ரூம் பாய்: தங்கைக்கோர் கோபம் – சினிமா விமர்சனம்!
ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத மூன்று புள்ளிகள், ஒரு புள்ளியில் இணையும்போது என்ன நடக்கிறது என்பதே இந்த ‘ரூம் பாய்’.
கதைக்களம்: சென்னையில் தன் தந்தையைக் காணவில்லை என்று ஒரு இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இன்னொரு பக்கம், ஏலகிரியின் ரம்மியமான சூழலில் இயங்கி வரும் ஒரு தங்கும் விடுதியில், ஊழியர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மூன்றாவது கோணத்தில், சிறார் கூர்நோக்கு இல்லத்திலிருந்து வெளியே வரும் நாயகன் நிகில், ஒரு ஹோட்டலில் வேலை கற்றுக்கொண்டு, வலியச் சென்று அந்த ஏலகிரி விடுதியில் பணியாளராகச் சேர்கிறார்.
அங்கே மேலாளரைக் கொன்றுவிட்டு சில ரகசிய வீடியோ ஆதாரங்களைச் சேகரிக்கிறார் நிகில். காணாமல் போன தந்தைக்கும், ஏலகிரி விடுதி கொடுமைகளுக்கும், நிகிலுக்கும் என்ன சம்பந்தம்? பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகளே படத்தின் கதை.
நடிப்பு ராஜ்ஜியம்: நாயகன் நிகில், ஆக்ஷன் காட்சிகளுக்குத் தேவையான கச்சிதமான உடல்வாகும், அதற்கான மெனக்கெடலும் தெரிவதால் அந்தப் பாத்திரத்திற்குப் பலம் சேர்க்கிறார். சரியான கதைகளைத் தேர்வு செய்தால் கோலிவுட்டில் இவருக்கு எதிர்காலம் உண்டு. நாயகி ஹர்ஷா மற்றும் கேரளா பெஹமின் தத்தமது பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளனர். குறிப்பாக, சிறுமி பெஹமினுக்கு நடக்கும் கொடுமைகள் காண்போர் மனதை ரணமாக்குகின்றன.
வில்லத்தனத்தில் அருண் ராஜா மிரட்டுகிறார். இமான் அண்ணாச்சி, காத்து கருப்பு கலை ஆகியோர் ஆங்காங்கே சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார்கள். பிர்லா போஸ், இன்ஸ்டா புகழ் கற்பகம், கவிதா விஜயன், சமீர் எனப் பிற நட்சத்திரங்கள் திரைக்கதையை நகர்த்த உதவுகிறார்கள். பின்பாதியில் மும்பை அழகி நிதி மரோலியின் நடனம் இளைஞர்களுக்கான ஸ்பெஷல் ட்ரீட்.
தொழில்நுட்பம்: சி.பாரதிராஜனின் ஒளிப்பதிவு ஏலகிரி மற்றும் விடுதியின் சூழலை ஓகே ரகத்தில் படம்பிடித்துள்ளது. வேலன் சகாதேவனின் இசையில் பாடல்கள் உழைப்பைக் காட்டுகின்றன. பின்னணி இசை கதையின் தீவிரத்திற்குத் துணை நிற்கிறது.
இயக்கம் – ப்ளஸ் & மைனஸ்: இயக்குநர் ஜெகன் ராயன், மூன்று வெவ்வேறு கதைகளைத் தொடங்கி, இரண்டாம் பாதியில் அவற்றை இணைத்த விதம் புத்திசாலித்தனம். குறிப்பாக, ஒரு இளம் நாயகனை எவ்விதக் கெட்ட பழக்கமும் இல்லாதவராகக் காட்டி, அண்ணன் – தங்கை பாசத்தைப் பிணைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.
இருப்பினும், இரண்டாம் பாதியில் வரும் அந்த ‘பிளாஷ்பேக்’ திருப்பங்கள் குடும்ப உறவுகளைச் சற்றே கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பது பலவீனம். அந்தத் தீவிரத்தைக் குறைத்திருக்கலாம்.
பாட்டம் லைன்:
தங்கைக்காகக் கோபப்படும் இந்த ரூம் பாய், சில ‘லாஜிக்’ மீறல்கள் இருந்தாலும் எமோஷனலாகக் கவனிக்க வைக்கிறான்.
மார்க்: 2.25/5


