகிற்குள் அடங்கிவிட்ட இன்றைய மனித வாழ்க்கையில், சமூக வலைதள அறிமுகம், அடுத்த சில நாட்களில் காதல் பரிமாற்றம், அடுத்த வாரமே கல்யாணம் என அவசர அவசரமாக முடிவெடுக்கும் இளைஞர்கள், அதைவிட அதிவேகமாக ‘பிரிவு’ என்கிற முடிவையும் எடுப்பது ஏன்? இந்தக் கேள்விக்கு உணர்வுப்பூர்வமாக விடை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா. இருப்பினும், தற்போதைய காலகட்டத்துக் காதல் மற்றும் காதலர்களின் உளவியலை ஆழமாக அலசாமல், காலம் காலமாகத் தமிழ் சினிமா பேசிக்கொண்டிருக்கும் அதே பழைய குடும்பப் பிரச்சினைகளை முன்வைத்து திரைக்கதை அமைத்திருப்பது விறுவிறுப்பைக் குறைக்கிறது. நவீன கால இளசுகளை வைத்துக்கொண்டு, கே.எஸ். கோபாலகிருஷ்ணன் பாணியில் குடும்பப் பாசம் பேசியிருப்பதால் அடிக்கடி கொட்டாவி வரத்தான் செய்கிறது.

கதைச் சுருக்கம்:

தொழிலதிபரின் மகளான நாயகி ரோஸ்மின், கிராமத்து இளைஞர் ராணவுக்குத் தனது நிறுவனத்தில் வேலை கொடுக்கிறார். நட்பு காதலாகி, தந்தையின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். வசதியான வாழ்க்கை, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவி என எல்லாம் கிடைத்தாலும், காதலித்தபோது இருந்த மகிழ்ச்சி திருமணத்திற்குப் பின் காணாமல் போகிறது. அதற்குப் பதிலாக மோதலும், வெறுப்பும் குடியேறுகிறது. காதலித்த வேகத்தை விட அதீத வேகத்தில் பிரியத் துடிக்கும் இந்த ஜோடி, மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே ‘பிரேக்ஃபாஸ்ட்’.

நடிப்பு மற்றும் தொழில்நுட்பம்:

  • ராணவ்: பிக் பாஸ் புகழ் ராணவ், முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவியின் பணத்திமிரால் பாதிக்கப்படும் கணவராகவும், பாசமான மகனாகவும் உணர்ச்சிகளைச் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார்.

  • ரோஸ்மின்: அறிமுக நாயகி ரோஸ்மின், அழுத்தமான கதாபாத்திரத்தில் கவர்கிறார். பணக்காரப் பெண்களுக்கே உரிய கர்வத்தையும், மற்றவர்களை மதிக்காத போக்கையும் தனது நடிப்பால் இயல்பாகக் காட்டி, ஆண்களுக்கு அச்சமூட்டுகிறார்.

  • பிற நட்சத்திரங்கள்: கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் ஜோடி திரைக்கதைக்குத் தேவையான துள்ளலைத் தருகிறார்கள். சம்பத் ராஜ், கஸ்தூரி, அர்ச்சனா என அனுபவக் கலைஞர்களின் நடிப்பு படத்திற்குப் பெரும் பலம்.

  • தொழில்நுட்பம்: எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு கண்களுக்குக் குளிர்ச்சி. ஆனால், ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை ஏமாற்றம். பாடல்களிலும் பின்னணி இசையிலும் அவரது வழக்கமான மேஜிக் மிஸ்ஸிங்.

பிளஸ் & மைனஸ்:

பலம்: * ராணவ் மற்றும் ரோஸ்மினின் நேர்த்தியான நடிப்பு.

  • இன்றைய அவசரக் காலத் திருமணங்களில் இருக்கும் சிக்கலைச் சொல்ல முற்பட்ட விதம்.

பலவீனம்:

  • பழைய பாணியிலான திரைக்கதை ஓட்டம்.

  • சுவாரஸ்யத்தைக் குறைக்கும் மெதுவான மேக்கிங்.

ஆந்தை தீர்ப்பு:

மாறிவரும் காலத்திற்கு ஏற்பக் காதலைப் பார்க்க முயற்சித்த இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் நவீனத்தையும் வேகத்தையும் சேர்த்திருக்கலாம்.

மார்க்: 2.5 / 5