சீதா பயணம்: விமர்சனம்-சென்டிமென்ட் ஜர்னி!

சீதா பயணம்: விமர்சனம்-சென்டிமென்ட் ஜர்னி!

திரடி நாயகன் அர்ஜுன், தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை நாயகியாக வைத்து இயக்கியிருக்கும் ‘சீதா பயணம்’ திரைப்படம் காதலர் தின விருந்தாகத் திரைக்கு வந்துள்ளது. ஒரு தந்தை தன் மகளுக்காகச் செதுக்கிய இந்த சினிமாப் பயணம் எப்படி இருக்கிறது? இதோ ஒரு குட்டி அலசல்:

கதைக்களம்:

திருமணத்தில் கொஞ்சம்  ஈடுபாடு இல்லாதவர் சீதா (ஐஸ்வர்யா அர்ஜுன்). ஹைதராபாத்தில் ஒரு பிரபல சமையல் கலை நிபுணரின் (Chef) நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகத் தனியாகக் காரில் பயணம் மேற்கொள்கிறார். இந்தச் சூழலில், அபிஷேக் (நிரஞ்சன்) என்ற முன்பின் தெரியாத இளைஞன் சீதாவின் காரில் லிப்ட் கேட்டு இணைகிறான்.

வழியில் பலரை சந்திக்கிறார்கள். சமையல்கலை மாநாடு நடக்கும் இடத்திற்கு செல்லும் போது திடீர் தீவிபத்து ஏற்படுகிறது. அதில் சீதா உயிர் பிழைக்கிறாள். தான் உயிரோடு இருப்பதற்கு தான் வரும் வழியில் தன்னை இடைமறித்து நிறுத்தி பேசியவர்கள் தான் காரணம் அவர்களை சந்தித்து நன்றி சொல்ல போவதாக மீண்டும் புறப்படுகிறாள்.

ஆக அபிஷேக் எதற்காக சீதாவுடன் பயணிக்க வேண்டும்? இந்தப் பயணத்தின் இடைமறிக்கும் ரவுடி கிரி (அர்ஜுன் சர்ஜா) மற்றும் பவன் (துருவ் சர்ஜா) ஆகியோரின் பின்னணி என்ன? இறுதியில் சீதாவின் திருமண ஆசை என்னவானது? இதுதான் படத்தின் கதை.

பிளஸ் பாயிண்ட்ஸ்:

  • ஐஸ்வர்யா அர்ஜுன்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், நடனம், நடிப்பு, கவர்ச்சி எனத் தந்தை கொடுத்த வாய்ப்பைத் திறம்படப் பயன்படுத்தியுள்ளார். ஒரு முதிர்ச்சியான நடிப்பை வழங்க முயன்றிருக்கிறார்.

  • நடிப்பும் பாத்திரங்களும்: நாயகன் நிரஞ்சன் தனது பங்கைக் கச்சிதமாகச் செய்துள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சுறுசுறுப்பு காட்டுகிறார். அர்ஜுனின் கௌரவத் தோற்றம் படத்திற்கு வலு சேர்க்கிறது. பிரகாஷ் ராஜ் மற்றும் சத்யராஜ் போன்ற ஜாம்பவான்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.

  • ஆரம்பக் காட்சிகள்: படத்தின் முதல் பாதியில் நாயகியின் கதாபாத்திரத்தை விளக்கும் அந்த ’20 செகண்ட் லைஃப்’ கான்செப்ட் சுவாரசியமாகத் தொடங்குகிறது.

மைனஸ் பாயிண்ட்ஸ்:

  • இழுவையான திரைக்கதை: ஒரு நல்ல கருத்தை (Concept) இயக்குநர் அர்ஜுன் கையில் எடுத்திருந்தாலும், அதை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதில் சறுக்கியுள்ளார். முதல் பாதி சுமார் ரகமாக இருந்தாலும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக நகர்ந்து சலிப்பைத் தருகிறது.

  • தொழில்நுட்பக் கோளாறுகள்: படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள AI தொழில்நுட்பக் காட்சிகள் மற்றும் VFX மிக மோசமாக உள்ளன. ஆடியன்ஸை மிகவும் அலட்சியமாக நினைத்து இப்படிச் செய்துள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  • இசையும் எமோஷனும்: அனுப் ரூபன்ஸின் பாடல்கள் சுமார்தான், ஆனால் பின்னணி இசை பழைய படங்களின் சாயலிலேயே இருக்கிறது. எந்தவொரு எமோஷனல் காட்சியும் ரசிகர்களின் மனதோடு ஆழமாக ஒட்டவில்லை. துருவ் சர்ஜாவின் என்ட்ரிக்குக் கொடுக்கப்பட்ட ‘பில்ட்-அப்’ தேவையற்ற ஒன்றாகத் தெரிகிறது.

தொழில்நுட்பக் குழு:

ஜி. பாலமுருகனின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம் சேர்க்கிறது. ஆனால் எடிட்டிங்கில் இன்னும் கத்தரி போட்டிருக்கலாம். இயக்குநர் அர்ஜுன் ஒரு நல்ல கதைக் கருவை (Line)த் தேர்ந்தெடுத்தும், அதைச் சுவாரசியமான திரைக்கதையாக மாற்றுவதில் கோட்டை விட்டுவிட்டார்.

தீர்ப்பு:

மொத்தத்தில், இந்த ‘சீதா பயணம்’ ஐஸ்வர்யா அர்ஜுனின் சிறந்த நடிப்புக்காகவும், ஒரு மெல்லிய கருத்திற்காகவும் ஒருமுறை பார்க்கலாம். ஆனால், சரியான எமோஷன் மற்றும் விறுவிறுப்பு இல்லாததால் இந்தப் பயணம் கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது.

மதிப்பெண்: 2.5 / 5                                                                                                                                                       

error: Content is protected !!