ஃபோர்த் புளோர் விமர்சனம்: அமானுஷ்ய அடுக்ககமும்..அதிரடி ஆக்ஷனும்!

ஃபோர்த் புளோர் விமர்சனம்: அமானுஷ்ய அடுக்ககமும்..அதிரடி ஆக்ஷனும்!

சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர், தன் முன்னாள் காதலி மர்மமான முறையில் காணாமல் போனதைத் தேடி ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்புக்கு வருகிறார். அங்கு அவர் தங்கும் 4ஏ பிளாட்டில் நடக்கும் வினோதச் சம்பவங்களும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சதுரங்கமுமே இந்த ‘ஃபோர்த் புளோர்’.

கதைக்களம்:

பெங்களூருவில் ஐடி வேலை பார்க்கும் தீரன் (ஆரி அர்ஜுனன்), தன் எக்ஸ்-லவ்வர் அனுவிடமிருந்து (பவித்ரா) வந்த ஒரு அழைப்பைத் தொடர்ந்து சென்னைக்கு லேண்ட் ஆகிறார். ராயல் டவுன் அபார்ட்மெண்ட்டில் நான்காவது தளத்தில் அவர் தங்கும் வீடு, ஒட்டடை படிந்த மர்மமான இடமாக இருக்கிறது. அனு எங்கே போனாள்? அந்த வீட்டில் அடிக்கடி தோன்றும் அமானுஷ்ய உருவங்கள் சொல்ல வரும் செய்தி என்ன? இதற்கிடையில் அந்த பில்டிங் இன்சார்ஜ் ஏன் தீரனை காலி செய்யச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்? இந்த முடிச்சுகளை அவிழ்க்கும் போதுதான், இது வெறும் பேய் படம் மட்டுமல்ல, ஒரு பக்கா ‘ரியல் எஸ்டேட்’ ஸ்கேம் மற்றும் பொலிட்டிக்கல் த்ரில்லர் என்பது தெரிய வருகிறது.

நடிப்பு :

ஐடி இளைஞன் வேடத்திற்கு ஆரி ‘கச்சிதம்’. காதல், குழப்பம், ஆக்ஷன் என எல்லா ஏரியாக்களிலும் சிக்ஸர் அடிக்கிறார். ஆனால், அவருக்கு எல்லா எவிடென்ஸ்களும் தானாகவே வந்து சேருவது அவரது புத்திசாலித்தனமான ‘ஹீரோயிசத்தை’ கொஞ்சம் குறைக்கிறது. பவித்ராவுக்கு சிறிய ரோல் என்றாலும், தோழியாக வரும் தீப்ஷிகா கதையோடு பயணிக்கிறார். வில்லனாக வரும் சுப்பிரமணிய சிவா, முதல் பாதியில் கண்களாலேயே மிரட்டுகிறார்; இரண்டாம் பாதியில் நடிப்பால் அதிர வைக்கிறார். தலைவாசல் விஜய் மற்றும் அந்தச் சிறுமி என மற்றவர்கள் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

தொழில்நுட்பம்:

தரண் குமாரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்; ஆனால் பிண்ணனி இசை தியேட்டரில் ஹாரர் ஃபீலை எகிற வைக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜெ. லக்ஷ்மண், அந்த நான்காவது தளத்தை ஒரு தனி உலகமாகவே காட்டி பயமுறுத்தியிருக்கிறார். இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி, ஒரு ஹாரர் கதையில் சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் மசாலாக்களைத் தூவி போரடிக்காமல் நகர்த்தியிருக்கிறார். ஆங்காங்கே இருக்கும் சில தொய்வான காட்சிகளுக்குக் கத்தரி போட்டிருந்தால் படம் இன்னும் ஜெட் வேகத்தில் இருந்திருக்கும்.

பிளஸ் (Plus):

  • ஆரியின் எதார்த்தமான நடிப்பு.

  • இண்டர்வெல் பிளாட்டில் இருக்கும் சஸ்பென்ஸ்.

  • திகிலும் அரசியலும் கலந்த புதுமையான முயற்சி.

மைனஸ் (Minus):

  • தானாகவே கிடைக்கும் ஆதாரங்கள் (Coincidences).

  • சில இடங்களில் ஒட்டாத கமர்சியல் காட்சிகள்.

பாட்டம் லைன்:

ஃபோர்த் புளோர்’ – அமானுஷ்யம் கலந்த பிரேக்கப் காதல் கதை. லிஃப்ட் ஏறாமலேயே திகிலைக் கொடுக்கும் இந்த நான்காவது தளத்திற்கு ஒருமுறை விசிட் அடிக்கலாம்!

ஆந்தை ரேட்டிங்: 3 / 5

Related Posts