மேட் இன் கொரியா – விமர்சனம்!
வாழ்க்கை என்பது தேங்கி நிற்கும் குட்டை அல்ல; அது ஓடிக்கொண்டே இருக்கும் நதி. நாம் ஒரு புதிய இடத்திற்குப் பயணப்படும்போது, வெறும் நிலப்பரப்புகளை மட்டும் பார்ப்பதில்லை, நமக்குள் ஒளிந்திருக்கும் ஒரு புதிய மனிதனையும் சேர்த்தே கண்டறிகிறோம். முன்பின் தெரியாத ஊர்களில், முகம் அறியாத மனிதர்களிடம் நாம் காட்டும் ஒரு புன்னகையும், அவர்கள் பிரதிபலனாகத் தரும் அன்பும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உண்மையை நமக்கு ஆழமாக உணர்த்துகின்றன. புதிய உறவுகள் மலரும்போது, நம்மிடம் இருந்த பழைய கவலைகளும் பிடிவாதங்களும் மெல்லக் கரைகின்றன. ஒரு தேநீர் கடையில் சந்திக்கும் அந்நியரின் கதையோ அல்லது பயணத்தில் உடன் வரும் பயணியின் சிறு பகிர்வோ, நம் வாழ்வின் சிக்கல்களுக்கு எதிர்பாராத தீர்வுகளைத் தந்துவிடுகின்றன. இந்த மாற்றங்கள் நம் இதயத்தை லேசாக்கி, உலகத்தை இன்னும் நேசிக்கக் கற்றுத் தருகின்றன. உண்மையில், ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய பிறப்பு; ஒவ்வொரு புதிய உறவும் அந்தப் பிறப்பிற்குக் கிடைக்கும் அழகான பரிசு என்பதை அழுத்தமாக சொல்லும் படமே ‘மேட் இன் கொரியா’
கதை
தமிழகத்தின் பனிமூடிய மலைக்கிராமம் ஒன்றில் வசிக்கும் இளம்பெண் ஷென்பாவிற்கு (பிரியங்கா மோகன்), சிறுவயது முதலே தென் கொரியக் கலாச்சாரத்தின் மீது ஒரு தீராத மோகம். கொரியத் தொடர்களை (K-Dramas) பார்ப்பதற்காக இணைய வசதி வேண்டி, யானை மீது ஏறி நின்று சிக்னல் தேடும் அந்த ஆரம்பக் காட்சியே இந்தப் படத்தின் ஆகச்சிறந்த ‘விஷுவல்’ எனலாம். அந்த அளவுக்குக் கொரியக் கனவுகளோடு வாழும் ஒரு தமிழ்ப் பெண் , பிரியங்கா அருள் மோகன், அந்த நாட்டுக்கு ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் வளர்த்துக் கொள்கிறார். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவர், தன் வாழ்க்கையில் காதல், அதனால் வரும் பிரச்சனைகள் என்று பல விசயங்களை எதிர்கொண்டாலும், கொரியா ஆசையை கைவிடாமல் இருக்கிறார். இதற்கிடையே, சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் கொரியா நாட்டுக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், மகிழ்ச்சியாக செல்ல நினைத்த அந்த நாட்டுக்கு துயரத்துடன் செல்லும் அவர், அங்கு சென்ற பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துக் கொள்கிறார். பெற்றோரின் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறி காதலரால் ஏமாற்றப்பட்டு, திரும்பவும் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார். தான் பயணிக்க ஆசைப்பட்ட நாட்டில் இருந்தாலும், புரியாத மொழி, அறியாத மக்கள் என அச்சத்தில் கலங்கி நிற்கும் பிரியங்கா அருள் மோகனின் வாழ்க்கையில் கொரியா எத்தகைய மாற்றங்களை நிகழ்த்துகிறது, என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் ‘மேட் இன் கொரியா’.
நடிப்பு:
படம் முழுக்கத் தன் தோள்களில் சுமக்கிறார் பிரியங்கா மோகன். ‘குவீன்’ பட ராணியைப் போல ஒரு திகைத்துப் போன, அதேசமயம் எதையாவது சாதிக்கத் துடிக்கும் இளம்பெண் பாத்திரத்தில் பிரியங்கா கச்சிதம். ஆனால், திரைக்கதையில் இருக்கும் பலவீனம் அவரது நடிப்பைத் தாண்டி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தடுமாறுகிறது. குறிப்பாக வெவ்வெறு மனநிலைகளான சிரிப்பு, அழுகை, காதல், சோகம், மகிழ்ச்சி, பிரிவு, ஏமாற்றம், தயக்கம், தன்னம்பிக்கை என அனைத்து உணர்வுகளையும் தனது அளவான நடிப்பின் மூலம் நேர்த்தியாக வெளிக்காட்டி மனதில் குடிபுகுந்து விடுகிறார்.
காதலனாக வரும் ரிஷிகாந்த் மற்றும் கொரியக் கதாபாத்திரங்களாக வரும் நோ ஹோ-ஜின், ‘ஸ்குவிட் கேம்’ புகழ் பார்க் ஹே-ஜின் ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, சியோலில் ஷென்பாவிற்கு உதவும் கொரியர்கள் அனைவரும் நிஜ உலகிற்கு அப்பாற்பட்டு ‘தேவதூதர்கள்’ போலவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
டெக்னிஷியன் ஒர்க்:
ஒளிப்பதிவு சியோல் நகரத்தின் அழகையும், தமிழக மலைக்கிராமத்தின் பசுமையையும் அள்ளிக்கொண்டு வந்துள்ளது. 113 நிமிடப் படத்தில் தொழில்நுட்ப ரீதியாகப் பெரிய குறைகள் ஏதுமில்லை. பின்னணி இசை கொரிய மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் கலவையாக ஒலிக்கிறது. இருப்பினும், ஒரு யதார்த்தமான பயணக் கட்டுரையைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தாமல், ஒரு சுற்றுலாத் துறை விளம்பரத்தைப் பார்ப்பது போன்ற உணர்வையே படம் தருவதும் குறிப்பிட்டே ஆக வேண்டும் .
இயக்கம்:
இயக்குநர் ரா. கார்த்திக், ஒரு தமிழ்ப் பெண்ணுக்கும் கொரியாவிற்கும் இடையிலான அந்த ‘கனெக்ட்’ எதனால் ஏற்படுகிறது என்பதை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம். வெறும் ‘ஹல்யு’ (Hallyu) அலை என்பதைத் தாண்டி, ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தத் தவறிவிட்டார். என்றாலும் நாம் ஒரு புதிய இடத்திற்குப் பயணப்படும்போது, வெறும் நிலப்பரப்புகளை மட்டும் பார்ப்பதில்லை, நமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு புதிய மனிதனையும் சேர்த்தே கண்டறிகிறோம். முன்பின் தெரியாத ஊர்களில், முகம் அறியாத மனிதர்களிடம் நாம் காட்டும் ஒரு புன்னகையும், அவர்கள் பிரதிபலனாகத் தரும் அன்பும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உண்மையை நமக்கு உணர்த்துவதில் பாஸ் மார்க் வாங்கி விட்டார்.
மொத்தத்தில்:
‘மேட் இன் கொரியா’ – பிரியங்கா மோகனின் அர்ப்பணிப்பு மற்றும் கண்கவர் சியோல் நகரக் காட்சிகளுக்காக கண்டிப்பாக திரையங்கு போய் பார்க்கலாம்.
ரேட்டிங்: 3/5


